Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உலகின் பணக்கார பெண் பற்றி தெரியுமா? இன்றைய டாப் பணக்காரர்களின் மொத்த சொத்தைவிட அதிகம்...

இன்று உலக பணக்காரர்களின் பட்டியலை எலோன் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் மாறிமாறி இடம்பிடித்து வருகின்றனர். ஆனால், இந்த டாப் 5 பணக்காரர்களின் செல்வத்தைச் சேர்த்தாலும் அதைவிட அதிக சொத்து வைத்திருந்த ராணி பற்றி தெரியுமா?

உலகின் பணக்கார பெண் பற்றி தெரியுமா? இன்றைய டாப் பணக்காரர்களின் மொத்த சொத்தைவிட அதிகம்...

Monday September 09, 2024 , 3 min Read

இன்று உலக பணக்காரர்களின் பட்டியலை எலோன் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் மாறிமாறி இடம்பிடித்து வருகின்றனர். ஆனால், இந்த டாப் 5 பணக்காரர்களின் செல்வத்தைச் சேர்த்தாலும் அதைவிட அதிக சொத்து வைத்திருந்த ராணி பற்றி தெரியுமா? அவர், சீனாவின் டாங் பேரரசின் ராணி வூ ஜெட்டியன். அவரின் அன்றைய கால சொத்து மதிப்பே சுமார் 16 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என கூறப்படுகிறது.

யார் இந்த வூ ஜெட்டியன்?

சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் கிபி 624ல் பிறந்தார் வூ ஜெட்டியன். அவரது தந்தை வூ ஷிஹுவோ ஒரு செல்வமிகு மர வியாபாரி. சீனவரலாற்றின் பொற்காலங்களில் ஒன்று டாங் வம்சத்தின் ஆட்சிக்காலம். டாங் வம்சத்தின் நிறுவனரான லி யுவானிடம் வூ ஷிஹுவோ நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். லி-வூ இடையேயான நெருங்கிய நட்பின் காரணத்தால், யாங்கின் இணை வரிசையான சூய் அரச குடும்பத்திலிருந்து வு ஷிஹுவோவுக்காக இரண்டாவது மனைவியைத் தேர்ந்தெடுத்தாகக் கூறப்படுகிறது.

பின்னரே, கிபி 624 இல் வு ஜாவோ எனப்படும் வூ ஜெட்டியன் பிறந்துள்ளார். இருப்பினும், வூ ஜெட்டியனின் வர்க்கத் தோற்றம் பற்றி வரலாற்றாசிரியர்கள் பல ஆண்டுகளாக விவாதித்து வருகின்றனர். அவர் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்தவரா அல்லது பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவரா? என்பது குழப்பமானதாக இருக்கிறது. ஆனால், அவர் லி யுவானின் ஆட்சியில் உயர் அதிகாரியாக இருந்துள்ளார்.

வூ ஜெட்டியன் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவரது 14 வயதிலே, அரண்மனையில் பேரரசர் டைசோங்கின் செயலாளராக பணியாற்றத் தொடங்கினார். அங்கு அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார். இரண்டாவது டாங் பேரரசரான டைசோங், மற்றும் அவரது மகன் லி ஷிமின் (பின்னாளில் பேரரசரான காசோங்) இருவரும் வூ ஜெட்டியனின் அழகு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டனர். கிபி 649ல் பேரரசர் டைசோங்கின் மரணத்திற்குப் பிறகு, அரச குடும்பங்களின் பாரம்பரியத்தின்படி, அவரது மனைவிகள் அனைவரும் கோயில்களுக்குச் சென்று, தலையை மொட்டையடித்து, கன்னியாஸ்திரிகளாகி, அவரது ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும், தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும்.

ஆனால், SCMP படி, அவர் பேரரசரின் மகன் லி ஷிமின் உடன் பழக்கம் கொண்டிருந்தார். அதனால், அவரைத் துறவு வாழ்க்கையிலிருந்து விலக்கி, ஒரு வருடத்தில் வூ ஜெட்டியனைத் தன் துணைவியாக்கிக் கொண்டார்.

wu zetian

பட உதவி: என்டிடிவி

வூ-வின் சூழ்ச்சியும்; அரியாசனமும்;

பேரரசர் டைசோங்கின் முதல் மனைவி பேரரசி வாங் மற்றும் இரண்டாவது மனைவி சியாவோ. அவர்கள் இருவரையும் அகற்றி, அரசக்குடும்ப வாரிசுகளை பெற்றால் மட்டுமே அரியணைக்கு வரமுடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தார் வூ. அதன்படி, லி ஹாங், லி சியான், மற்றொரு லி சியான், மற்றும் லி டான் ஆகிய 4 மகன்களை பெற்றெடுத்தார். புதிதாக அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்திருந்தது. பேரரசி வாங்-கிற்கு குழந்தைகள் என்றால் பிரியம். ஆனால், அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. பேரரசி வாங் குழந்தையுடன் விளையாடிய சிறிது நேரத்திற்குப் பிறகு, வூ தனது சொந்தக் குழந்தையைக் கொன்று, பழியை பேரரசி வாங் மீது குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. பேரரசரும் இதை நம்பினார். விரைவில் அவருடைய பேரரசி பதவி நீக்கம் செய்யப்பட்டு, வூ ஜெட்டியன் பேரரசியாகினார்.

பேரரசி வூ அவரது நீண்டகால ஏகாதிபத்திய கனவை நிறைவேற்றி கொண்டார். மாநில விவகாரங்களை நிர்வகிப்பதில் காசோங்கிற்கு உதவுவது என்ற போர்வையில் அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றினார். அவரது மூத்த மகன் லி ஹாங் பட்டத்து இளவரசராகிய போதும், ​​வூவின் அதிகாரம் நீட்டித்தது. அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்றார்.

அரசியல் போட்டியாளர்களை பதவியில் இருந்து நீக்கி, நாடுகடத்தப்பட்டு, தூக்கிலிடப்படுவதற்கும் வூ பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.காசோங் கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவுடன் அனைத்து மாநில விவகாரங்களையும் பேரரசி வூவிடம் ஒப்படைத்தார். அவரது மகன்கள் அடுத்தடுத்து அரியணை ஏறினாலும், அவர்கள் ஒரு பொம்மை பேரரசராக இருந்தனர். வூ 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இறுதியில் அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டான 705ம் ஆண்டில் அரியணையிலிருந்து அகற்றபட்டார்.

பேரரசி வூ...!

டாங் பேரரசை கைப்பற்றுவதற்காகவும், அதைத் தக்க வைத்து கொள்வதற்காகவும் பல சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் கையாண்டிருந்தாலும், சீனாவின் வளர்ச்சிக்கு அவருடைய ஆட்சிக்காலத்தின் பங்கு அளப்பாரியது. அவரது காலத்தில் விவசாயம் செழித்தது. விவசாய பாடப்புத்தகங்களைத் தொகுத்தல், நீர்ப்பாசன அமைப்புகளை உருவாக்குதல், வரிகளைக் குறைத்தல் மற்றும் பிற விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். 695ம் ஆண்டில், வூ முழு சாம்ராஜ்யத்திற்கும் வரி இல்லாத ஆண்டாக அறிவித்தார். இன்றும் அங்கு வருடாந்திர விவசாய விழாவில் அவர் கௌரவிக்கப்படுகிறார்.

Wu Zetian

சீன தொலைகாட்சி எடுத்த தொடரில் வூ ஜெட்டியனின் கதாபாத்திரத்தி நடித்தவர்

சீனாவின் ஏகாதிபத்திய இறையாண்மையைப் பேணுதல், பல பிராந்தியங்களைக் கைப்பற்றுவதன் மூலம் டாங் பிரதேசங்களை விரிவுபடுத்துதல், புத்த மதத்தை ஆதரித்தல், இலக்கியம் மற்றும் கலையை மேம்படுத்துதல், உயர்குடி குலங்களிலிருந்து அதிகாரிகளை பணியமர்த்துவதை தவிர்த்து கல்விக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் அளித்தல் என ஆகியவை அவரது ஆட்சிக்காலத்தின் சாதனைகளாக வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. 1990 களில், சீன ஆணாதிக்கம் அதிகரித்த போது, ​​​​வூ ஜெட்டியன் சீனாவின் "ஒரே ஆளும் பேரரசி" என்று வரலாற்று பாடப்புத்தகங்களில் பாராட்டப்பட்டார்.

2014ம் ஆண்டு வூ கதையினை நாடகத் தொடராக ​​வுமேனியாங் சுவான்கி (தி லெஜண்ட் ஆஃப் தி சார்மிங் லேடி வூ அல்லது தி எம்பிரஸ் ஆஃப் சீனா) எனும் பெயரில் ஒளிப்பரப்பாகியது. பேரரசி வூவின் ஆட்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவருடைய ஆட்சி செழிப்பாக இருந்தது. அவரது ஆட்சியில் சீனாவின் செல்வம் கணிசமாக வளர்ந்தது. எப்படியிருந்தாலும், வூ ஜெட்டியன் சீனாவின் ஏகாதிபத்திய காலத்திலிருந்து ஒரு முக்கியமான வரலாற்று நபராக இருக்கிறார்.

தகவல் உதவி :https://www.asianstudies.org