தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்’களுக்கு பயிற்சி மற்றும் நிதி வாய்ப்பு - 'MudhalVC' திட்டம் தொடங்கிய சுரேஷ் சம்பந்தம்!
கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், ஐடியா நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்களுக்கு நிதிஅளித்து ஊக்குவிக்கும், ’முதல்விசி’ எனும் திட்டத்தை துவக்கியுள்ளார்.
Kissflow நிறுவனத்தின் நிறுவனரும், சாஸ்பூமி இணை நிறுவனருமான, சுரேஷ் சம்பந்தம், ஐடியா நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்களுக்கு நிதி அளித்து ஊக்குவிக்கும், முயற்சியாக ‘MudhalVC’ எனும் திட்டத்தை துவக்கியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் பெரிய அளவிலான தொழில்முனைவு முயற்சியை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது முதல்விசி திட்டம். இது, சுரேஷின் ஸ்டார்ட் அப் வளர்ச்சி திட்டமான ’ஐடியா பட்டறை’ (Idea Pattarai) வாயிலாக, ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் நிறுவனர்களை ஊக்குவிக்க உள்ளது. அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப்'களுக்கான பள்ளியாக விளங்கும் அமெரிக்காவின் ஒய்காம்பினேட்டர் போல இந்த திட்டம் செயல்படும், என்று ‘முதல் விசி’-யை அறிமுகப்படுத்தும்போது தெரிவித்தார் சுரேஷ் சம்பந்தம்.
முதல் விசி செயல்பாடுகள் என்ன?
பாரம்பரிய முதலீட்டாளர்களிடம் இருந்து மாறுபட்டு, முதல்விசி, நிறுவனர்கள் நல்ல ஐடியா மற்றும் குழுவை கொண்டிருக்கும் பட்சத்தில் முறையான கோரிக்கை வடிவம் இல்லாத நிலையிலும் அவர்களுக்கு வழிகாட்டத் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார் சுரேஷ் சம்பந்தம்.
முதலீடு வழங்குவதற்கு முன், தொழில்முனைவோருக்கு தகுந்த பயிற்சி அளிக்கும் அணுகுமுறையை முதல்விசி நிறுவனம் பின்பற்ற உள்ளது. முதலில் பயிற்சி அளித்து பின்னர் முதலீடு அளிக்கும் அணுகுமுறை அடிப்படையில், முதலீட்டை பயன்படுத்தும் முன் தொழில்முனைவோர் அதற்குத் தயாராக இருப்பதை நிறுவனம் உறுதி செய்யும் என்றார்.
”ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு அளிக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 24 மாதங்களில் ஐடியா பட்டறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பயிலறங்குகளை நடத்தியுள்ளது. இதன் மூலம் 75க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 15 ஸ்டார்ட் அப்களுக்கு முதல்விசி ஏற்கனவே முதலீடு வழங்கியுள்ளது. முதல்விசி அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ.125 கோடி அளவில் முதலீடு செய்ய உள்ளது,” என்றார்.
ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்களில் மட்டும் முதலீடு செய்ய உள்ளோம் என்றார்.
”மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஐடியாக்களை கொண்டுள்ள நிறுவனர்கள் பல நேரங்களில் ஆரம்ப நிலையில், முதலீடு பெற முடியாமல் தடுமாறுகின்றனர். சரியான திசையில் வழிகாட்டுதல் மட்டும் தேவைப்படும் வகையில் நல்ல ஐடியாக்கள் கொண்ட நிறுவனர்களை சந்திக்கும் அனுபவம் பெற்றுள்ளேன். இத்தகைய நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்து வழிகாட்டுவதே ஐடியா பட்டறையின் நோக்கம்,” என்று ’முதல்விசி’ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் கூறினார்.
முதல் விசி ஏற்கனவே, உணவு நுட்பம், மின் வாகனங்கள், சுகாதார நுட்பம், பயோடெக் உள்ளிட்ட பிரிவுகளில் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளது. அமுரா, புக்கிங்பீ, மீன்சட்டி, மஷ்ரூம்மாமா, சோஷியல் கேலரி, இன்ஸ்பெக்ஷன் ஒன், பேட் பாய், கரெக்ட்மேட், டிரேஷ்பாடிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு பெற்றுள்ளன.
பேட்பாய் மின்வாகனம் அறிமுகம்
முதல் விசி முதலீடு செய்துள்ள ’பேட்பாய்’ (Bad Boy) ஸ்டார்ட் அப், துடிப்புமிக்க இளைஞர்களுக்கான புதுமையான வடிவமைப்பு கொண்ட மின்வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
சூப்பர் பைக் மற்றும் பவர் கார் இரண்டையும் இணைக்கும் வடிவமைப்பு கொண்ட இந்த வாகனம் தனியே பயணிக்கும் மற்றும் துணையுடன் பயணிக்கும் என இரண்டு மாதிரிகளை கொண்டுள்ளது. ஃபார்முலா ஒன் கார் மற்றும் சூப்பர் பைக் தன்மை கொண்ட புதிய வாகனத்தை அளிக்கும் நோக்கத்துடன் இந்த வாகனத்தை உருவாக்கியதாக, பேட்பாய் இணை நிறுவனர் கோபிராஜா செல்வகுமார் கூறினார்.
இந்த ‘பேட்பாய்’ காரின் மாதிரியை அறிமுகம் செய்துவைத்த சுரேஷ் சம்பந்தம், வடிவமைப்பு, நீடித்த தன்மை மற்றும் செயல்திறன் கொண்ட தனிநபர் போக்குவரத்தில் புதுமையான இந்த முயற்சியை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பதாக தெரிவித்தார். 2024-இல் இது சந்தையில் விற்பனைக்கு வர செயல்படப்போவதாகவும் தெரிவித்தார்.
Edited by Induja Raghunathan