சோலார் பேனல்களை சுத்தம் செய்யும் ரோபோக்கள் உருவாக்கும் கோவை நிறுவனம்!
2017 ல் நிறுவப்பட்ட தூய்மை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான சொலாவியோ லேப்ஸ் சோலார் பேனல்களை சுத்தம் செய்வதற்கான மூன்று தானியங்கி தூய்மை பாட்கள் மற்றும் மோட்டாரால் இயங்கும் கையடக்க சாதனத்தை வழங்குகிறது.
இன்றைய உலகில் மக்கள் நீடித்த நிலையான வாழ்வியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பசுமை மாற்றுகளுக்கு, குறிப்பாக சூரிய மின்சக்திக்கு மாறி வருகின்றனர். இந்திய அரசும் 2022ல் 100 கிகாவாட் சூரிய மின்சக்தி கொள்ளவை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
சூரிய மின்சக்தி திறனை அதிகரிப்பதோடு, சூரிய மின்சக்தி தகடுகளை சுத்தம் செய்து முறையாக பராமரிப்பதும் அவசியம். இதை தான் கோவையைச்சேர்ந்த சோலாவியோ லேப்ஸ் (Solavio Labs) ஸ்டார்ட் அப் செய்கிறது.
2017ல் சூரஜ் மோகன் மற்றும் பிரசாந்த் கோயல் நிறுவபப்ட்ட இந்நிறுவனம், உயர் மின் உற்பத்தியை உறுதி செய்வதற்காக சூரிய மின் தகடுகளை சுத்தம் செய்யும், தானியங்கி சோலார் பேனல் பாட்களை உற்பத்தி செய்து வருகிறது.
“பெரும்பாலான வீடுகளில் நுழைந்திருக்கும் இல்லத்தை சுத்தம் செய்யும் ரூம்பா ரோபோ தான் எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது. சூரிய மின் தகடுகளை வேகமாகவும், செயல்திறனுடனும் சுத்தம் செய்ய தானியங்கி ரோபோக்களை உருவாக்கினோம். தடைகள், மோதல் மற்றும் தற்செயலான கட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் எங்களுடைய சென்சார் அல்கோரிதத்துடன் இந்த பாட்கள் செயல்படுகின்றன,” என்கிறார் சோலாவியோ லேப்ஸ் இணை நிறுவன சூரஜ் மோகன்.
செயல்திறன் உறுதி
சூரிய மின் தகடுகளில் காலப்போக்கில் புழுதி சேருவதால் அவற்றின் செயல்திறன் 40 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது. இது சூரிய மின்சக்தி அமைப்பின் பலனையும் பாதிக்கிறது.
“சூரிய மின் தகடுகளை சுத்தம் செய்ய உள்ள தீர்வுகள் எல்லாம் தண்ணீரை சார்ந்திருக்கின்றன. வைபர்கள், மோப்பர்கள், பாஷர்கள் என அமையும் இவை ஒரு தகட்டிற்கு மூன்று லிட்டர் வரை தண்ணீரை குடிக்கின்றன,” என்கிறார் சூரஜ்.
தண்ணீர் வீணாவது தவிர, மனிதர்களைக் கொண்டு செயல்படும் முறை செலவு மிக்கது மற்றும் தொழிலாளர்களுக்கு ஆபத்தானது.
சோலாவியோவின் பாட்கள் கூரை உள்ளிட்ட இடத்தில் செயல்படக்கூடியது. சொலாவியோ லேப்ஸ், சோலார் பேனல்களை சுத்தம் செய்வதற்கான மூன்று தானியங்கி தூய்மை பாட்கள் மற்றும் மோட்டாரால் இயங்கும் கையடக்க சாதனத்தை வழங்குகிறது.
“காப்புரிமை பெற்ற எங்கள் நான்கு தயாரிப்புகளை, ஐஓடி டேஷ்போர்டு, இயந்திர கற்றல் அல்கோரிதம் ஆகியவற்றோடு வர்த்தகமயமாக்கி இருக்கிறோம். இந்த பாட்கள் 10 ஆண்டு செயல்படக்கூடியவை,” என்கிறார் சூரஜ்.
இதில் உள்ள பிரஷ்கள் காப்புரிமை பெற்ற பிரிஸ்டில் தொழில்நுட்பம் கொண்டவை மற்றும் யூவி கதிர்களை எதிர்க்க கூடியவை.
இந்த நிறுவனம், சூரிய மின்சக்தி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா தவிர, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளது.
வர்த்தக மாதிரி
பாட்களை விற்பனை செய்வது தவிர, இந்த சேவையை சந்தா அடிப்படையிலும் நிறுவனம் வழங்கி வருகிறது. செயல்முறை குத்தகை அடிப்படையில் இது செயல்படுகிறது.
கடந்த ஆண்டு 70 பாட்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
“எங்களுக்குக் கிடைத்துள்ள ஆர்டர்கள் மற்றும் விற்பனை அடிப்படையில், இந்த ஆண்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து 1,000 பாட்களை விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம்,” என்கிறார் சூரஜ்.
டாடா பவர் சோலா, அதானி சோலார், ரிபெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நிறுவனம் வாடிக்கையாளர்களாகப் பெற்றுள்ளது. வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர் நிறுவனங்களை கொண்டுள்ளது.
இந்த சோலார் சந்தை 2025 ஆண்டு வாக்கில் 40 சதவீதம் வளர்ச்சி காணும் என மோடார் இண்டெலிஜன்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது. நொய்டாவைச்சேர்ந்த Inoviea Consulting and Services நிறுவனம் இந்த பிரிவில் போட்டியாக உள்ளது.
உற்பத்தி, வளர்ச்சி மற்றும் ஆய்வு இலக்குகளுக்காக பல கட்டங்களில் நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதாக சூரஜ் கூறுகிறார்.
“இந்தியா, MENA, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகரிக்க தீவிரமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்: சைபர் சிம்மன்