'அமெரிக்க குடியுரிமை பெற குறைப்பிரசவம்' - டிரம்ப் உத்தரவால் டாக்டர்களை தேடி ஓடும் கர்ப்பிணிகள்!
வரும் பிப்ரவரி 20ம் தேதிக்குப் பிறகு, பிறப்பால் கிடைத்த அமெரிக்க குடியுரிமை இனி கிடையாது என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவால், முன்கூட்டியே குழந்தையை பிரசவித்துக் கொள்வதற்காக, அங்குள்ள இந்திய தம்பதிகள் மருத்துவமனையை நோக்கி விரைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பது இன்று பலரது கனவுகளில் ஒன்றாகி விட்டது. இதற்காக அங்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அப்படி வேலை கிடைத்து வெளிநாடு சென்றவர்கள், பிறகு அங்கேயே எப்படி செட்டில் ஆவது எனவும் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இப்படி பலரது கனவுகளில் ஒன்றாக இருப்பது அமெரிக்காவில் செட்டில் ஆகி அதன் குடியுரிமை பெறுவதே.
அதோடு, அங்கே சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும்போது, அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைத்து விடுகிறது. அப்படி அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது, அக்குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமையோடு, அமெரிக்க குடியுரிமையும் கிடைத்து விடுகிறது என்பதால், இரட்டை குடியுரிமை பெற்றவர்களாகி விடுகிறார்கள். எனவே, அதற்காக, திருமண ஆனவுடன் பல இந்தியர்கள், அமெரிக்காவில் H1B விசாவில் வசிக்கும் அமெரிக்க குடியுரிமைக்காக அப்ளை செய்து காத்திருப்பவர்கள் பலர், தங்கள் குழந்தை அமெரிக்க மண்ணில் பிறந்தால் அந்நாட்டு குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் அதற்கேற்றார் போல் திட்டமிடுபவர்கள். இதுவே பல ஆண்டுகளாக் இருந்துவந்த வழக்கம்.
ஆனால், சமீபத்தில் மீண்டும் அதிபராக பதவியேற்ற டோனாட் டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவால், அமெரிக்க வாழ் இந்தியர்களின் கனவு தவிடுபொடியாகியுள்ளது. எனவே, தற்போது அமெரிக்க வாழ் இந்தியத் தம்பதிகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பலர், பிப்ரவரி 20ம் தேதிக்கு முன்னதாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், என மருத்துவமனைகளை நோக்கி விரைந்து வருவதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகத் தேர்வானார். அமெரிக்க அரசியலமைப்பின்படி, கடந்த 20-ம் தேதி இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் பதவியேற்றார்.
அப்போது முதல் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டிரம்ப். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், என அதிரடி உத்தரவுகளை அறிவித்துள்ளார்.
அதில், அமெரிக்கா வாழ் இந்தியர்களை மிகவும் பாதித்த ஒன்று பிறப்புரிமை அடிப்படையில் இனி யாரும் அமெரிக்க குடியுரிமையை பெற முடியாது என்ற ஒன்றுதான். இந்த உத்தரவின் மூலம் பிப்ரவரி 20ம் தேதிக்கு பிறகு,
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அங்கு குடியுரிமை கிடைக்காது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர், அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே, அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.
இந்தப் புதிய சட்டம் வரும் பிப்ரவரி 19ம் தேதிக்குப் பிறகு அமலுக்கு வருகிறது. எனவே, அதற்குள் அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டு தம்பதிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த கடைசி வாய்ப்பை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, அங்குள்ள இந்திய தம்பதிகள் உட்பட பல வெளிநாட்டு தம்பதிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறை பிரசவத்திற்கும் தயார்
நிறைமாத கர்ப்பிணியாக இல்லாதவர்கள்கூட, பிரசவ தேதிக்கு முன்னதாகவே, அறுவை சிகிச்சை மூலம் கருவில் இருக்கும் குழந்தையை பெற்றெடுப்பதில் அவசரம் காட்டி வருகின்றனர். இதனால் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் மருத்துவமனையை அணுகி வருவதாகவும், அங்குள்ள மருத்துவமனைகள் இதுபோன்ற கர்ப்பிணிகளால் நிரம்பி வழிவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
7 மாதம் முதல் 9 மாதம் வரையிலான கர்ப்பிணிப் பெண்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனென்றால்,
பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு நிரந்தர அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற மாட்டார்கள். இதனால் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய கர்ப்பிணிகள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. இதற்கிடையே, நியூஜெர்சி நகரில் 7 மாத கர்ப்பிணி தனக்கு அறுவை சிகிச்சை மூலம் உடனே குழந்தை பிரசவிக்க வேண்டும் எனக்கூறி மருத்துவமனைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தனக்கு மட்டும் இது போன்ற பிரசவம் தொடர்பாக 20க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக அங்கு வாழும் இந்திய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இப்படி அமெரிக்க குடியுரிமைக்கு ஆசைப்பட்டு, பிரசவ தேதிக்கு முன்னதாகவே தங்கள் குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் பெற்றோர் பிரசவிக்க நினைப்பதால், தாய் மற்றும் சேயின் உடல்நலத்திற்குப் பிரச்சினை ஏற்படலாம், என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற குறை பிரசவத்தால் குழந்தைகள் போதிய எடையின்மையோடு பிறத்தல், நுரையீரல் நன்கு வளராமல் போவது, அவர்களுக்கு தாய் பாலூட்டுவதில் பிரச்சினை ஏற்படுவது உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் அதிகம், என்கிறார் அவர்.
“ஏழு மாதக் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் வந்து, தனக்கு குறைமாத பிரசவத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவருக்கு மருத்துவ முறைகளின்படி, வரும் மார்ச் மாதம்தான் பிரசவத் தேதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் தன் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டுமென இப்படி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்,” எனக் கூறுகிறார் நியூஜெர்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் எஸ்.டி.ரமா.
தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்தியர்கள்
அமெரிக்காவில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாக குடியுரிமை வழங்கும் சட்டம் கடந்த 1868ஆம் ஆண்டில் இருந்து வருகிறது. ஆனால், தற்போது இதில் மாற்றம் கொண்டு வந்துள்ள அதிபர் டிரம்பின் இந்த புதிய குடியுரிமை உத்தரவு பல்வேறு வெளிநாட்டு குடும்பங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என விரும்பி பணி நிமித்தமாக அங்கே தங்கி இருக்கக்கூடிய இந்திய தம்பதிகள் பலரும் இனி என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளது.
ஏனெனில், அமெரிக்காவில் வேலை நிமித்தமாக ஹெச்1பி விசா மற்றும் எல்1 ஆகிய தற்காலிக விசாக்களுடன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த இந்திய தம்பதிகள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து நிரந்தர குடியுரிமை பெற முயற்சி செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அதனிடையே அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், இதுநாள் வரை அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால், பிப்ரவரி 20ம் தேதிக்கு மேல் இந்த நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அதிபர் டிரம்ப்.
அமெரிக்க நீதிமன்றம் அதிபர் டிரம்பின் இந்த ஆணைக்கு தற்காலிக தடை விதித்திருந்தாலும், நீதிமன்ற தீர்ப்பு எப்படி அமையப் போகிறது என்பதை கணிக்க முடியாது. இதனால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் பல்வேறு இந்திய தம்பதிகளும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு மாற்று வழிமுறைகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
EB-5 விசா
குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதன்மூலம், தங்களுக்கும் எதிர்காலத்தில் அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும் என்ற கனவில் இருந்த இந்தியர்கள் பலர், தற்போது EB-5 விசா மூலம் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. EB-5 Immigrant Investor Program என்ற இந்த திட்டம் மூலம் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அமெரிக்கவில் நிரந்தர குடியுரிமை பெற முடியும்.
அதாவது, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 8 லட்சம் டாலர்களை (6 கோடி ரூபாய்) முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் 10க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த பணத்தை முதலீடு செய்த நபருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கிரீன் கார்டு கிடைத்துவிடும்.
அமெரிக்காவில் அண்மைகாலமாக ஈபி-5 விசாவுக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களில் இந்தியர்களே அதிகம் என்றும் அதற்கு அடுத்தபடியாக சீனர்கள் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மீண்டும் இந்தியாவிற்கே அவர்களை திரும்ப வந்துவிடும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
‘எதற்காக இப்படி வெளிநாட்டில் கஷ்டப்பட வேண்டும். சொந்த நாட்டில் கௌரவமாக வாழலாமே’ என அவர்களுக்கு அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.