எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதியுடன் பெட்ரோல் பம்புகள்: ஜியோ-பிபி நிறுவனத்தின் முயற்சி!
முதல் நிலையம் நவி மும்பையில் திறப்பு!
பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இங்கிலாந்தின் முன்னணி பெட்ரோல் விற்பனையாளரான பிபி நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி இந்தியா முழுவதும் புதிய பெட்ரோல் மையங்களைத் திறக்க ஏற்பாடு செய்து வருகிறது.
ஜியோ-பிபி பிராண்டட் பெயரில் இந்தக் கூட்டணியின் முதல் மொபிலிட்டி ஸ்டேஷனை நவி மும்பையில் உள்ள நவ்டேயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த பெட்ரோல் நிலையத்தில் அனைத்து விதமான எரிபொருள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருளுடன் மின்சார வாகனத்துக்கு தேவையான சார்ஜிங் உள்கட்டமைப்பும் இங்கு இருக்கிறது இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த சவாலான சூழலில் பணிபுரியும், வாடிக்கையாளர்களுக்கு பல எரிபொருள் தேர்வுகளை வழங்கும் உலகத் தரம் வாய்ந்த மொபிலிட்டி நிலையங்களின் வலையமைப்பைக் கொண்டுவருகிறது ஜியோ-பிபி கூட்டணி. ஜியோ-பிபி ஒப்பிடமுடியாத மற்றும் தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும்," என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், ரிலையன்ஸுக்குச் சொந்தமான 1,400 பெட்ரோல் பம்புகள் மற்றும் 31 ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) நிலையங்களில் 49 சதவீத பங்குகளை 1 பில்லியன் டாலருக்கு இங்கிலாந்தை தலைமையமாக கொண்டு செயல்படும் BP நிறுவனம் வாங்கியது.
இந்த விற்பனைக்கு பிறகு ரிலையன்ஸின் தற்போதைய பெட்ரோல் பம்புகள் அனைத்தும் கூட்டணிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல், தற்போது திறந்துள்ள மொபிலிட்டி ஸ்டேஷன்கள் போல் 2025-க்குள் 5,500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது இந்த கூட்டணி.
இந்தியாவின் வாகன எரிபொருள் சில்லறை விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை நாட்டில் உள்ள 78,751 பெட்ரோல் பம்புகளில் பெரும்பான்மையை கொண்டுள்ளன. இதில், ரிலையன்ஸ்க்கு சொந்தமாக 1,427 விற்பனை நிலையங்கள் உள்ளன. அதே சமயம் Rosneft நிறுவனத்தின் சார்பில் நயாரா எனர்ஜி சொந்தமாக 6,250 பம்புகளைக் கொண்டுள்ளது. ஷெல் நிறுவனம் சார்பில் 285 பெட்ரோல் பம்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தற்போதுள்ள 1,400 எரிபொருள் பம்ப்களின் நெட்வொர்க் ஜியோ-பிபி என மறுபெயரிடப்படும், இது வரும் மாதங்களில் வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவுகளின் புதிய வரம்பை முன்வைக்கும். எரிபொருள் விற்பனையில் இந்தியாவின் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் வேகமாக வளரும் எரிபொருள் சந்தையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
ஜியோ-பிபி மொபிலிட்டி நிலையங்கள் இந்த வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. எரிபொருள்கள், EV சார்ஜிங், குளிர்பானங்கள் மற்றும் உணவு என ஜியோ-பிபி மொபிலிட்டி நிலையங்களில் பல்வேறு வசதிகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.