Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'மண்ணை வளப்படுத்த ஏரி, குளங்கள் செழிப்பாகனும்' - 5 ஆண்டுகளில் 200 நீர்நிலைகளை தூர்வாரிய காவிரி கடைமடை இளைஞர்கள்!

2018 கஜா புயலில் வீழ்ந்த விவசாயத்தை மீட்க சொந்த முயற்சியில் ஒரு ஏரியை தூர்வாரிய காவிரி கடைமடை ஒருங்கிணைப்பு அமைப்பின் இளைஞர்கள் 5 ஆண்டுகளில் 200 நீர்நிலைகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

'மண்ணை வளப்படுத்த ஏரி, குளங்கள் செழிப்பாகனும்' -  5 ஆண்டுகளில் 200 நீர்நிலைகளை தூர்வாரிய காவிரி கடைமடை இளைஞர்கள்!

Monday July 29, 2024 , 6 min Read

தமிழர்களின் வாழ்வாதாரமாக மட்டும் இல்லாமல் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வருவது விவசாயம். லாபமில்லை, உடல்உழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற தொழிலாக விவசாயம் இருந்தாலும் இதனை உயிராக நினைத்து மண்ணிற்கும் மக்களுக்கும் செய்யும் சேவையாக விவசாயிகள் இதனைச் செய்து வருகின்றனர்.

#ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் தமிழர்களின் அடையாளங்களுக்காக களத்தில் இறங்கி இளைஞர்கள் போராடத் தொடங்கியதில் இருந்தே சின்ன சின்ன மாற்றங்களை சமுதாயத்திலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

களத்து மேட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போனவர்களெல்லாம் மனநிறைவும் நிம்மதியும் வேண்டும் என்று மீண்டும் கழனிக்கே வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை விவசாயம் சார்ந்து அதிகரித்து வரும் ஸ்டார்ட் அப்களை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்படித் தான் தாங்கள் பிறந்த ஊரில் உள்ள நீர் நிலையை விவசாயத்தை காப்பதற்காக மீட்கலாம் என்று ஒரு ஏரியை தூர்வாரத் தொடங்கிய இளைஞர்கள் சக்தி 5 ஆண்டுகளில் 200 ஏரி, குளங்களை தூர்வாரி பல்லாயிரக்கணக்கானவர்களின் ஜீவாதாரத்தை திருப்பித் தந்திருக்கிறது.

கைபா

சுழற்றிப் போட்ட கஜா புயல்

மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் அமைப்பான கைஃபாவின் (KAIFA Kadaimadai area integrated farmers association) இந்த சாதனை குறித்து அதன் நிறுவனர் நவீன் ஆனந்தன் கூறுகையில், “2018 நவம்பரில் கஜா புயல் பாதிப்பின் போது தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட டெல்டா பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. எங்கள் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் இருந்தது, புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆளுயர மரங்களெல்லாம் வேறோடு சாய்ந்தன, மரங்களோடு சேர்ந்து விவசாயிகளின் நம்பிக்கையும் சாய்ந்தது.

அந்த சமயத்தில் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். புயல் பாதிப்பு செய்தியை கேட்டு நான் உள்பட என்னைப் போன்ற இளைஞர்கள் உதவி செய்வதற்காக சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டோம்.

"என்னுடைய சொந்த ஊர் பேராவூரணி எங்களுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி மிக அதிகம். ஒரு தென்னை மரமாகி காய்ப்பு கொடுக்க குறைந்தது 6 வருடங்கள் ஆகும். புயல் பாதிப்பால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர் விவசாயிகள். தென்னைக்கு மாற்றான நெல், பயிறு போன்றவற்றை விளைவிக்க போதுமான நீரில்லை. புயல் எல்லா விவசாயிகள் வாழ்விலும் கூட புயலை வீசிச் சென்றிருந்தது. வாழ்வாதாரத்துக்கு வழியில்லை ஊரையே காலி செய்து விட்டு போக வேண்டிய ஒரு நிலையில் தான் எங்கள் பகுதி மக்கள் இருந்தனர்."

வேலைக்காக வெளியூர் சென்றிருந்தாலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊரிலேயே வந்து விவசாயம் செய்து வாழ வேண்டும் என்பதே என்னைப் போன்று வெளிஇடங்களுக்கு வேலைக்குச் சென்றிருந்த இளைஞர்கள் சேர்ந்து எடுத்திருந்த முடிவு.

ஆனால், புயல் பாதிப்பால் எங்கள் கிராம மக்கள் ஊரை விட்டே போகும் முடிவெடுத்தது எங்களை அதிர்ச்சியடைய வைத்தது. வாழ்வாதாரமின்றி தவித்தவர்களுக்கு உதவிக்கரம் கோரி தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவராக இருந்த எம்.எஸ்.சுவாமிநாதனை சந்தித்தோம். எங்களுடைய கோரிக்கைகளை பட்டியலிட்டு அதற்கேற்ப நஷ்டஈடு கோரி இருந்தோம்.

4 முறை நடந்த சந்திப்பில் விவசாயிகளுக்கான நஷ்டஈடு கிடைத்தது. ஆனால், விவசாயிகளை ஒருங்கிணைத்த ஒரு சங்கமாக இல்லாமல் தனிநபர்களாக ஆணையத்தை அணுகி இருந்தோம். ஒரு அமைப்பாக இல்லாமல் தனித்தனியாக விவசாயிகளை தொடர்பு கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருந்ததால், தஞ்சாவூர், புதுக்கோட்டை விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கலாம் என்று விவசாயிகளும் இளைஞர்களும் முடிவெடுத்தோம், என்கிறார் நவீன்.

கைபா சேவை

நீருக்கு பாதை

நிவாரணம் என்பது நிரந்தரத் தீர்வல்ல, விவசாயத்தை தொடர வேண்டும். தென்னை மரமாக வருடங்கள் ஆகும் அதனால் மாற்று விவசாயமான நெல், உளுந்து, பயிறுக்கு மாறலாம் என்று விவசாயிகளை வைத்து ஆலோசனை நடத்தினோம். விவசாயிகளுக்கு என்ன தேவை இருக்கிறது என்று பேசும்போது தான் விவசாயத்தில் லாபம் பார்க்க முடியவில்லை என்கிற ஒரு கஷ்டம் எல்லோருக்குமே இருந்தது.

அடுத்ததாக விவசாயத்தில் லாபம் கைகூடாமல் போவதற்கான முக்கியக் காரணமாக இருந்தது தண்ணீர் பற்றாக்குறை. கடலுக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேராவூரணி காவிரியின் கடைமடையாக உள்ளது, கிட்டதட்ட 99 சதவிகித தண்ணீரை எங்களுக்கு முந்தைய கிராமங்களே பயன்படுத்திக் கொள்வதால் எங்களுக்கு தண்ணீர் வருவதே இல்லை. காவிரி நீர் 5 மாதங்களாக பாய்ந்தோடி விளைநிலங்களை வளப்படுத்தும், ஆனால் கடைமடை என்பதால் காவிரியில் இருக்கும் ஒரு சொட்டு நீரான ‘கா’ கூட எட்டிப் பார்ப்பதில்லை, மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டி உள்ளது.

ஆனால், ஒரு மாதம் மட்டுமே பெய்யக்கூடிய மழையை வைத்து வருடம் முழுவதிற்கும் விவசாயம் செய்வது என்பது சாத்தியமில்லை என்கிற நிதர்சனத்தை கூறினார்கள். உணவு பாதுகாப்பு செய்ய வேண்டுமானால் முதலில் காவிரி நீரை கொண்டு வர வேண்டும், மழை நீரை சேமிக்க வேண்டும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் அதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள் என்று கூறினர்.

கைபா2

விவசாயிகள் விடுத்த கோரிக்கை எங்களுக்கும் சரியாகத் தான் தோன்றிது. ஏரி, குளங்கள் நீரில்லாததால் குப்பை கொட்டும் இடங்களாகவும், வறண்ட பிரதேசங்களாகவும் மாறி இருந்தது. தனித்தனியாக இருந்து சாதிக்க முடியாத ஒன்றை ஒருங்கிணைந்து சாதிக்கலாம் என்ற 2020ம் ஆண்டில் காவிரி கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பை உருவாக்கினோம் என்கிறார் அதன் நிறுவனரான நவீன்.

இந்த சமூகப் பணியில் ஈடுபட்டதால் பெங்களூரில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு உள்ளூரிலேயே போதுமான சம்பளத்தில் பகுதி நேரமாக பணியாற்றும் வேலையை தேர்வு செய்தேன். இது மட்டுமின்றி, நானும் விவசாய நிலம் வைத்துள்ளேன், அதில் விவசாயம் செய்து வருமானத்தை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்று துணிந்து இறங்கினேன். நான் மட்டுமல்ல ஏற்கனவே இந்தப் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த இளம் தலைமுறையைச் சேர்ந்த கார்த்திகேயன் வேல்சாமி கைஃபாவின் தலைவராகவும், பிரபாகரன் என்கிற மற்றொரு விவசாயி செயலாளராகவும் செயல்படுகின்றனர். பைலட் பணியை விட்டு வந்த அசோக் ராஜா துணைத் தலைவராகவும், பாலா தண்டாயுதபாணி தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். ஷாஜகான், துணைச் செயலாளர், தங்க. கண்ணன், பொருளாளர் என ஒரு குழுவாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சொந்த முயற்சியில் தூர்வாரும் பணி

புயல் பாதிப்பின் போது மறுவாழ்வு பணிகளைச் செய்த அனுபவம் இருந்த எங்களுக்கு விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு தீர்வைத் தர வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. பெயருக்கு ஏற்றாற் போல பெரிய ஊரணி இருந்தது பேராவூரணியில், ஆனால், அது தண்ணீரின் நடமாட்டமின்றி பாழ்பட்டிருந்தது.

564 ஏக்கரில் இருந்த ஒரு ஏரியை தூர்வாரலாம் என்று முடிவு செய்தோம், இதில் நீரை தேக்கி வைப்பதன் மூலம் அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பத்தாயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்ற நிலை இருந்தது. ஏரிக்கு புத்துயிரூட்டும் பணிக்கு தொடக்கத்தில் கிடைத்த 15 முதல் 20 ஆயிரம் ரூபாயை வைத்து பணிகளைத் தொடங்கினோம். விவசாயிகள் ஒத்துழைப்போடு நாளுக்கு நாள் தாங்களாகவே முன்வந்து பலர் நிதிக்கொடை அளித்தனர்.

பணிநிமித்தமாக வெளிநாட்டில் இருக்கும் பேராவூரணிக்காரரான சிவக்குமார் என்பவர் இந்தப் பணிக்காக ரூ.1 லட்சம் கொடுத்தார். தூர்வாரப்பட்டுக் கொண்டிருந்த ஏரி 3 கிராமங்களுக்கு சொந்தமானது அதில் 2 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திருவிழா கலைநிகழ்ச்சிக்காக திரட்டிய ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியை தூர்வாரும் பணிக்கு கொடுத்துவிட்டனர் பொழுதுபோக்கை விட ஜீவாதாரம் முக்கியம் என்பதை உணர்ந்த மக்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்பது நீருக்கு மட்டும் பொருந்தாது, சிறுக சிறுக எல்லோரும் கொடுத்த நிதியில் 80 நாட்களில் 564 ஏக்கர் ஏரியை 22 லட்சம் செலவில் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தூர்வாரினோம்.

இதில் மற்றொரு சிறப்பான விஷயம் தூர்வாரும் போது தோண்டிய மண்ணில் ஒரு கைப்பிடி மண் கூட வெளியே போகாமல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வலுவாக கரைகளையும் குறுங்காடுகளையும் அமைத்து அந்த இடத்தையே எழில் கொஞ்சும் இடமாக்கினோம்.

நிரம்பிய ஏரியும் மனதும்

அந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்தது இரவு 10 மணிக்கு மடைவெள்ளமென திரண்டு வந்தது காவிரி, சரியாக திட்டமிட்டு 20 நாட்களில் அந்த குளத்தில் காவிரி நீரை நிரப்பி வைத்தோம். ஏரியில் நிரம்பிய நீர் விவசாயிகளுக்கு மட்டும் உதவியாக இல்லை, நிலத்தடி நீர்மட்டமும் 50 அடி உயர்ந்தது. எங்களுடைய பணி செய்தித்தாள்களில் வெளியானதைப் பார்த்து நீதிபதி சுப்பிரமணியன் எங்களை நேரில் வந்து பாராட்டிச் சென்றார்.

குளத்தில் நீர் தேக்கி வைக்கப்பட்ட பிறகு தூர் வாரும் பணிக்கு பணம் கொடுத்தவர்களை நேரில் அழைத்து மரியாதை செய்தோம். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி ஒரே ஒரு குளம் தூர்வாரப்பட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் 100 குளங்களை தூர்வார வேண்டும் என்று எங்களுக்கு ஊக்கம் தந்தார். அது வரையில் எந்த இலக்கும் எங்களுக்கென இல்லை, எங்கள் பகுதிக்கு நீர் வளத்தை ஏற்படுத்துவது என்று மட்டுமே சிந்தித்திருந்தோம். ஆனால் சமூகத்திற்கான தேவை என்பதை உணர்ந்து இதனை தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.

"தானாக முன்வந்து மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக இருக்கும் சிவக்குமார் என்பவர் சொந்தமாக ஜேசிபி வாங்க ரூ.8 லட்சம் நிதியுதவி செய்தார். Milapல் நிதி திரட்டி மற்றொரு ஜேசிபி வாங்கினோம். எங்களுடைய ஒற்றைச் செயல் ஒரு பெரிய இயக்கமாக மாறியது. கிராம மக்களுக்கும் நீர்நிலைகளைத் தூர்வாருவது குறித்த விழிப்புணர்வும் இருந்ததால் நாங்களே அவர்களை அணுகும் முன்னர் பலர் எங்களைத் தேடி வந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தனர்."

இளைஞர்களின் சக்தி

5 ஆண்டுகளாக ஓய்வின்றி செயல்பட்டதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 200 நீர்நிலைகளை சுத்தம் செய்திருக்கிறோம். முதல் குளம் தூர்வாரிய போது மட்டுமே நிதி திரட்டி செய்தோம் மற்ற 199 கிராமங்களில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கென்று சேர்த்து வைத்திருந்த தொகையை தூர்வாரும் பணிக்காக ஊராட்சிகள் கொடுத்தன.

தன்னார்வலர்களாக செயல்படும் கிராமத்து இளைஞர்கள் யாரும் இதுவரையில் சம்பளம் என்று எதையும் எதிர்பார்க்காமல் இந்த சமூகப் பணியை செய்து வருகின்றனர்.

"5 ஆண்டுகளில் 200 குளங்களை தூர்வாரி இருக்கிறோம், அடுத்ததாக 1,000 குளங்களை சீர்படுத்தும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை அதிக அளவில் இந்தப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்."

சொந்தமாக ஜேசிபி இருப்பதால் குறைந்த செலவிலேயே எங்களால் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முடியும். 2 ஜேசிபி வாகனங்களை மட்டுமே வைத்து தூர்வாரும் பணியை செய்ததால் 200 நீர்நிலைகளை சுத்தப்படுத்தவே 5 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இதுவே கூடுதலான வாகனங்கள் இருந்தால் இதை விரைவாக செய்து முடிக்க முடியும். சொல்லப்போனால் தூர்வாரும் பணிக்காக எங்களை அணுகி 40 கிராமங்கள் காத்திருக்கின்றன. எல்லா மாவட்டங்களிலும் 100 இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் 800 குளங்களை எங்களால் சீர்படுத்த முடியும். ஆனால், அதற்கு தேவையான வாகனமும், குளத்தை தூர்வார அரசிடம் இருந்து NOC கிடைத்தாலே இதை சாத்தியப்படுத்திவிடலாம், என்கிறார்.
கைபா 3

நவீன் ஆனந்தன், நிறுவனர், கைஃபா(இடது)

குளத்தில் இருந்து தூர்வாரும் மண்ணை கரைகளை பலப்படுத்தவும், குறுந்தீவை உருவாக்கவுமே பயன்படுத்துகிறோம் என்பதால் அரசிடம் இருந்து எங்களுக்கு எளிதில் அனுமதி கிடைத்துவிடுகிறது. இதே போல, ஆக்கிரமிப்பு இருக்கும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் தூர்வாரும் பணிகைளை செய்கிறோம்.

15 ஜேசிபிகள் இருந்தால் ஒரு மாதத்திலேயே 3 திட்டங்களை நிறைவேற்ற முடியும். எனவே, ஜேசிபி வாகனங்களை வாங்குவதற்காக பலரையும் அணுகி வருகிறோம், இது சாத்தியமானால் நிச்சயமாக எங்களின் பயணமும் வெற்றியடையும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நவீன்.

கைஃபா இளைஞர்களின் 200 நீர்நிலைகளை தூர்வாரிய பணியானது மேலும் தொடர வேண்டும் என்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேசன் இவர்களின் சேவையை பாராட்டியுள்ளார். கைஃபாவின் பணிகளை பாராட்டவோ, உதவவோ சிந்தனை கொண்டவர்கள் நிறுவனர் நவீன் ஆனந்தனை 7019971799 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.