தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பில் மருத்துவ குழாய் தயாரிப்பு ஆலை அமைக்க 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
தமிழ்நாட்டில் மருத்துவ குழாய்கள் தயாரிப்பு செய்வதற்கான உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Lubrizol மற்றும் Polyhose நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. ரூ.200 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைய உள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ குழாய்கள் தயாரிப்பு செய்வதற்கான உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லூப்ரிசால் மற்றும் பாலிஹவுஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. ரூ.200 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைய உள்ளது.
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொழில் துவங்க மற்றும் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களையும் கவர்ந்திழுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய முதலீடு அமைந்துள்ளது என மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், Lubrizol மற்றும் Polyhose நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மருத்துவ நுட்பத்துறையில் இது முக்கியமான கூட்டு முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை மருத்துவ நுட்பத்தில் முன்னோடி மாநிலமாக்குவதில் இத்தகைய ஒப்பந்தங்கள் உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மின்னணு, பொறியியல் மற்றும் சுகாதார நலன் துறைகளில் மாநிலத்தின் ஆற்றலை தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய ஆலை அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இத்தகைய தரம் வாய்ந்த கூட்டு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள உறுதி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டு முயற்சி மூலம் இந்த ஆலை ரூ.200 கோடி முதலீட்டில் அமைகிறது. நியூரோவாஸ்குலர் மற்றும் இதய நலன் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் அதிக தரம் வாய்ந்த மருத்துவ குழாய்களை இந்த ஆலை தயாரிக்கும். அடுத்த ஆண்டு இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்த ஆலை முக்கியமாக திகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan