ஈசியா லோன் கிடைக்க உதவும் நிறுவனம்: வீட்டுக்கடன் சேவையை சுலபமாக்கும் Easiloan!
மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஈஸிலோன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீட்டுக்கடன் சேவையை மும்பை, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் வழங்கி வருகிறது. இதன் மேடையில் எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, எல்.சி.சி., எச்.டி.எப்.சி., உள்ளிட்ட வீட்டுக்கடன் சேவை நிறுவனங்கள் உள்ளன.
இந்தியாவில் வீடு வாங்குவது என்பது அதிக காகித வேலை மற்றும், வீட்டுக்கடனுக்காக பல்வேறு அலுவலகங்களில் ஏறி இறங்கி அலைவது ஆகியவற்றை உள்ளடக்கியது. இரண்டுக்குமே நேரமும், பணமும் தேவை. பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் இந்த செயல்முறையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
2021ல் துவக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த ’
’, வீட்டுக்கடன் தொடர்பான சிக்கல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்த்து வைக்கிறது. வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் தங்கள் மேடை மூலம் விண்ணப்பிக்கும் போது கடன் அனுமதி பெறும் காலம் ஒரு வாரத்திற்கும் குறைவாக இருப்பதாகவும், கடன் வழங்குவதற்கான காலம் 70 சதவீதம் குறைந்திருப்பதாகவும் ஈஸிலோன் தெரிவிக்கிறது. வீட்டுக்கடன் செயல்முறைக்கு 3 முதல் 4 வாரங்களில் ஆகின்றன. ஆவணங்கள் தொடர்பான விஷயங்களால் இது இன்னும் அதிகமாகலாம்.கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் இடையே பாலமாக செயல்படுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

மற்ற வங்கிகளோடு, எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, எல்.சி.சி., எச்.டி.எப்.சி., உள்ளிட்ட வங்கிகள் இந்த மேடையில் இணைந்துள்ளன. ஏஏஏ வாடிக்கையாளர்கள், சம்பளம் பெறாத ஊழியர்கள் உள்ளிட்ட மற்ற பிரிவினருக்கும் கடன் வழங்க இந்த மேடை உதவுகிறது. இந்த நிறுவனத்தை பிரமோத் கதுரியா மற்றும் விஷால் டாவ்டா துவக்கினர்.
2021 ஜூலை மாதம் நிறுவனம் தனது செயல்பாடுகளை துவக்கியது. பிரமோத் வீட்டுக்கடன் மற்றும் ரியல் எஸ்டேட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளவர். விஷால், லோதா குழுமம், எச்டிஎப்சி ரியாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர் 2022 ஜனவரியில் நிறுவனத்தில் இருந்து விலகினார்.
50 பேர் குழுவை கொண்ட 'ஈஸிலோன்' இரண்டு மாதங்களில் 750 வீட்டுக்கடன் விண்ணப்பங்களை பைசல் செய்திருப்பதாகக் கூறுகிறது. 50 சதவீத வாடிக்கையாளர்களை இந்த முறையில் அணுகலாம் என்பதால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை நாடி வருவதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
நிறுவனத்திடன் வரும் வீட்டுக்கடன் விண்ணப்பங்கள் 1500 ஆக அதிகரித்திருப்பதாகவும், 3 நகரங்களில் ரூ.500 கோடி அளவுக்கு இதன் மதிப்பு உள்ளதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
தனது மேடை மூலம் நிகழும் கடன்களுக்கு வங்கியிடம் இருந்து நிறுவனம், கமிஷன் பெறுகிறது. ஈஸிலோன் சேவை இலவசமானது.

2021 செப்டம்பரில் நிறுவனம் டுமாரோ கேபிட்டல் தலைமையில் ரூ.8 கோடி நிதி திரட்டியது. அதன் பிறகு, மேடை மூலம் வழங்கப்பட்ட கடன்கள் 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
“வீட்டுக்கடன் துறையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிக்கும் சேவையை வழங்குவதால் ஈஸிலோன் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்கிறோம். வீட்டுக்கடன் தொடர்பான தகவல் சார்ந்த முடிவெடுக்க வாடிக்கையாளர்களுக்கு உதவுவதோடு, டிஜிட்டல் கடன் செயல்முறையை எளிதாக்குகிறது,” என்று டுமாரோ கேபிடல் சி.இ.ஓ ரோகினி பிரகாஷ் யுவர்ஸ்டோரியிடம் பேசும் போது தெரிவித்தார்.
அனைவருக்குமான சேவை
துவக்கத்தில், வாடிக்கையாளர்கள் சிறந்த வாய்ப்பை தேர்வு செய்ய பல்வேறு வங்கிக் கடன் வாய்ப்புகளை ஒப்பிட்டுப்பார்க்கும் சேவையை வழங்கியது. இதற்காக, ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அணுகியது.
முதல் சுற்று நிதிக்கு பிறகு நிறுவனம் முழு அளவிலான சேவை வழங்கும் வகையில் செயல்படுகிறது. வீட்டுக்கடன் செயல்முறை தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் சேவை அளிக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த விண்ணப்ப செயல்முறை, தகவல்களை சேகரித்து அலசி ஆராய்ந்து சேவை அளிக்கிறது.
“சிறந்த வாய்ப்புகளுடன் இணைத்து வைக்கும் விரிவான ஆனால் எளிமையான செயல்முறையாக இது அமைகிறது. வீட்டுக்கடனுக்கு டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம், இதன் பிறகு நிதி விஷயங்களை ஆராய்ந்து தேவையான அனுமதியை வழங்குகிறது. எங்கள் மேடை டெவலப்பர் மற்றும் பங்குதாரர்களுக்கு விற்பனை வெற்றி மற்றும் ரொக்கம் தொடர்பான நிகழ்நேர தகவல்களை அளிக்கிறது,” என்கிறார் பிரமோத்.
2021 மார்ச் மாதம் வரை ஈஸிலோன், ரூ.4 லட்சம் வருவாய் கொண்டிருந்தது. கடந்த நிதியாண்டுக்கான நிதி நிலை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நிதி நுட்பம்
அல்லய்டு மார்க்கெட் ரிசர்ச் தகவல்படி, நிதிநுட்ப கடன் சந்தை 2020ல் 449.89 பில்லியன் டாலராக இருந்தது 2030ல் 4,957.16 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிசிபஹார், மணிடேப், பேசிக்ஹோம்லோன் போன்ற நிறுவனங்கள் இந்த பிரிவில் உள்ள நிலையில் வீட்டுக்கடன் செயல்முறை தானியங்கிமயமாக்கும் ஒரு சில ஸ்டார்ட் அப்களில் ஈஸிலோன் வருகிறது. பெருந்தொற்று காரணமாக நிதிநுட்ப நிறுவனங்களின் தேவை அதிகரித்திருப்பது, வீட்டுக்கடன் சிக்கல்களைக் குறைத்திருப்பதாக பிரமோத் கூறுகிறார்.
எனினும், எல்லாவற்றையும் வழங்கும் சேவையை உருவாக்குவதில் சவால்கள் இல்லாமல் இல்லை. வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை மேடையில் இணைப்பது சவால்களில் ஒன்றாக இருக்கிறது.
“வங்கிகளை தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பது, கடன் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வல்லுனர்களைக் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால் விரிவான சந்தை ஆய்வு வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஈர்க்க உதவுகிறது,” என்கிறார் பிரமோத்.
ஈஸிலோன், சொத்து மீது கடன், வேறு வங்கிக்கு கடன் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் வீட்டுக்கடனில் கணிசமான சந்தை பங்கை பெறவும் திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: பூஜா ராஜ்குமாரி | தமிழில்: சைபர் சிம்மன்