'ஆன்லைன் வர்த்தகர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும்' - பியூஷ் கோயல் விளாசல்!
“ஒரு நாடு எதனை விரும்பும் என்றால் குடிமக்களிடம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளும் வர்த்தகத்தைத்தான். மக்களுக்கு மட்டுமல்ல மற்ற வர்த்தகர்களுக்கு இடையேயும் நியாயமான போட்டி இருக்க வேண்டும்.”
இந்தியாவில் இ-காமர்ஸ் வர்த்தகம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும். வாடிக்கையாளர்களை வேட்டையாடும் விலைகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட நியாயமற்ற வர்த்தகம் செய்யக் கூடாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அடைந்துவரும் அசுர வளர்ச்சி ஒரு சாதனை என்பதை விட "கவலைக்குரிய விஷயம்" என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 'இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலனில் இ-காமர்ஸ் தாக்கம்' குறித்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் பேசிய கோயல் இவ்வாறு தெரிவித்தார்.
அதில், பியூஷ் கோயல் கூறியதாவது,
“இ-காமர்ஸின் இந்த அசுர வளர்ச்சியால் நாம் மிகப்பெரிய, சமூக சீர்குலைவை ஏற்படுத்தப் போகிறோமா? இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சந்தையில் பாதி இ-காமர்ஸ் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக மாறும் என்பதை நான் பெருமையாகப் பார்க்கவில்லை. இது கவலைக்குரிய விஷயம்.“
உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் உள்ளூர் கடைகள் போன்ற பாரம்பரிய சில்லறை வணிகத் துறைகளில் மின்-வணிகத்தின் விளைவுகள் பற்றி தொடர்ந்து மதிப்பிட வேண்டியுள்ளது. ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தற்போது உணவு மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில் இ-காமர்ஸ் வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் ஷாப்பிங் மக்களிடையே மோசமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். ஆன்லைன் ஷாப்பிங்கின் வசதியும், OTT தளங்களின் ஆதிக்கமும் இணைந்து, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க ஊக்குவிக்கும், இதனால் சமூக தொடர்புகள் குறையும். ஆன்லைனில் சாப்பிட்டபடியே ஓடிடியில் படம் பார்ப்பது ஆபத்தான போக்கு. இப்படியே போனால் வீட்டுக்குள்ளேயே முடங்கும் மக்களை கொண்ட நாடாக மாறிவிடுவோம்.
இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போகிறோம் என்று அமேசான் கூறும்போது, நாம் ஆஹா ஓஹோ என அதை நினைத்து கொண்டாடுகிறோம், இந்த பில்லியன் டாலர்கள் இந்தியப் பொருளாதாரத்தை வளர்க்க எந்தவொரு பெரிய சேவைக்காகவோ அல்லது முதலீட்டிற்காகவோ வரவில்லை அவர்கள் பேலன்ஸ் ஷீட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய இங்கு வந்து முதலீடு செய்கிறார்கள் என்ற அடிப்படை விஷயத்தை நாம் மறந்து விடுகிறோம்.
அந்த நஷ்டம் எங்கிருந்து அவர்களுக்கு வருகிறது. ஆயிரம் கோடிகளை தொழில் நிபுணர்களுக்கு சம்பளமாகவும் போனஸாகவும் இன்னபிற சலுகைகளாகவும் அவிழ்த்து விடுவதனால்தான். யார் இந்த தொழில் நிபுணர்கள் நான் அறிய ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு எதிராக எந்த ஒரு வழக்காடலும் விவகாரமும் தலைதூக்காமல் இருக்க சார்ட்டர்ட் அக்கவுண்டட்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் டாலர்களில் கொட்டி அழுகின்றனர்.
இந்தியாவில் ஆன்லைன் நிறுவனங்கள், 15.8 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளனர், இதில் பெண்களுக்கு 3.5 மில்லியன் வேலைகள் கிடைத்துள்ளன, சுமார் 1.76 மில்லியன் சில்லறை வணிக நிறுவனங்கள் இ-காமர்ஸ் செயல்பாட்டில் பங்கேற்கின்றன. இது சாதகமான அம்சங்கள்.
சிறிய வர்த்தகர்கள் மற்றும் பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. நாம் அன்னிய முதலீட்டை பெருக்க நினைக்கிறோம் என்பது உண்மைதான். புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கிறோம். உலகின் சிறந்தவை நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை அதனால்தான் ஆன்லைன் வர்த்தகத்தை நான் எதிர்க்கவில்லை.
ஆனால், ஒரு நாடு எதனை விரும்பும் என்றால் குடிமக்களிடம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளும் வர்த்தகத்தைத்தான். மக்களுக்கு மட்டுமல்ல மற்ற வர்த்தகர்களுக்கு இடையேயும் நியாயமான போட்டி இருக்க வேண்டும். எந்த அன்னிய வர்த்தக நிறுவனங்களாகட்டும் இந்நாட்டு மண்ணின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். அதனால், விரைவில் புதிய இ-காமர்ஸ் கொள்கையை வகுத்தெடுக்கப் போகிறோம்.
எந்தவொரு FTA ஆனது நமது விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை, மீனவர்கள், MSME-கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் நலனைப் பாதுகாப்பதையும், இந்தியாவின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டு, நமது போட்டியினருக்கும் சமமான வாய்ப்பையும் வழங்குவதையும் நாடு உறுதி செய்யும். நாங்கள் அவசர அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்யவில்லை, இந்தியாவின் நலன்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறோம்.