ஐஐடி மெட்ராஸ் நீர் நிர்வாக ஆய்வு மையத்திற்கு முன்னாள் மாணவர் டாக்டர்.பரசுராம் ரூ.5 கோடி நிதி உதவி!
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் டாக்டர்.பரசுராம் பாலசுபிரமணியன், இதன் நீர் நிர்வாகம் மற்றும் கொள்கைக்கான மையம் AquaMAP – ஆய்வு மையத்திற்கு ரூ.5 கோடி நிதி அளித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் டாக்டர்.பரசுராம் பாலசுப்பிரமணியன், இதன் நீர் நிர்வாகம் மற்றும் கொள்கைக்கான மையம் 'அக்வாமேப்' (AquaMAP) – ஆய்வு மையத்திற்கு ரூ.5 கோடி நிதி அளித்துள்ளார். இந்த மையத்தின் வளர்ச்சி மற்றும் ஆய்வின் தாக்கம் தொடர்வதற்கு தேவையான முதலீட்டு நிதியாக அமையும்.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் அமைந்துள்ள, அக்வாமேப் ஆய்வு மையம், 2022ல், முன்னாள் மாணவரும், தீம்வொர்க் அனல்டிஸ்க் சி.இ.ஓ பரசுராம் பாலசுப்பிரமணியன் மற்றும் இதிகாசா ரிசர்ச் அண்ட் டிஜிட்டல் தலைவர் கிருஷ்ணன் நாராயணன் அளித்த விதை நிதியில் அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வு மையம், நீர் நிர்வாகம், கொள்கை தீர்வுகளுக்கான பல துறை சார்ந்த முன்னோடி முயற்சியாக உருவாகியுள்ளது. நீர் நிர்வாக தீர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலக ஆதரவுடன் செயல்படுகிறது.
”ஐஐடி மெட்ராஸின் நீர் நிர்வாக ஆய்வுக்கு டாக்டர்.பரசுராம் பாலசுப்பிரமணியனின் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். AquaMAP-பிற்கான அவரது ஆதரவு ஆய்வுக்கு உதவுவதோடு, நம்முடைய நாட்டின் தேவைகளை மனதில் கொண்ட புதுமையான, பெரிய அளவில் செயல்படுத்தக்கூடிய, நீடித்த தன்மை கொண்ட நீர் நிர்வாக தீர்வுகளுக்கு வழி வகுக்கும்,” என்று முன்னாள் மாணவர்கள், வர்த்தக உறவுகளுக்கான டீன் அஸ்வின் மகாலிங்கம் கூறியுள்ளார்.
டாக்டர்.பரசுராம் 1977ல் ஐஐடி மெட்ராஸில் பொறியியல் மற்றும் நிர்வாக பட்டம் பெற்றவர், தொழில் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். தீம்வொர்க்ஸ் அனல்டிக்ஸ் நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கிறார்.
“கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மையம் சிறந்த செயல்பாட்டின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், உயரத்தை அடைவதற்கான காலம் இது. விக்ஸித் பாரத் இலக்கை அடைய அனைத்து மக்களுக்குமான தண்ணீர் பாதுகாப்பு அவசியம். தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்நோக்குகிறோம். இந்த மூல நிதி மூலம், எங்கள் நோக்கம் நிறைவேறும் என நம்புகிறோம்,” என டாக்டர்.பரசுராம் பாலசுப்பிரமணியன் கூறினார்.
“இந்த மையம், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம், மக்கள் பங்கேற்பை அழகாக ஒருங்கிணைக்கிறது. அரசு சாரா அமைப்புகள் மூலம், அரசின் கொள்கை ஆதரவோடு, தொழில்துறை நிதியோடு இதை செய்கிறது. இந்த ஒருங்கிணைந்த தன்மை நவீன நுட்பம் மற்றும் சிறந்த செயல்முறைகள், தண்ணீர் சவால்களை எதிர்கொள்ள அமல் செய்யப்பட வழி செய்கின்றன,” என அக்வாமேப் ஒருங்கிணைப்பாளர் லிஜி பிலிப் கூறினார்.
ஐஐடி மெட்ராஸின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேராசிரியர்கள் நிபுணத்துவத்தை இந்த திட்டம் ஒன்றாக கொண்டு வந்து, தண்ணீர் சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிக்கு வழிகாட்டுகிறது. இந்த மையம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பல்வேறு கிராமங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஒடிஷா மாநிலத்திலும் தண்ணீர் நிர்வாகம் சார்ந்த திட்டத்தை மேற்கொள்ள உதவியுள்ளது.
Edited by Induja Raghunathan