Chandrayaan 2 விண்கலத்தில் இருந்து ’லேண்டர் விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்தது!
சந்திரயான் 2 செயற்கைக் கோளிலிருந்து நிலவை ஆய்வு செய்யக்கூடிய லேண்டரை பிரிக்கக்கூடிய பணியை இஸ்ரோ இன்று மதியம் 12:52 மணிக்குத் தொடங்கியது.
நிலவை ஆய்வு செய்வதற்காக 3850 கிலோ எடை கொண்ட சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. நிலவை நெருங்கிய நிலையில், தற்போது கடைசி சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் ஆர்பிட்டரிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதன் பின் கடந்த 20ம் தேதி காலை 9.30 மணியளவில் நிலவின் வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது . இந்நிலையில், சந்திரயான் 2 செயற்கைக் கோளிலிருந்து நிலவை ஆய்வு செய்யக்கூடிய லேண்டரை பிரிக்கக்கூடிய பணியை இஸ்ரோ இன்று மதியம் 12:52 மணிக்குத் தொடங்கியது.
நிலவில் இருந்து 119 கிமீ இல் இருந்து 127 கிமீ தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 சுற்றி வருகிறது. அந்த ஆர்பிட்டரிலிருந்து 1,471 கிலோ எடையுள்ள லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக இன்று பிரிந்துள்ளது. லேன்டர் விக்ரமை பிரிக்கும் இந்த பணியை பெங்களூர் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெற்றிகரமாக முடித்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
நாளை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் விக்ரம் லேண்டர் தரையிறங்க செயல்படுத்தப்பட வேண்டிய இரண்டு முக்கியமான பணிகள் நடைபெற இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
படிப்படியாக நிலவின் சுற்றுவட்ட பாதையிலிருந்து முன்னேறியபடியே, செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 7ம் தேதிக்கு பிறகு, லேண்டரில் உள்ள 27 கிலோ எடையுள்ள பிரக்யான் என்னும் ரோவர் மூலம் நிலவில் ஆய்வு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.