Paralympics-இல் தங்கப்பதக்கம் வென்ற ஐஐடி பட்டதாரி - சிறுவயதில் கால் இழந்த நிதேஷ் குமாரின் வெற்றி சரித்திரம்!
சிறுவயதில் ரயில் விபத்தில் காலை இழந்தவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நிதேஷ் குமார். ஐஐடியில் படிப்பு, பாராலிம்பிக்கில் பதக்கம் என நாடே பெருமைப்படும் இளைஞனாக உருவாகி இருக்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
பாராலிம்பிக் போட்டிகளில் கீழ் முட்டு குறைபாடு உடையோர் பயன்படுத்தும் எஸ்எல் 3 பிரிவில் நிதேஷ் பங்கேற்றார். இந்தப் பிரிவின் கீழ் விளையாடுபவர்கள் அரைபகுதி ஆடுகளத்தை மட்டும் பயன்படுத்தலாம்.
பரபரப்பான இறுதி ஆட்டம்
பிரிட்டன் வீர் டேனியல் பெத்தேலுடன் இதற்கு முன்னர் விளையாடிய 9 ஆட்டங்களில் தோல்வியை மட்டுமே பெற்றிருக்கிறார் நிதேஷ் குமார். ஆனால், பாராலிம்பிக் போட்டி நிதேஷின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது.
80 நிமிடங்கள் நடந்த பரபரப்பான விளையாட்டில் பெத்தேலை 21க்கு14, 18க்கு 21, 23க்கு21 என்ற செட்களில் வென்று பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான இரண்டாவது தங்கப்பதக்கத்தை நிதேஷ் உறுதி செய்துள்ளார்.
“இதுவரை நடந்த போட்டிகளில் பெத்தேலை தோல்வியடைய வைக்க முடியவில்லை. ஆனால், நாங்கள் சில விளையாடிய சில போட்டிகள் மிக சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. அவரை எப்படி வீழ்த்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. இறுதிப் போட்டியை பற்றி நான் நினைக்க விரும்பவில்லை. அதைப் பற்றியே எண்ணி எனக்கு நானே அழுத்தத்தை கொடுத்துக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். அதே போல, இறுதிப் போட்டியை நினைத்து என்னுடைய தூக்கத்தையும் கெடுத்துக் கொள்ளப் போவதில்லை,” என்று அரையிறுதி ஆட்ட முடிவில் நிதேஷ் கூறி இருந்தார்.
நிதேஷ் உடைய அந்த நிதானம் அவருக்கு வெற்றி தந்திருக்கிறது. எஸ்எல்3 பாரா பாட்மிட்டன் போட்டியில் ஆடுகளத்தின் அரை பகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மையக்கோடே வெளிக்கோடாக கருதப்படும். அப்படி குறுகலான அந்தப் பகுதிக்குள் வெற்றியை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. பொறுமை, உடல்பலம், எந்த angleல் பந்து விழுகிறது என்பதை சரியாக கணிக்கும் திறன் தேவை.
வெற்றிக்கான யுத்தி
இறுதிப் போட்டி தொடங்கியதில் இருந்தே நிதேஷ் குமாரும் பெத்தேலும் மிகக் கவனமாக விளையாடினர். இடைவேளைக்குப் பிறகு ஒரு மராத்தான் ஓட்டம் போல ஆட்டம் 162 விநாடிகள் 122 ஷாட்கள் என நீண்டது. புள்ளிகள் பெத்தேலுக்கு சாதகமா இருந்தது, ஆனாலும் நிதேஷ்க்கு ஒரு திருப்பு முனை விளையாட்டில் இருந்தது.
“ஆடுகளத்திற்கு போவதற்கு முன்பே, இது மனக்கணக்கு விளையாட்டு என்பது எனக்கு தெரியும். முதல் ஆட்டத்தில் நான் அமைதியாக இருந்தேன் அது எனக்கு வெற்றியைத் தந்தது,” என்று நிதேஷ் முதல் ஆட்டத்திற்குப் பிறகு கூறி இருந்தார். “இரண்டாவது ஆட்டத்திலும் நான் தான் முன்னிலையில் இருந்தேன், ஆனால் இடையில் என்னுடைய கவனம் சிதறி புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். அதனால் அவர் விளையாடி புள்ளிகளில் முன்னேற்றம் பெற்றார்.
மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் மிக நெருக்கமான புள்ளிகள் வித்தியாசத்தோடு விளையாடினோம், இறுதியில் மனக்கணக்கு இருந்தால் வெற்றி பெறலாம் என்று நிதானித்து விளையாடினேன், வெற்றி எனது வசமானது,” என்று கூறி இருக்கிறார் நிதேஷ்.
யார் இந்த நிதேஷ் குமார்?
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார். அம்மாநில சீனியர் பாட்மிண்டன் அணியின் பயிற்சியாளராக உள்ளார். கால்பந்தாட்டம் என்றால் நிதேஷ்க்கு அலாதி பிரியம். எப்போதும் பந்தும் காலுமாக இருந்தவர், தனது பதின்ம வயதில் ஏற்பட்ட விபத்தால் காலை இழந்தார். 2009ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் இடது காலை இழந்தவர். செயற்கை கால் பொறுத்தப்பட்டு பல மாதங்களில் படுக்கையிலேயே இருந்தவர் அதற்கு பின்னர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உள்ளார்.
நுழைவுத் தேர்வு மூலம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற்றார். 2013ம் ஆண்டில் முதலாமாண்டு படித்து முடிக்கும் போது மீண்டும் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட பாட்மிண்டன் விளையாடத் தொடங்கி இருக்கிறார். தேசிய பாரா சாம்பியன்ஷிப் தொடரில் ஹரியானா அணிக்காக விளையாடியதே நிதேஷின் முதல் தேசிய அளவிலான போட்டி.
அதன் பின்னர், 2017ல் ஐரிஸ் சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். முழு நேரம் பாட்மிண்டன் பயிற்சி எடுத்துக் கொண்டவர் பாரா பாட்மிண்டன், ஆசிய பாரா பாட்மிண்டன் போட்டிகளிலும் பதக்கங்களை பெற்றுள்ளார். பாரா பாட்மிண்டன் வீரர் பிரமோத் பாகத்தை பார்த்து தானும் இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவை தனக்குள் விதைத்துக் கொண்ட நிதேஷ், அதனை இன்று நிஜமாக்கியுள்ளார்.
“என்னுடைய அப்பா கடற்படையில் பணியாற்றியவர். அவரை சீருடையிலேயே பார்த்து வளர்ந்தவன் நான். நானும் நாட்டிற்காக சீருடை அணிந்து சேவை செய்ய விரும்பினேன். ஆனால்,“ விபத்தில் என் வாழ்க்கையை மாற்றியது. புனேவில் உள்ள செயற்கை மூட்டு மையத்தில் நாட்டிற்காக போராடி கால்களை இழந்த பல ராணுவ வீரர்களைப் பார்த்தேன்.
“உடலில் ஒரு பாகம் இல்லை என்கிற கவலை அவர்களிடம் இல்லை. 50 வயது வீரர் கூட பால்கந்து, சைக்கிளிங் மற்றும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றிருக்கிறார். அவர்களால் முடியும் போது என்னால் ஏன் முடியாது என்ற நம்பிக்கை வந்தது,” என்று தன் வாழ்க்கையின் சோகப்பக்கங்களை வெற்றிப் பக்கங்களாக மாற்றியது குறித்து நிதேஷ் கூறுவது நிச்சயமாக இளைஞர்கள் வாழ்வின் உந்துசக்தி.
கஷ்டங்களையும் சோகங்களையும் கடந்தால் வானில் தெரியும் விடிவெள்ளி போல எல்லாவற்றையும் கடந்து இந்த வாழ்க்கைக்கான விடிவெள்ளி என்ன என்று தேடி வெற்றியடைந்திருக்கிறார் நிதேஷ் குமார். இவருக்கு உலக மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Paralympics2024: வெண்கலம் வென்ற 19 வயது நித்யஸ்ரீ சிவன் - கிரிக்கெட் ரசிகை பேட்மிண்டன் வீராங்கனை ஆன கதை!