வெளிநாட்டு பிராண்ட் போட்டியை சமாளித்து, ஜீன்ஸ் சந்தையில் கலக்கும் இந்திய பிராண்ட்!
உள்நாட்டில் உருவான இந்த பிராண்ட், நவீன பாணி டெனிம்களில் கவனம் செலுத்தியதன் மூலம், வெளிநாட்டு பிராண்டுகளுடன் நேரடியாக போட்டியிட்டு, இப்பிரிவில் இந்தியாவின் முன்னணி பிராண்டாகியிருக்கிறது.
இந்தியா இப்போது மேற்கத்திய பாணி பேஷனை தழுவிக்கொண்டு வருவதால், ஜீன்ஸ் அதிகம் நாடப்படும் ஆடை ரகமாக உருவாகி இருக்கிறது. மெட்ரோ நகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை, பல்வேறு வயது பிரிவினர் மத்தியில் ஜீன்ஸ் சகஜமாக இருக்கிறது. பணியிடம், கல்லூரி, குடும்ப விழா என எந்த வகை நிகழ்ச்சிகளுக்கும் ஜீன்ஸ் ஏற்றதாக இருக்கிறது.

இந்தியாவில் பல பிராண்ட்கள் ஜீன்ஸ்களை அளிக்கின்றன. லிவைஸ், லீ, ராங்க்லர், பெபே ஜீன்ஸ் ஆகியவறை பிரபலமாக உள்ளன. ஆனால் இவை அனைத்தும் சர்வதேச பிராண்ட்கள்.
இந்திய டெனிம் பிராண்ட்களில், ஸ்பைகர் லைப்ஸ்டைல் (Spykar Lifestyle) வேகமாக வளர்ந்து வருவதோடு தனித்தும் நிற்கிறது. 1992ல் பிரசாத் பிரபாகரால் துவக்கப்பட்ட இந்த பிராண்ட், கடந்த ஆண்டுகளில் இந்திய சந்தையில் சீரான வளர்ச்சி கண்டிருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம் சிறிய அளவில் துவங்கியது. எனினும், அதன் சி.இ.ஒ. சஞ்சய் வகாரியா பங்களிப்பு காரணமாக வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. இன்று இந்நிறுவனம் முன்னணி பிராண்ட்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் வெளிநாட்டு பிராண்டுகளுடன் நேரடியாக போட்டியிடுகிறது.
ஸ்பைகர் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் 250 பிரத்யேக மையங்கள், 1000 பல பிராண்ட் மையங்கள் ஆகியவற்றில் கிடைப்பதோடு, இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனையாகிறது. மேல் சட்டைகள், பேண்ட்கள் ஆகியவற்றோடு, பேக்பேக், பிலிப்பிலாப், வாலெட்கள் போன்ற துணைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தற்போது பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கிறது ஆனால் ஸ்பைகர் தனது செயல்பாட்டை தீவிரமாக்கி, நடப்பு நிதியாண்டில் 20 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது,” என்கிறார் சஞ்சய்.
“ஸ்பைகரின் நுகர்வோர் விற்பனை 2016-17 ல் ரூ.460 கோடியில் இருந்து 2017-18 ல் ரூ.550 கோடியாக அதிகரித்துள்ளது,” என்கிறார்.
இந்த ஆண்டு நிறுவனம் ரூ.700 கோடியை தொட திட்டமிட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய சவால்களை மீறி ஸ்பைகர் வளர்ச்சி கண்டு வருவதாக சஞ்சய் கூறுகிறார்.
கச்சிதமான அமைப்பு
“ஆண்களுக்கான டெனிம் நிறுவனமாக துவங்கினோம். எங்கள் டெனிம் ரகங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக இளம் நுகர்வோரின் அனைத்து பேஷன் தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கி முன்னேறினோம். பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கமான ஜீன்ஸ் ஆடை நிறுவனமாக உருவானோம்” என்கிறார் சஞ்சய்.
நிறுவனத்தில் முதலீட்டை அதிகரிப்பதற்காக ஸ்பைகர் 2014 ல், பாக்ரி குடும்பத்தின் மெடிடிஸ்ட் குழுமத்தில் அங்கமானது. இந்த யூகே குழுமம், பேஷன், விருந்தோம்பல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது.
ஸ்பைகரின் வெற்றி, பிரசாத் மற்றும் சஞ்சய், இந்திய நுகர்வோர் சந்தையை சரியாக புரிந்து கொண்டுள்ளதை உணர்த்துகிறது. தங்கள் தயாரிப்பையும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நுகர்வோர் பழக்கங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் இது மிகவும் சிக்கலானதாகும். இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களை இலக்காக கொண்டு செயல்பட்டதும் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்கிறார் சஞ்சய்.
சவால்களும், வாய்ப்புகளும்
ஆனால் சந்தைபங்கு மட்டும் போதாது. விலையை முக்கியமாக கருதும் இந்திய சந்தையில், பல்வேறு பிரிவு நுகர்வோரின் விலையை புரிந்து கொள்ள வேண்டும்.
“நாங்கள் பிரிமியம் தயாரிப்பை வழங்கும் விலைப்பிரிவில் வேறு எந்த நிறுவனமும் இல்லை. அனைத்து விற்பனை பிரிவுகளிலும் தேசிய அளவிலான இருப்பும் எங்கள் வீச்சை அதிகமாக்குகிறது,” என்கிறார் சஞ்சய்.
மேலும், வாடிக்கையாளர்களை புரிந்து கொள்வதும் சவாலானது. அதிலும் குறிப்பாக இளம் நுகர்வோருக்கு என்ன தேவை என்று தெரியாத நிலையில் போக்குகளால் ஈர்க்கப்படும் போது இது மிகவும் சிக்கலானது. “இளைஞர்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், மிகவும் கடினமான, எதிர்பார்ப்பு உள்ள நுகர்வோருக்கு சேவை அளிக்கிறோம். அவர்கள் தான் எங்கள் பிராண்டின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள். எங்கள் அருமையான தயாரிப்புகள் மற்றும் எங்கள் கோட்ப்பாட்டை அவர்களுக்கு ஏற்றதாக அமைப்பதன் மூலம் அவர்களை ஈர்த்திருக்கிறோம்” என்கிறார் சஞ்சய்.
இளைஞர்கள் பரிசோதனை எண்ணம் கொண்டிருப்பதால் அவர்களிடம் பிராண்ட் விசுவாசத்தை எதிர்பார்ப்பது கடினமானது என்கிறார் அவர். அவர்களை பிராண்டுடன் பினைத்திருப்பது சவாலானது. அதிக தள்ளுபடி கலாச்சாரத்தையும் நிறுவனம் சவாலாக எதிர்கொண்டு வருகிறது.
“இவைத்தவிர, அதிகரிகும் ரியல் எஸ்டேட் செலவுகளும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சந்தையில் சர்வதேச பிராண்ட்கள் போட்டியும் அதிகரித்துள்ளது,” என்கிறார் அவர்.
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சேனல்கள் இணைந்திருப்பதும் ஒரு சவாலாக உள்ளது. “நுகர்வோருக்கு சேவை அளிக்க இரண்டு வழிகளிலும் செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே டிஜிட்டலை பயன்படுத்திக்கொண்டு, வாடிக்கையாளர் நேரத்தை செலவிடும் இடங்களில் இருப்பை பெற்றிருப்பதும் அவசியம் என்கிறார் அவர்.
எதிர்கால திட்டம்
சந்தையின் சவால்களை மீறி ஸ்பைகர் விரிவாக்கத்தில் திட்டமிட்டுள்ளது.
“500 நகரங்களில் கடைக்குள் கடை மற்றும் பல பிராண்ட் மையங்களில் இருப்பை பெற திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் 200 நகரங்களில் தனி கடைகளை பெற உள்ளோம்,” என்கிறார் சஞ்சய்.
இதற்காக நிறுவனம் ஆண்டுக்கு 30 முதல் 40 பிரத்யேக பிராண்ட் மையங்களை அமைக்க உள்ளது. இ-காமர்ஸ் மேடைகளிலும், தனது நிலையை வலுவாக திட்டமிட்டுள்ளது. “வரும் ஆண்டுகளில் பெண்களுக்கான பிரிவும் நல்ல வளரச்சி வாய்ப்பை அளிக்கும் என நம்புகிறோம். தயாரிப்புகளில், மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்ய உள்ளோம்,” என்கிறார் அவர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில் சைபர்சிம்மன்