மதுரையில் தொடங்கி பிரதமர் அலுவகம் வரை சென்ற அமுதா ஐஏஎஸ்!
பார்க்க சாதாரண பெண்மணியைப்போல் காட்சியளிக்கும் அமுதா ஐ.ஏ.எஸ் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
பார்க்க சாதாரண பெண்மணியைப்போல் காட்சியளிக்கும் அமுதா ஐ.ஏ.எஸ் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். தனிப்பட்ட திறனால் சட்ட மீறல்கள்களைத் தடுத்து, சமூக நலனில் அக்கரையுள்ள அதிகாரியாகவும் வலம்வரும் அவரின் செயல்பாடுகள் இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு முன்மாதிரி.
சென்னை மழை வெள்ள பாதிப்பு, அதற்குப் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்றவற்றில் எந்த ஆண் அதிகாரியும் செய்யத் துணிந்திடாத காரியங்களைச் செய்திருந்தாலும், இவர் வெளிச்சத்துக்கு வந்தது என்னவோ 2018ல் மறைந்த முதலமைச்சர் மு கருணாநிதி இறுதிச் சடங்கின் போதுதான். பல தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கலந்துகொண்ட அந்த இறுதிச்சடங்கினை நேர்த்தியாக ஒருங்கிணைத்ததை மக்கள் டிவி நேரலையில் கண்டபோது அவர் யார் எனத் தேடத் தொடங்கினர்.
அமுதா ஐஏஎஸ் யார் என தேடிய பலருக்கும் அவரின் அற்புதமான தலைமைத்துவப் பணிகளும், நேர்மையான செயல்பாடுகளும் அப்போது தெரியவந்தது. அதன் பின் அவரைத் தொடர்ந்தது, விருதுகளும், பாராட்டுகளும் மட்டுமே. தற்போது அதன் உச்சமாய் அவருக்குக் கிடைத்துள்ள; பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் என்ற உயர் பதவி.
அமுதா ஐஏஎஸ் உடன் நேர்காணல் நடத்தி அவரைப் பற்றி யுவர்ஸ்டோரி தமிழ் 2016ம் ஆண்டே வெளியிட்டிருந்தது. அதில் இருந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஐ.ஏ.எஸ். கனவுக்கான விதை விதைத்தது யார்?
எனது சொந்த ஊரான மதுரையில், கேந்திரய வித்யாலயா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அப்போது எனக்கு வயது 10 இருக்கும். என் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்பதால் அவருக்கான உதவித்தொகையை பெற என் பாட்டியுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தேன். அப்போது எனக்குள் எழுந்த கேள்வி தான் யார் இந்த கலெக்டர்? என் சந்தேகத்தை உடனடியாக பாட்டியிடம் கேட்டு அதற்கான விடையை என் மனதில் ஆழப் பதிந்து கொண்டேன்.
“கலெக்டர் அரசருக்கு ஒப்பானவங்க, மக்களுக்கு நல்லது செய்றவங்கன்னு சொன்னாங்க...” இதுவே ஐஏஏஸ் படிக்க பாட்டி போட்ட விதை, என்றார்.
அடுத்ததாக ஐஏஎஸ் கனவிற்கு இவருக்கு மேலும் அடித்தளம் அமைத்தது 13 வயதில் சென்ற மலையேற்றப் பயிற்சி. இமயமலைக்கு மலையேறு பயிற்சிக்கு சென்ற போது இவர் சந்தித்த ஐஏஎஸ் அதிகாரிகள்தான் தனது வாழ்வில் ஏற்றத்தை பெற உந்துதலாக இருந்ததாக தெரிவித்தார்.
“அப்போதுதான் நானும் கலெக்டர் ஆவேன் என்று உறுதியாகச் சொன்னேன்.” அதிலிருந்து ஆரம்பித்த உத்வேக வாழ்க்கை 1994 ஆம் ஆண்டில் கலெக்டர் ஆகும்வரை ஓயவில்லை.
மதுரையில் இளநிலை விவசாயம் முடித்த கையோடு 1992ம் ஆண்டு ஐபிஎஸ் எனப்படும் இந்திய காவல் பணிக்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். எனினும் ஐ.ஏ.எஸ்-க்கு மீண்டும் முயற்சிக்க அவரது தந்தை கூறிய அறிவுரையால் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதி அதிலும் முதல் முயற்சியிலேயே வென்று 1994ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார் அமுதா.
அரசு மற்றும் உயர்பதவிகளில் பெண்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?
பெண்கள் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர், குறிப்பாக முன்பெல்லாம் ஆசிரியர், மருத்துவர், செவிலியர் எனக் குறிப்பிட்ட சில பணிகள் பெண்களுக்கானதாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி பெண்கள் நுழையாத துறையே இல்லை என்ற நிலையை அடைந்து விட்டோம் என்பது உத்வேகம் தந்தாலும் இது போதுமானதல்ல.
பெண்கள் எல்லாத்துறையிலும் நுழைந்து விட்டாலும் பெயரளவில் இரண்டு, மூன்று பேர் மட்டுமே உள்ளனர், இந்த நிலை மாறி பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.
அதனாலேயே நான் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களுக்கு அரசுத்துறையில் இருக்கும் பலன்களை எடுத்துக் கூறி அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறேன். அதோடு அரசு சம்பளம் நிலையானது என்பதோடு, சமுதாயத்திற்கு பணியாற்ற அரசு நமக்கு ஊதியம் தருகிறது என்ற பெருமையும் உண்டு.
பணியில் சந்தித்த சவால்கள்?
நான் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற உடன் எனக்கு முதலில் வழங்கப்பட்ட பணி கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் பொறுப்பு, அதன் பின்னர் செங்கல்பட்டுக்கு மாறுதல் கிடைத்து அங்கு மணல் கொள்ளை மிகப்பெரிய பிரச்னை. மணற்கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது ஒரு லாரி என்னை தாக்கிவிட்டு சென்றுவிட்டது, ஆனாலும் நான் ஓய்ந்து விடவில்லை.
தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மிகச் சவாலானது. தருமபுரி மாவட்டம் அடிப்படையில் பெண்கல்வியில் பின்தங்கிய மாவட்டம், அதே போன்று பெண் சிசுக் கொலைகள், குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் இடமாகவும் அது இருந்தது. அதற்கு தீர்வாக இவர் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
இடம் மாறுதல்கள், பணி மாறுதல்கள் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு அளிக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பதில் அமுதாவிற்கு நிகர் யாரும் இல்லை. நிர்வாகத்திறன் மட்டுமல்ல சட்டசபை தேர்தலில் உதவி தேர்தல் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி நல்ல முறையில் தேர்தலை நடத்திய பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்.
அமுதா தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மசூரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் துணிச்சலாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
பெண் முன்னேற்றத்திற்கு எது தடைகல்?
பெண்கள் உயர்பதவியை அடைவதில் இருக்கும் தடைகல் சிறுவயது முதலே அவர்களுக்கு அளிக்கப்படும் தவறான வழிகாட்டுதலே, என்கிறார்.
நம் சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் ஆண்களுக்கு இருக்கும் அனைத்து அம்சங்களும் பெண்களிடமும் உள்ளது உடல் மற்றும் மனரீதியில் இருவரும் சமமே என்பதை பெண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இந்த பழக்கம் நம்வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும், என்கிறார்.
பெற்றோர் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை இருவரையும் பாலின பாகுபடுகளின்றி சமமாக நடத்த வேண்டும், அடுத்தபடியாக பெண்களுக்கு தைரியத்தை ஊட்டும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. பெரும்பாலான நேரத்தை குழந்தைகள் பள்ளியில் செலவிடுவதால் அவர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது.
மதுரையில் தொடங்கி இன்று டெல்லி வரை சென்றுள்ள அமுதா ஐஏஎஸ்-ன் பணி மேலும் சிறப்புற வாழ்த்துவோம்...
தகவல் உதவி: 'சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்' - அமுதா ஐ.ஏ.எஸ்.