#HBDரஜினிகாந்த்: பன்ச் டயலாக்குகளில் மாஸ் காட்டிய சூப்பர்ஸ்டார்!
69வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஜினி, தன் பட டயலாக்குகளின் வழியே ஹீரோயிசம் மட்டுமல்லாமல், மக்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் பல கருத்துக்களைச் சொன்னவர். இதோ அப்படிப்பட்ட சில பிரபல டயலாக்குகள் உங்களுக்காக...
அதிசயம்.. அற்புதம்.. உண்மையிலேயே சிலரது வார்த்தைகள் தான் அற்புதம் செய்யும், அதிசயமாக மாறி விடுகின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
80ஸ், 90ஸ் கிட்ஸ்களாகட்டும், 2019 கிட்ஸ்களாகட்டும் நிச்சயம் எல்லோருக்கும் ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் யாரென்று கேட்டால் நிச்சயம் அது தலைவர் தான். அந்தளவிற்கு அவரது நடை, உடை, பேச்சு, ஸ்டைல் என எல்லாவற்றிற்கும், எல்லா வயதிலேயும் இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.
இவருக்கு 69 வயசாகிடுச்சா... போங்க சார் காமெடி பண்ணாதீங்க... என்று தான் கூறுவார்கள் ரஜினியின் துள்ளலான நடை உடை பாவனைகளைப் பார்த்தால். ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். இன்று நமது சூப்பர்ஸ்டாருக்கு 69வது பிறந்தநாள்.
ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுகிறதே என நாம் தான் கவலைப்படுகிறோம். ஆனால் ரஜினியோ வேறு மாதிரி. படையப்பா படத்தில் நீலாம்பரி சொல்வார்,
‘வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னமும் உங்களை விட்டு போகல’ என. அதற்கு ரஜினி, ‘அது கூடவே பிறந்தது.. போகவே போகாது...’ என்பார். அது நிஜத்திலும் உண்மை தான்.
அழகு, ஸ்டைலில் மட்டுமல்ல. ரஜினியின் வார்த்தைகளுக்குமே எப்போதும் தனி பவர் உண்டு. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பார்களே அது ரஜினியின் பேச்சுக்கு கட்டாயம் பொருந்தும். அவர் திரைப்படங்களில் பேசும் பன்ச் வசனங்கள் ஆகட்டும், பொது மற்றும் பட விழாக்களில் பேசும் வார்த்தைகள் ஆகட்டும் நிச்சயம் டிரெண்டிங் ஆகிவிடும். அப்படித்தான் சமீபத்தில் ’உங்கள் நான்’ விழாவில் அவர் பேசிய ‘அதிசயம்.. அற்புதம்’ என்ற இரண்டு வார்த்தைகள் வைரலானது.
படங்களில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் கஷ்டப்பட்டு, போராடி முன்னேறியவர் தான் ரஜினி. தற்போதும் அவர் கடைபிடிக்கும் அந்த எளிமை தான், மக்களை இன்னமும் அவர் பக்கம் கட்டி வைத்திருக்கிறது. சும்மா எதுகை மோனையோடு ஹீரோயிசமாக பன்ச் வசனங்கள் இருந்தால் போதாது என மக்களுக்கு பயன்படும் வகையில் படங்களில் வசனங்கள் பேசுவது தான் ரஜினி ஸ்டைல்.
அப்படியாக இதுவரை வந்த ரஜினி படங்களில் மக்களைக் கவர்ந்த சில பன்ச் டயலாக்குகளை இங்கே பார்க்கலாம்...
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக வித்தியாசம் காட்டுபவரான ரஜினி, தனது ஆரம்பகால படங்களில் இருந்தே பன்ச் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கமலோடு சேர்ந்து நடித்த ’16 வயதினிலே’ படத்தில் வரும், ‘இதெப்படி இருக்கு..’ டயலாக்கைச் சொல்லலாம். அப்படத்தில் அவர் வில்லன் தான் என்றாலும், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் இந்த பன்ச் பிரபலம் தான்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினி தந்த படங்கள் எல்லாமே மாஸ்தான். அதில் அண்ணாமலை படத்தில்,
‘மல.. அண்ணாமலை’, ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைச்சது என்னிக்கும் நிலைக்காது’, ‘நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்’ போன்ற டயலாக்குகள் அதிரிபுதிரி ரகம்.
அடுத்ததாக பாட்ஷா. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே மிகவும் பிடித்த தனது படங்களில் ஒன்று தான் பாட்ஷா. அப்படத்தில் வரும்,
‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’, ‘நல்லவங்கள ஆண்டவன் நெறைய சோதிப்பான், ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்’ போன்ற டயலாக்குகள் ரஜினி ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் ஒன்று.
வில்லன் ரகுவரனிடம் ‘உன் பின்னாடி இருக்கறது காசுக்கு சேர்ந்த கூட்டம்.. என் பின்னாடி இருக்கறது தானா சேர்ந்த கூட்டம்’ என ரஜினி ஒரு காட்சியில் கூறுவார். அவர் சொன்னது மாதிரியே அவரது ரசிகர்கள் தானா சேர்ந்த கூட்டம் தான்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ரிலீசான படம் தான் முத்து. அப்படத்தில் ரஜினி தன் ரசிகர்களுக்கு இலைமறை காயாக தன் மனதில் இருந்ததை சொன்ன டயலாக்குக்கள் தான்,
‘நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்,’ என்பது.
அருணாச்சலம் படத்தில், ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற டயலாக் வரும். இப்போதும் பல மேடைகளில் இதை ரஜினியே சொல்வதை நாம் கேட்க முடியும். ரஜினியின் மற்றொரு சூப்பர் டூப்பர் ஹிட் படமான படையப்பாவில்,
‘என் வழி தனி வழி.. அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல..’ போன்ற பன்ச் டயலாக்குகள் இடம் பெற்றிருந்தன. அதே படத்தில், ‘என்னோட ஒரு முகத்தைத்தானே பார்த்திருக்க.. இன்னொரு முகத்தைப் பார்த்தது இல்லையே.. வேணாம் பயந்துருவ’ என ரஜினி பேசும் டயலாக்கும் மாஸோ மாஸ்.
பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குநர் ஷங்கருடன் ரஜினி முதலில் கை கோர்த்த படம் சிவாஜி. இப்படத்தில் வரும், ‘பேரக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல..’ என டயலாக்கைக் கேட்கும் போது தியேட்டரே கைதட்டலில் அதிர்ந்தது. அதே படத்தில் வரும், 'கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்பது ஆல் டைம் ரஜினி ரசிகர்கள் கெத்து டயலாக். அந்த சமயத்தில் பலரது செல்போன்களில் காலர் டியூனாக இருந்த பெருமையும் இந்த டயலாக்கிற்கு உண்டு.
ALSO READ
ஷங்கர் - ரஜினி கூட்டணியில் அடுத்து வந்த பிரமாண்ட படைப்பு எந்திரன். இப்படத்தில் விஞ்ஞானி, ரோபோ என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ரஜினி. அதில் ரோபோ கேரக்டர் பேசும், ‘ம்மேமே..’ என்ற டயலாக் மெர்சல் ரகம்.
லிங்கா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதில் இடம்பெற்ற,
‘நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு பிடிச்சாதான் செய்வேன்.... வாழ்க்கையில் எதுவும் ஈசியில்லை, முயற்சி பண்ணுனா எதுவும் கஷ்டமில்லை..’ டயலாக் மக்கள் மனதில் பதிந்தது.
ரஜினியின் வேறொரு வித்தியாசமான கெட்டப்பில் வெளிவந்த படம் கபாலி. அப்படத்தில், ‘நா வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...’, ‘மகிழ்ச்சி’ என்ற டயலாக்குகள் ரசிகர்களை நிஜமாகவே மக்ழிச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை.
கபாலி இப்படியென்றால், காலா வேறு மாதிரி. அப்படத்தில்,
‘க்யாரே செட்டிங்கா? வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே...’ என்ற டயலாக் டிரெய்லரில் இருந்தே டிரெண்டிங்கானது.
மீண்டும் துள்ளலான, இளமையான ரஜினியைத் தந்தது பேட்ட படம். அப்படத்தில், ‘பார்க்கத்தானே போற இந்தக் காளியோட ஆட்டத்த..’ என்ற டயலாக், ரஜினி ரசிகர்களை தட்லாட்டம் ஆட வைத்தது.
இது தவிர தனது பழைய படங்களிலும் அவர் பேசிய ஒத்தை வார்த்தைகள் பன்ச் டயலாக்குகள் ஆனது. முரட்டுக்காளை படத்தில் வரும், ‘சீவிடுவேன்’ முள்ளும் மலரும் படத்தில் வரும், ‘கெட்டப்பய சார் இந்தக் காளி’ போன்ற டயலாக்குகளும் காலத்தால் அழியாதவை.
தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகிறது. அப்படத்தில் வரும், ‘கிழி.. சும்மா கிழி..’ பாடல் இப்போதே பட்டய கெளப்பி டிரெண்டிங்கில் சாதனை படைத்தது.
தர்பார் படத்தை முடித்து விட்டு ரஜினி, சிவா இயக்கத்தில் ’தலைவர் 168’ படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. நிச்சயம் இப்படத்திலும் தலைவரின் மாஸாக டயலாக்குகள் கொட்டிக் கிடக்கும் என ரசிகர்கள் இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
ரஜினியும் ஸ்டைலும் எப்படி பிரிக்க முடியாததோ, அதே போல் தான் அவரின் படங்களும், பன்ச் டயலாக்குகளும். தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார். இன்னும் நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, ரசிகர்களுக்கு நல்ல படங்களைக் கொடுத்து, மக்கள் எதிர்பார்க்கும் ‘அதிசயம்.. அற்புதத்தை’ ரஜினி செய்ய வேண்டும் என்பது தான் எல்லோரது விருப்பமும்.
ஹேப்பி பர்த்டே தலைவரே...
நண்பர்களே! நீங்களும் உங்களுக்கு பிடித்த ரஜினி பட டயலாக் என்ன என்பதை கமெண்ட்டில் குறிப்பிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..