‘உனக்கு தகுதி இல்லாதவருக்காக அழுவதைவிட, பிரியாணிக்காக அழு’–மகளுக்கு அப்பா சொன்ன அட்வைஸ்!
பிறந்த நாள் அன்று தன் மகள் அழுவதைக் கண்டு அவரைத் தேற்றும் விதமாக பிறந்த நாள் வாழ்த்து செய்தியை எழுதியுள்ளார் 21 வயது மகளின் அப்பா.
எந்த வயதினராக இருந்தாலும் பிறந்தநாள் என்றாலே அனைவருக்கும் ஸ்பெஷல்தான். நம் பிறந்தநாளன்று நம் சொந்த பந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்தும்போது மகிழ்ந்து போவோம்.
தற்போதைய டெக்னாலஜி யுகத்திலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் வாழ்த்து பரிமாறப்படுகிறது. இப்படி தினமும் எத்தனையோ வாழ்த்து செய்திகளைப் படித்தாலும் சமீபத்தில் 21 வயது மகளுக்கு அவரது அப்பா அனுப்பிய வாழ்த்துச் செய்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்விட்டர் பயனர் ரூபா ஸ்ரீ இந்த வாழ்த்து செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிறந்தநாளன்று தனது மகள் அழுவதைப் பார்த்த அந்த அப்பா தன் மகளைத் தேற்றும் விதமாக ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த வாட்ஸ் அப் மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி உள்ளது.
“இன்று காலை நீ அழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். உனக்கு தகுதி இல்லாதவர்களுக்காக நீ அழக்கூடாது. உன்னுடைய மதிப்பை நீ உணரவேண்டும். தகுதி இல்லாதவர்களுக்காக அழுவதைக் காட்டிலும் நீ பிரியாணிக்காக அழு…” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியாணி பற்றி இவர் குறிப்பிட்டுள்ளது ட்விட்டர் பயனர்கள் பலரை கவர்ந்திழுத்துள்ளது. இது தவிர தனது மகளுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
“தினமும் உன் உடல் எடை கூடிக்கொண்டே போகிறது. உன் டயட்டில் நீ கவனம் செலுத்தி மாற்றியமைக்கவேண்டும். தினமும் ஹனுமன் சாலிசா படி என்று அடிக்கடி கூறி வருகிறேன். அது உனக்கு மன அமைதியைக் கொடுக்கும்,” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
செப்டம்பர் மாதம் 15ம் தேதி பகிரப்பட்ட இந்த ட்விட்டர் பதிவு 14,000-க்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. 1,200-க்கும் மேல் மறுட்வீட் செய்யப்பட்டுள்ளது.
தகவல் உதவி: இந்துஸ்தான் டைம்ஸ்