முதலீடு vs சேமிப்பு - உங்களுக்கு எது பெஸ்ட்? - ஓர் எளிய கைடன்ஸ்!
முதலில் உங்களுக்கு சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் இடையேயான வித்தியாசம் தெரிய வேண்டும். அதன் சாதக, பாதகமும் தெரிய வேண்டும்.
உலகெங்கும் பணவீக்க அதிகரிப்பு, பொருளாதார நிலையற்றத் தன்மையே நிலவுகிறது. இதில் இளைஞர்கள் பட்டாளம் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்ட பாடாய்படுகின்றனர். பல வழி தேடி அலைகின்றனர். நிதி நிலையை ஸ்திரப்படுத்த இரண்டே வழிகள்தான்.
ஒன்று பணத்தை சேமித்தல், இரண்டாவது முதலீடு செய்தல். இதில் உங்களுக்கு எது உகந்தது என்பதை தெரிவு செய்வதில் தான் சூட்சமம் இருக்கிறது.
முதலில் உங்களுக்கு சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் இடையேயான வித்தியாசம் தெரிய வேண்டும். அதன் சாதக, பாதகமும் தெரிய வேண்டும்.
சேமித்தல் என்றால் என்ன?
சேமிப்பு என்பது உங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலப் பயன்பாட்டுக்கு என ஒதுக்கி வைத்தல். இதனை வங்கியில் சிறுசேமிப்புக் கணக்கு தொடங்கி கூட சாத்தியப்படுத்தலாம். இல்லாவிட்டால் குறைந்த அபாயம் உள்ள நிதிப் பலன்களை வாங்குவதன் மூலமும் செய்யலாம்.
சேமிப்பின் நோக்கமே ஆபத்து காலத்துக்கான நிதியை திரட்டுதலே. ஏதேனும், எதிர்பாராத செலவை சந்திக்க சேமிப்பு உதவும்.
சேமிப்பு என்பது பழமையான நிதி ஸ்திரத்தன்மை வழியாகப் பார்க்கப்படுகிறது. இது மூலதனத்தைப் பாதுகாத்தல் எனலாம். நிதியை வளர்ச்சியடையச் செய்வதைவிட இருப்பதை பாதுகாத்துக் கொள்ளுதலே சேமிப்பாகும்.
சேமித்தலின் பலன்கள்:
- அவசரகால தேவைக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.
- தேவைப்படும்போது எளிதில் பயன்படுத்தக்கூடிய நெகிழ்வான தன்மை கொண்டது.
- பண இழப்பு அபாயம் மிக மிகக் குறைவு.
- நம் வாழ்க்கையில் ஒரு நல்ல பழக்கமாக உருவெடுக்கும்.
சேமித்தலின் பின்னடைவுகள்:
- மூலதனத்தில் வளர்ச்சி இருக்காது. சேமித்த பணத்தை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு வட்டி இருக்காது.
- பணவீக்கத்தால் நாம் சேமித்த பணம் கொண்டு வாங்கும் பொருளின் அளவு மாறுபடும்.
- முதலீடுகளை ஒப்பிடுகையில் சேமிப்புகள் வளர்ச்சியற்ற நிதியாக இருக்கும்.
- நிதியை பெருக்கி செல்வமாக்கும் வாய்ப்பு குறைவு.
பணத்தை சேமித்தல் எப்படி?
பணத்தை சேமிப்பதற்கு ஒரு நல்ல வழி உங்கள் செலவினங்களுக்கு ஒரு பட்ஜெட் தயாரித்து அதன்படியே, செயல்படுதலாகும். ஒவ்வொரு தேவைக்கும் கவனமாக பட்ஜெட் இட்டு செலவு செய்ய வேண்டும். மளிகை பொருட்கள், போக்குவரத்து, பொழுதுபோக்கு என எல்லாவற்றிற்குமான செலவுகளைத் திட்டமிடுங்கள். இதன்மூலம் ஒவ்வொரு மாதக் கடைசியிலும் சேமிப்பு என்றொரு தொகை உங்கள் கையில் இருக்கும். இது உங்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தரும்.
முதலீடு எனில் செயல்படுத்துவது எப்படி?
முதலீடு என்பது உங்களுடைய பணத்தை நீண்ட கால வைப்பாக மாற்றி, அதன் மூலம் வட்டி உள்ளிட்ட பலன்களைப் பெறுவது ஆகும். அது பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குதல், பாண்ட் பத்திரங்களாக வாங்குதல், மியூச்சுவல் ஃப்ண்ட் சந்தையில் முதலீடு செய்தல், ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பலதரப்பட்டது. ஆனால், இவற்றில் சில சந்தை அபாயங்கள் உண்டு.
முதலீட்டின் முதல் நோக்கமே உங்கள் பணத்தை வளரச் செய்வது. இதன் மூலம் எதிர்கால நிதித் தேவை திட்டங்களான ஓய்வு, கல்வி, சொத்துச் சேர்க்கை ஆகியவற்றை எட்டலாம்.
சந்தை முதலீடுகள் எல்லாம் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படக் கூடியதே என்பதால் அது அபாயகரமானது என்பதையும் தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
முதலீட்டின் பயன்கள் என்ன?
- முதலீடு செய்வதால் சேமிப்பைக் காட்டிலும் பணத்தின் மீது அதிக லாபம் பெறலாம்.
- சந்தை அபாயத்தைத் தவிர்க்க பல்வேறு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சொத்துகளை வளரச் செய்யும்
- காலப்போக்கில் பண முதலீட்டின் மீதான கூட்டு மதிப்பு அதிகரிக்கும்.
முதலீட்டின் அபாயங்கள் என்னென்ன?
- பணத்தை இழக்கும் அபாயம் அதிகம்.
- நல்ல பலன்கள் கிடைக்க நீண்ட காலம் கத்திருக்க வேண்டும்.
- அதேபோல் பணப் பலனுக்கான உத்தரவாதங்கள் குறைவு.
- சந்தை அபாயம் உள்ளது.
பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
பணத்தை முதலீடு செய்வதில் பல்வேறு விஷயங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யலாம். ரியல் எஸ்டேட் என்பது கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பு. இவை முதலீட்டுக்கான ஒருசில வாய்ப்புகளாகும். ஒவ்வொரு வாய்ப்பிலும் ஏதேனும் ஒரு சந்தை அபாயம் நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது. அதனால் எவ்விதமான முதலீடு என்றாலும் சந்தை அபாயங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து முடிவெடுத்தல் நலமாகும்.
சேமிப்பு vs முதலீடு: எப்படித் தெரிவு செய்வது?
சேமிப்பா, முதலீடா என்று தேர்வு செய்யும்போது உங்களது நிதித் தேவை இலக்கு, கால அளவு, உங்களால் எத்தகைய ஆபத்தை தாங்கிக் கொள்ள இயலும் ஆகியனவற்றைப் பொருத்தே முடிவு செய்ய வேண்டும்.
குறுகிய கால தேவை, அதாவது அவசரக் கால பயன்பாட்டுக்கு என்றளவில் பார்க்கும்போது சிறுசேமிப்பு உதவும். ஏனெனில், நினைத்த மாத்திரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலீடு என்பது நீண்ட கால நிதி வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. ஆனால், அதனை நீங்கள்தான் உங்களின் இலக்குகள், சூழல்களைப் பொருத்த நிர்வகிக்க வேண்டும்.
சேமிப்பு என்பது ஸ்திரத்தன்மை மற்றும் நிதிப் புழக்கத்தை உறுதி செய்கிறது. முதலீடு என்பது வளர்ச்சி மற்றும் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
ஆகவே, இரண்டையும் கொண்ட ஒரு சமமான அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு செய்யும்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவது நிச்சயம். பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்யலாம்.
- உறுதுணைக் கட்டுரை: ஆஸ்மா கான்
Edited by Induja Raghunathan