17 ஆண்டு பன்னாட்டு நிறுவன வேலையை உதறிவிட்டு, Flipkart-ல் ரூ.12 கோடி பிராண்டை உருவாக்கிய பொறியாளர்!
பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை உதறிவிட்டு, பிளிப்கார்ட்டில் ரூ.12.5 கோடி மதிப்புள்ள பிராண்டை உருவாக்கிய பொறியாளரின் வெற்றிக்கதை.
பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகள் பிராண்டான மோக்ஷி, கடந்த அக்டோபர் மாதம் ஃபிளிப்கார்ட் நிறுவனம் நடத்திய ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை நிகழ்வில் ஆறு நாட்களில் 70,000 ஆர்டர்களை பூர்த்தி செய்து, ரூ.6 கோடி வருவாய் ஈட்டியது.
“வழக்கமான நாட்களைவிட, அப்போது 8 மடங்கு ஆர்டர்களைப் பெற்றோம். முந்தைய ஆண்டுகளில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை விட இது அதிகமானது, 5 மடங்கு அதிகமானது என்று சொல்லலாம்,” என்கிறார் மோக்ஷி நிறுவனர் ரித்தீஷ் குமார் சர்மா.
2020 பிக் பில்லியன் டேஸ் விற்பனை எங்களுடைய சிறந்த விற்பனை அனுபவமாக அமைந்தது என்கிறார் அவர்.
திருப்பு முனை
அரசு மற்றும் ஃபிளிப்கார்ட் வலியுறுத்திய கோவிட் பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றியபடி, 40 நபர்கள் குழு 15 நாட்களுக்கு ஷிப்ட் முறையில் பணியாற்றியது. இதற்கான தயாரிப்பு ஐந்து மாதங்களு முன் துவங்கிவிட்டது.
“வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிய பொருட்களை உற்பத்தி செய்து, ஸ்டாக் செய்தோம். ஃபிளிப்கார்ட் வழங்கிய தரவுகள் எங்கள் திட்டமிடலில் உதவியது,” என்கிறார் ரித்திஷ்.
2016ம் ஆண்டு இந்த பிராண்ட் முதல் முறையாக பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பங்கேற்றது. ஃபிளிப்கார்ட்டில் இந்த பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களில் இது நிகழ்ந்தது.
“திடிரென ஆர்டர் தேவைகள் அதிகரித்ததை உணர்ந்தது நினைவில் உள்ளது. இணையதளத்தில் கோளாறு என நினைத்தோம். அந்த அளவுக்கு விற்பனை வரவேற்பு நம்ப முடியாமல் இருந்தது,” என்கிறார் அவர்.
2017ல் ரித்தேஷ் டாப் சிட்டி பிளிப்ஸ்டார் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டார். பண்டிகை காலம் மற்றும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சிறப்பாக செயல்பட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரித்திஷ் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதை பெற்றுள்ளார்.
வளர்ச்சிப் பாதை
ரித்திஷின் தொழில்முனைவுப் பயணம் தற்செயலாக நிகழ்ந்தது. பொறியாளரான அவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
“வர்த்தகம் எப்படி நடத்துவது என்பது பற்றி அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் நான் எப்போதுமே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என விரும்பினேன்,” என்கிறார் ரித்திஷ்.
அவரது மனைவி பெண்களுக்கான பாரம்பரிய ஆடை வர்த்தகத்தில் விருப்பம் தெரிவித்த போது அவருக்கு வர்த்தகத்திற்கான ஐடியா கிடைத்தது. 2013 ல் மனைவியுடன் இணைந்து பெண்களுக்கான பாரம்பரிய ஆடை பிராண்டை துவக்கினர்.
“இ-காமர்ஸ் வணிகத்தின் சாதகம் பற்றி துவக்கத்தில் அறிந்திருக்கவில்லை என்பதால், ஆப்லைன் வர்த்தகத்தை உருவாக்கினோம். குறைந்த வரவேற்பு மற்றும் பணம் செலுத்துவதில் தாமதத்தால் மிகவும் சிக்கலுக்கு உள்ளானோம்.”
அதன் பின்நண்பர் ஒருவர் ஆன்லைன் வர்த்தகம் பற்றி குறிப்பிடவே, 2016 ல் மோக்ஷி பிராண்டை பிளிப்கார்ட்டில் துவக்கினர்.
வேறு வழி இல்லாத நிலையில் இருந்தோம் என்கிறார் ரித்திஷ். ஆனால் இந்த முடிவு நல்ல பலனை அளித்தது.
நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஆர்டர்கள் எனத் துவங்கி மூன்று மாதங்களில் நாள் ஒன்றுக்கு 150 ஆர்டர்கள் என உயர்ந்தது. ஆன்லைன் வர்த்தகத்தை கவனித்தபடி ரித்திஷ் வேலையிலும் தொடர்ந்தார். ஆறு மாதங்களில் இரண்டையும் கவனிப்பது சிக்கலானது.
ஆனால், இதற்குள் வர்த்தகம் நிலைப்பெற்று ஆன்லைன் வர்த்தகம் பற்றிய தெளிவு உண்டானது என்கிறார் ரித்திஷ். இதனால், 17 ஆண்டுகளாக பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டு விலகினார்.
துவக்கத்தில் இந்த தம்பதி, ஒரு அறை அலுவலகத்தில் பணியாற்றினர். முதலாண்டில், ரித்திஷ் ரூ.1.75 கோடி வருவாய் ஈட்டினார். அதன் பிறகு நிறுவனமும் வளர்ந்தது.
“ஃபிளிப்கார்ட்டில் விற்பனையை துவக்கிய போது வீட்டில் இரண்டு அலமாரிகளில் தான் ஆடைகள் இருந்தன. ஆனால், இன்று 300 க்கும் மேற்பட்ட அலமாரிகள் கொண்டுள்ளோம். பெரிய பணியிடம் மற்றும் 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்டுள்ளோம். ஃபிளிப்கார்ட்டின் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட கிடங்குகளில் எங்கள் ஆடைகள் வைக்கப்பட்டுள்ளன.”
“மோக்ஷி பிராண்ட் சீராக வளர்ந்து 2019ம் ஆண்டில் ரூ.9.75 கோடியை தொட்டது. “இந்த நிதியாண்டில் ரூ.12.5 கோடி விற்றுமுதலை எதிர்பார்க்கிறோம்,” என்கிறார்.
பாரம்பரிய ஆடைகளை தருவித்து விற்பனை செய்வதில் இருந்து சொந்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்தது வளர்ச்சிக்கு உதவியது. 100க்கும் மேலான இயந்திரங்கள் கொண்ட சொந்த உற்பத்தி ஆலை இருக்கிறது என்கிறார் அவர்.
வளர்ச்சி அம்சங்கள்
ஆடைகளின் தரத்தை பாதுகாப்பது, குறித்த நேரத்தில் டெலிவரி செய்வது, சந்தை போக்குகளை ஆய்வு செய்து கவனத்தில் கொள்வது ஆகியவை வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் என்கிறார். ஃபிளிப்கார்ட்டின் ஆதரவையும் முக்கியமாகக் கருதுகிறார்.
“ஃபிளிப்கார்ட் தணிக்கை மேலாளர் தான் எங்கள் பார்வையை விசாலமாக்கினார். அவரால் தான் எங்களை ஆன்லைன் விற்பனையாளராக அல்லாமல், பிராண்டாக கருதத் துவங்கினோம். நாங்கள் பிராண்டை உருவாகக் வேண்டும் என ஃபிளிப்கார்ட் கூறியது,” என்கிறார்.
இவை எல்லாம் எங்கள் சேவையை மேம்படுத்தி வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவேற்ற முடிந்தது என்கிறார் ரித்திஷ். மோக்ஷி பிராண்டை உருவாக்கிய போது, ஃபிளிப்கார்ட்டில் பல்வேறு பிராண்ட்கள் இருந்தன. ஆனால் போட்டியை மீறி வளர்ச்சி வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம் என்கிறார்.
ஒரு தொழில்முனைவோர் பிராண்டை உருவாக்க விரும்பினால் ஆன்லைன் தான் வழி என உணர்ந்துள்ளோம். ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் மேடையின் சாதகமான அம்சம் சிறு வர்த்தகங்களுக்கான வெளிப்படை தன்மை தான் என்கிறார் ரித்திஷ்.
“என்ன பொருள், எந்த விலையில் விற்பனையாகும் எனத் தெரிந்தால், எளிதாக முடிவு எடுத்து உத்திகளை வகுக்கலாம். முக்கியமாக, பணம் செலுத்துவதில் எந்த தாமதமும் இருக்காது. ஆப்லைன் வர்த்தகத்தில் ஐந்து சதவீத வர்த்தகத்தை கடனுக்கு என ஒதுக்க வேண்டும். அதோடு, சந்தை போக்கு அல்லது சந்தை தேவையை கணித்து செயல்பட எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், விற்பனையாகமால் சரக்கு தேங்கும்,” என்கிறார்.
கொரோனா தொற்று காலத்தில் விற்பனை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும், பொதுமுடக்கம் அதிர்ச்சி அளித்தது என்கிறார்.
“கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போது நிச்சயமற்றத்தன்மை நிலவியது. நல்ல காலம் முடிந்துவிட்டது என நினைத்தோம். ஆனால் கடந்த மே மாதம் சந்தை மீண்டும் திறக்கப்பட்ட போது, ஃபிளிப்கார்ட்டில் மீண்டும் இயங்கினோம். ஆரடர்கள் அதிகரித்தன. பிக் பில்லியன் டேஸ் விற்பனை எல்லாவற்றுக்கும் ஈடு செய்தது.”
பெண்கள் பாரம்பரிய ஆடையில் கிடைத்த வெற்றியை அடுத்து ரித்திஷ், குழந்தைகள் மற்றும் மேற்கத்திய ஆடைகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.