உயிரைக் கொல்லும் ஆன்லைன் ரம்மி; உண்மையை தெரிஞ்சுகிட்டு உஷாரா இருங்க...!
கையில் சீட்டுக்கட்டு, சூதாடும் இடம் என்று கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால் ஆன்லைன் ரம்மியை பலரும் சூதாட்டம் என்று உணராமலே அந்த குழியில் விழுகின்றனர், உயிரையும் விடுகின்றனர்.
சூதாட்டம் - இந்த பெயரைக் கேட்டாலே அது ஒரு தவறான சொல், வாழ்விற்குக் கேடு தரும் சொல் என்பதை மறக்க செய்து பலரின் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கத் துங்கியிருக்கிறது ஆன்லைன் ரம்மி.
கையில் சீட்டுக்கட்டு, சூதாடும் இடம் என்று கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால் ஆன்லைன் ரம்மியை பலரும் சூதாட்டம் என்று உணராமலே அந்த குழியில் விழுகின்றனர்.
"ரம்மி விளையாட வாங்க கோடீஷ்வரர் ஆகுங்க..." என்று இன்டர்நெட் முழுவதும் விளம்பரம், இதில் பணத்தை போட்டு ஏமார்ந்தது மட்டுமின்றி உயிரையும் மாய்த்து கொள்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
பணமிருப்பவர்களை விட அன்றாட வாழ்க்கைக்கு பாடுபடும் நடுத்தர வர்கத்தையே இந்த ஆன்லைன் ரம்மி குறிவைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக ஆன்லைன் ரம்மியில் பணத்தை போட்டு ஏமாந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணிமுடிந்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வை தொடர்ந்து பலரும் இதனால் தற்கொலை செய்துகொண்டனர்.
இது குறித்து பேசிய சைபர் கிரைம் நிபுணர் சண்முகவேல் சங்கரன்,
"ஆன்லைன் ரம்மியை ‘கேம் ஆஃப் ஸ்கில்’ அடிப்படையில் அரசு அனுமதிச்சு இருக்காங்க, அதாவது லாட்டரி போல் லக்கில் ஜெயிப்பது அல்ல நமது திறமையைக் கொண்டு விளையாடுவதுனு வகைப்படுத்தி இருக்காங்க. ஆனா உண்மை அது இல்ல, இது ஒரு லூப்ஹோல். இந்த ஆன்லைன் ரம்மியில் நெட் பேங்கிங் மூலம் ஈசியாக பணம் போட முடிகிறது, குறைந்த பணம் போட்டு ஆடும் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியும் கிடைக்கிறது அதனால் அந்த கேமிங் சுழலுக்குள் மாட்டிக்கொள்கின்றனர்," எனக் கூறுகிறார்.
ஆன்லைன் ரம்மியில் நீங்கள் பணம் போட்டு ஆடுவது மற்ற உறுப்பினர்களோடு அல்ல இயந்திரங்களோடு தான்னு பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது முதல் இரண்டு ஆட்டத்தில் உங்களை ஜெயிக்கவிட்டு, மீண்டும் பணம் போட வைப்பது, அதன் பின் தோல்வி அடையச்செய்வது. விட்ட பணத்தை பிடிக்கும் நோக்கில் மீண்டும், மீண்டும் பணத்தை போட்டு இழக்கின்றனர். இதுவே இந்த விளையாட்டின் அம்சமாக இருக்கிறது, என்கின்றனர்.
"வெளிநாட்டில் ஆன்லைன் சூது, கேசினோக்கள் லீகலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் அங்கு அதற்கு ஏற்றார் போல் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் அது போன்று ஏதும் இல்லை, அரசு தலையிட்டு இதைத் தடை செய்தால் மட்டுமே இதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்கிறார்," சண்முகவேல்.
ஒரே இரவில் PubG போன்ற பில்லியன் டாலர் நிறுவனத்தை நம்மால் தடை செய்ய முடியும் என்றால் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் இதை ஏன் தடை செய்ய முடியவில்லை என கேள்வியும் எழுப்புகிறார் இவர்.
ரூ.10000, ரூ.20000 மட்டுமில்ல ரூ.25 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரைக்கும் இந்த விளையாட்டில் மக்கள் இழந்து உள்ளனர். ஆன், பெண் பாலினம், வயதுனு எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா மக்களையும் அடிமை ஆக்கியிருக்கு இந்த விளையாட்டு.
நான் ரம்மி விளையாட்டில் இவ்வளவு தொகை வென்றேன், லட்சாதிபதி ஆனேன் என வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் போலியாகவே இருக்கிறது. Quora, Mouthshut போன்ற தளத்தில் இந்த ஆனலைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததை பற்றி அதிகம் பதிவிட்டுள்ளனர். இந்த விளையாட்டு தளத்தில் கொடுக்கப்படும் கஸ்டமர் கேர் எண் சாட் எதுவும் உங்களுக்கு சரியான பதிலை தருவதில்லை, இதில் கொடுக்கப்படும் முகவரிகள் கூட போலியாக உள்ளது என பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீங்கள் வெற்றிபெற்ற பணத்தை எடுக்கலாம் என்று நினைத்தாலும் அது உங்கள் கையில் வந்து சேர்வதில்லை; அது ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்லவும் கட்டமைப்புகள் இல்லை.
இந்தியாவில் சுமார் 15 ரம்மி விளையாட்டுத் தளங்கள் உள்ளதாம், உள்ளே நுழைந்ததுமே ரூ.2,500 போனஸ் கொடுக்கின்றனர். காசு போடாமலே முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்று ரூ.5000 ஆயிரம் கிடைக்கிறது ஆனால் உங்களுக்கு கடைசி வெற்றி அதுவாகவே இருக்கும். நீங்கள் அதுக்கு பிறகு உங்கள் பையில் இருந்து போடும் எந்த பணமும் திரும்ப வராது. இந்த சந்தையில் 2000 கோடி ரூபாய் வரை புழங்குகிறது. இது இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு தான் இங்கு அதிகம் உள்ளது.
சமீபத்தில் நடந்த மோசடிகள்
ஆந்திர பிரதேசத்தில் வங்கி ஊழியர் ஒருவர் இதில் 1.50 கோடி ரூபாய் கையாடல் செய்து ஜெயிலில் இருக்கிறார், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ரூ.20,000 திருடி விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறான். 12 வயதுச் சிறுவன் பெற்றோரின் ஐடியையும், கிரெடிட் கார்டையும் பயன்படுத்தி விளையாடி, ரூ.90,000 கோட்டை விட்டிருக்கிறான்.
"நமது நேரத்தை பொழுது போக்க, ஆன்லைன் இன்டர்நெட் என்று போகாமல், குடும்பத்தினருடன் இணைந்து பேசுவது, முன்பு போல் ஒன்றாக அமர்ந்து போர்ட் விளையாட்டு விளையாடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் ஆன்லைனில் நம் நேரத்தை செலவிடுவதை குறைக்கலாம். ஸ்ட்ரெஸை குறைக்க ஆன்லைன் கேமை நாடினோமானால் அது இன்னும் பெரிய ஆபத்திலே நம்மை சேர்க்கும்," என்கிறார் சண்முகவேல்.
இந்த விளையாட்டை தடை செய்ய பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி, உங்கள் பணம் போட்டு விளையாடி அதிகப்பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரப்படுத்தப்படும் எந்த ஒரு விளையாட்டுமே ஆபத்தானது தான்.
ரம்மி, கிரிக்கெட் பெட்டிங் போன்ற அனைத்து விளையாட்டுகளிலும் உஷாராக இருக்க வேண்டும். அரசு இதை சீர் செய்ய வேண்டும் என்றாலும், நாம் வேர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
உக்ஷாராக இருங்கள் மக்களே...!