ஹூண்டாய் முதல் பென்ஸ் வரை - 28 கார்கள், 29 பைக்குகளை ஊழியர்களுக்கு பரிசாக அளித்த சென்னை நிறுவனம்!
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களின் அயராத பங்களிப்பை பாராட்டும் விதத்தில் 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை பரிசாக அளித்துள்ளது.
குட்டீஸ்களின் தள்ளுவண்டி தொடங்கி பைக், கார் என அனைத்தையும் வாட்டர் சர்வீஸ் செய்து, ஆயுத பூஜை அன்று மக்கள் பூஜை செய்த நிலையில், சென்னையை சேர்ந்த டீம் டீடெய்லிங் சொலியூஷன்ஸ் நிறுவனம் ஆயுத பூஜையில் அதன் ஊழியர்களுக்கு பைக், கார்களை பரிசாக வழங்கியுள்ளது.
சென்னையின் செம்மஞ்சேரி மற்றும் நாவலுாரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் டீம் டீடெய்லிங் சொலியூஷன்ஸ். 2005ம் ஆண்டு வெறும் 4 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று 180 ஊழியர்களுடன் வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சிக்கு அதன் ஊழியர்களின் பங்கு அளப்பாரியது என்று, அதன் ஊழியர்களை பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு பைக் மற்றும் கார்களை பரிசாக வழங்க முடிவெடுத்துள்ளது.
அதன்படி, பணியாளர்களின் பணித்தரத்தினை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு காரையும், 7 ஆண்டுகளுக்கு பணிபுரிந்தவர்களுக்கு பைக்கையும் பரிசாக வழங்கியுள்ளது. அதில்,
ஹூண்டாய், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பெரிய பிராண்டுகளின் வாகனங்களும் அடங்கும். இதற்காக இந்நிறுவனம் ரூ 3.5 கோடி செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த முயற்சியை கையிலெடுத்ததாக தெரிவித்தார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஸ்ரீதர் கண்ணன்.
மேலும், இந்த பரிசினை சர்ப்ரைஸாக வழங்க எண்ணிய நிறுவனம், அதற்காக ஈசிஆர்-ல் உள்ள ஒரு ரெச்சார்ட்டில் பிரம்மாண்டமான விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. விழாவிற்கு ஊழியர்களை அவர்களது குடும்பத்தாருடன் பங்கேற்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, விழாவில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீதர் கண்ணன் பகிருகையில்,
"எங்கள் பணியாளர்கள் எங்கள் மிகப்பெரிய சொத்து என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் அயராத உழைப்பை பாராட்ட விரும்புகிறோம். நிறுவனத்திற்காக அதிக பங்களிப்பை ஆற்றிய ஊழியர்களை முதலில் தேர்வு செய்தோம். மேலும், அவர்களுக்கு கார் அல்லது பைக் வாங்குவது ஒரு கனவு போன்றது. பின் அவர்களுக்கு மாருதி சுஸுகிஸ், ஹூண்டாய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் வரை பல வகையான வாகனங்களை பரிசாக அளித்தோம். 2022ம் ஆண்டு நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் இருவருக்கு காரை பரிசாக வழங்கினோம்."
"இன்று 28 கார்களை பரிசாக வழங்கியுள்ளோம். இதுவரை 30 ஊழியர்களுக்கு கார்களும், 74 தொழிலாளர்களுக்கு இரு சக்கர வாகனங்களும் பரிசாக வழங்கியுள்ளோம். இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு பைக் மற்றும் கார்களை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அவர்கள் எங்களுடன் பல வருடங்கள் பயணித்திருக்கிறார்கள். அவர்கள் என்னையும், நிறுவனத்தையும் நம்பினார்கள். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராத அர்பணிப்பை காட்டிய அவர்களை அங்கீகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார்.
நிறுவனம் ஊழியர்களுக்கான வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்களுடைய பட்ஜெட்டை விட அதிக விலையிலான வாகனத்தைப் பெற விரும்பினால், அவர்கள் மீதமுள்ள தொகையைச் செலுத்தி அவர்கள் விரும்பும் காரைப் பெறலாம் என்று கூறியுள்ளது.
இந்த ஆடம்பரமான பரிசுகளுக்கு அப்பால், நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதில் முனைப்புடன் உள்ளது. உதாரணமாக, திருமணமாகப் போகும் அதன் ஊழியர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.50,000 வழங்கி வந்துள்ளது. தற்போது, அத்தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இந்நிறுவனத்தாருக்கு மட்டும் தீபாவளி முன்கூட்டியே வந்துள்ள நிலையில், இணையத்தில் பகிரப்பட்ட கார் மற்றும் பைக்குகளின் புகைப்படங்களால் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளையும், வயித்தெறிச்சல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
11 ஊழியர்களுக்கு சொகுசு கார் பரிசு; தஞ்சை ஐ.டி. நிறுவன நிறுவனர் கொடுத்த சர்ப்ரைஸ்!