7 ஆண்டு பணி இடைவெளிக்குப் பின் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி சாதித்த காயத்ரி வைத்யநாதன்!
தொழில்நுட்பத்தில் பெண்கள் வரிசையில், லோவேஸ் இந்தியாவின் மென்பொருள் பொறியியல் இயக்குனர் காயத்ரி வைத்தியநாதன் பற்றி பார்க்கலாம். 2010 ல் தனது பணி வாழ்க்கையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டவர் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு துறைக்கு திரும்பி, டார்கெட் நிறுவனத்தில் பயிற்சி நிலையில் இருந்து துவங்கி அதற்கான பலனை
காயத்ரி வைத்யநாதன் 2010ல் பணி வாழ்கையில் இருந்து எடுத்துக்கொண்ட இடைவெளி, ஏழு ஆண்டுகள் நீடித்தது.
பணியில் 12 ஆண்டுகள் அனுபவத்தோடு சுவாரஸ்யமான கட்டத்தில் இருந்தார். இதில், லூசண்டில் 10 ஆண்டுகளை செலவிட்டிருந்தார். மற்றவர்களுக்கு, குறிப்பாக வேகமாக மாறும் ஐடி துறையில், இத்தகைய இடைவெளி பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம்.
ஆனால், காயத்ரி, இடைவெளியில் இருந்து மீண்டு வந்து, நான்கு ஆண்டுகளுக்குள் லோவேஸ் இந்தியா (Lowe’s India) நிறுவனத்தில் மென்பொருள் பொறியியல் இயக்குனராக முன்னேறினார்.
“இடைவெளிக்கு பிறகு, டார்கெட்டில் பயிற்சி நிலையில் மீண்டும் துவங்க வேண்டியிருந்தது. பெங்களூருவில் அலுவலகம் அமைந்திருந்தது. ஐதராபாத்தில் இருந்த என் குடும்பத்துடன் இருக்க வார இறுதி நாட்களில் செல்வேன். இது தேவையானதா என்றும், இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பதா என்று யோசித்தேன்” என்று ஹெர்ஸ்டோரியிடம் பேசும் போது காயத்ரி கூறினார்.
அர்த்தமுள்ள வாழ்க்கை
சுய சந்தேகத்தால் பாதிக்கப்பட்ட நாட்களை மீறி, காயத்ரி தனது பணியில் தொடர்ந்தார். இல்லத்தலைவியாக இருப்பது அதிக கவனம் கோரும் பணி என்பதை அங்கீகரித்தவர், தனது வாழ்க்கையில் அர்த்தம் உள்ள செயல்பாடுகளை கொண்டிருக்க வேண்டும் என நினைத்தார்.
“அறிவுத்திறன் பணிகளில் ஈடுபடுவதோடு, வீட்டில் செய்வது தவிர குடும்பத்திற்கு என்று மதிப்பான சிலவற்றை கொண்டுவர இது உதவியது. நிதி சுதந்திரம் பெற்றிருப்பதோடு, என் திறன்களுக்கு, நான் பயிற்சி பெற்றவற்றுக்கு, திறன் வளர்த்து கொண்டதற்கு நியாயம் செய்ய வேண்டியிருந்தது. குடும்பம் கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்,” என்கிறார் காயத்ரி.
“எல்லோரும் தங்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை கண்டறிவது முக்கியம் என நினைக்கிறேன். ஏனெனில், நமக்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது. இதில் வருத்தங்கள் இருக்கக் கூடாது. என் ஒரு பகுதியை நிறைவடைய வைத்த துறைக்கு மீண்டும் வர நினைத்தேன்,” என்கிறார்.
ஏழு ஆண்டு இடைவெளியில் அவர் முழுவதுமாக தொழில்நுட்பத்தை விட்டு விலகிவிடவில்லை. அவர் ஃபிரிலான்சராக வலைப்பதிவு செய்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பற்றி எழுதி வந்தார். இது துறையில் நடப்பவற்றை அறிய உதவியது. மேலும், வளர்ந்து வரும் ஸ்கிரம் மாஸ்டர் திறனிலும் சான்றிதழ் பெற்றார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புரோகிராமிங் கற்க உதவினார்.
லூசண்டில் இருந்து விலகிய போது அவர் தொழில்நுட்ப வல்லுனராக இருந்தார். டார்கெட் நிறுவனத்தில் சேர்ந்த போது ரீடைல் துறைக்கு மாறியிருந்தார். சில ஒப்புமைகள் இருந்தாலும் புதியவற்றை கற்கவும், கற்றவற்றை மறக்கவும் வேண்டியிருந்தது என்கிறார். பயிற்சி நிலையில் துவங்கியது வேலையில் முன்னேற உதவியாக இருந்தது என்கிறார்.
துவக்கம் முதல் அவரது பணி வாழ்க்கை ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருந்தது. 1998ல் கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற போது குடும்பத்தின் முதல் பொறியாளராக இருந்தார். அமெரிக்காவின் இல்லினியாஸ் தொழில்நுட்ப பல்கலையில் எம்.எஸ் பட்டம் பெற்றார்.
டி.இ ஷா இந்தியா சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி வாழ்க்கையை துவங்கி எச்சிஎல் நிறுவனத்திற்கு மாறி பின் லூசண்டில் பணியாற்றத்துவங்கினார்.
சமூக சவால்கள்
தனது முதல் வேலையில் அவர் மட்டுமே பெண் பொறியாளராக இருந்தார். ஆரம்ப காலம் சவாலாக இருந்தது. வாய்ப்புகளை பொருத்தவரை சார்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பவர், இது சமூக மற்றும் சுற்றுச்சூழல் நோக்கிலும் அமைந்தது என்கிறார்.
“இப்போதுள்ளது போல வேலைக்கு தேவைப்பட்டால் 16 முதல் 18 மணி நேரம் வேலை செய்வது அப்போது பெண்களுக்கு எளிதாக இல்லை. வளங்கள் மற்றும் இணையத்திற்கான அணுகல் எளிதாக இல்லை. அலுவலகத்தில் இணைய இணைப்பு இருப்பது பெரிய விஷயமாக இருந்தது. அலுவலகத்தில் நீண்ட நேரம் இருந்தால் மட்டுமே இவற்றை அணுக முடிந்தது,” என்கிறார்.
லூசண்டில் இருந்த போது அவர் பெல் லேப்சின் இந்தியா பிராடக்ட் மையத்தில் பணியாற்றி, தொலைத்தொடர்பு துறை சார்ந்த அதிநவீன நுட்பங்களில் ஈடுபட்டார்.
“தானியங்கி வரைவுகளை கட்டமைப்பதில் ஈடுபட்டிருந்தோம், ரேடியோ அக்சஸ் நிர்வாகக் குழு மற்றும் சிடிஎம்.ஏ வளர்ச்சி குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன். ஆய்வு மற்றும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினோம். 50 அல்லது 60 வயது ஆன நிலையிலும் ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்தவர்களுடன் பணியாற்றுவது நல்ல அனுபவம்,” என்கிறார்.
லோவேஸ் இந்தியாவில் அவர் 2020ல் இணைந்தார், இப்போது மென்பொருள் பொறியியல் இயக்குனராக இருக்கிறார். வாடிக்கையாளர்களுக்கான பிராண்டின் வாக்குறுதி நிறைவேற்றப்பட பொறுப்பான பொறியல் பிரிவின் (சோர்சிங்) தலைவராகவும் இருக்கிறார்.
உங்கள் நோக்கம்
தொழில்நுட்பத் துறையில் அதிக பெண்கள் நுழைந்தாலும், தலைமை பதவியில் அதிகம் பேர் இல்லை. வீட்டில் குழந்தைகள் அல்லது பெரியவர்களை பார்த்துக்கொள்ள வேண்டியவர்களாக பெண்கள் இருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம், என்கிறார்.
“எனினும், வாழ்க்கை நிகழ்வுகள் நிகழும் போது, முன்னுரிமை மற்றும் நேர நிர்வாகம் தொடர்பான கேள்வியும் எழுகிறது. சில நேரங்களில் நீங்கள் ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை தேர்வு செய்யக்கூட வேண்டாம், முன்னுரிமை அளித்தால் போதும். வேலை முன்னுரிமை பெறும் நாட்கள் இருக்கும். மற்ற நேரங்களில் குடும்பம் முன்னிலை பெறும். குற்ற உணர்வு கொள்ளாமல் பெண்கள் இந்த முடிவுகளை எடுக்க வேண்டும். தாங்கள் விரும்புவற்றை முன் வைக்க வேண்டும்,” என்கிறார் காயத்ரி.
“சில நேரங்களில் ஒருவர் உதவி கேட்கத் தயாரா இல்லை என்பதால் வாய்ப்புகள் தவறலாம். மேலும் உதவி கேட்கும் போது நீங்கள் பலவீனமானவராக கருதப்படக்கூடாது,” என்றும் காயத்ரி கூறுகிறார்.
பெண்கள் வாய்ப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தோல்வி கண்டு அஞ்சக்கூடாது என்கிறார். பல்வேறு வகை மனிதர்களோடு, சகாக்களோடு வலைப்பின்னல் கொள்வது வாழ்க்கை மற்றும் பணியில் சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய புரிதல், கற்றலை அளிக்கும்.
தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் திரும்பி கொடுப்பதன் முக்கியத்தவையும் அவர் உணர்ந்துள்ளார்.
“லோவேஸ் இந்தியாவில் நீங்களே செய்வது எனும் திட்டம் உள்ளது. தங்கள் தொழில்நுட்பப் பணியை மீண்டும் துவங்க உதவும் பெண்களுக்கான பயிற்சி திட்டம் இது. சில திட்டங்கள், பெண்கள் பேறுகால விடுமுறைக்கு பிறகு பணிக்கு திரும்ப உதவுகிறது. பெண் தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டங்களும் உள்ளன. சூழல் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க நிறுவனம், நேரம், வளம் மற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறது,” என்கிறார்.
பொறியியல் துறையில் உள்ளவர்களுக்கு வழிகாட்டவும் செய்கிறார். தனிப்பட்ட வளர்ச்சியில் முதலீடு செய்வது தொடர்பாக அவர்களுடன் உரையாடுகிறார்.
“என அணியில் நிறைய பெண் பொறியாளர்கள் இருக்கின்றனர். அவர்களை தங்கள் கூட்டை விட்டு வெளியே வர மற்றும் தங்கள் நோக்கங்களுக்காக செயல்பட வலியுறுத்துகிறேன். நீங்கள் உங்களுக்காக பேசவில்லை எனில் இந்த உலகில் வேறு யாரும் பேசமாட்டார்,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்
ஊர் நெல்லை, படிப்பு சென்னை, பெங்களூருவின் 3-வது பணக்காரப் பெண் - யார் இந்த அம்பிகா சுப்ரமணியன்?
Edited by Induja Raghunathan