பாலியல் வன்முறைக்கு ஆளாகிய பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் சென்னை பெண் ரசிகா சுந்தரம்!
தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தினால், சென்னையை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான "இமாரா சர்வைவர் சப்போர்ட் ஃபவுண்டேஷனை" தொடங்கி, சமூகத்தில் நிலவும் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் ரசிகா சுந்தரம்.
தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தினால், சென்னையை தளமாகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான "இமாரா சர்வைவர் சப்போர்ட் ஃபவுண்டேஷனை" (Imaara Survivor Support Foundation) தொடங்கி, சமூகத்தில் நிலவும் பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் ரசிகா சுந்தரம்.
கனாடவில் பிறந்த ரசிகா, அவருக்கு 8 வயதாகும் போது குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பினார். ஏனெனில், அவரது பெற்றோர் அவரது மகள்களை இந்திய கலாச்சாரத்திற்கு மத்தியில் வளர்க்க வேண்டும் என்றும், அவர்கள் பல்வேறு கலை வடிவங்களில் ஈடுபட வேண்டும் என்றும் விரும்பினர்.
அதன்படி, சென்னையில் பட்டப்படிப்பை படித்த ரசிகா பின், டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். மேலும், அகதிகள் உரிமைகள், புலம்பெயர்ந்தோர் உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை மையமாகக் கொண்ட மனித உரிமைகளில் இன்டர்ன்ஷிப் செய்தார் மற்றும் பாலின பாதுகாப்பு திட்டத்திலும் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையிலே 2022ம் ஆண்டில், ரசிகா சுந்தரம் அவரது நெருங்கிய நண்பரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினார். இது அவரது முழு உலகத்தையும் உலுக்கி மிகவும் இருண்ட இடத்திற்குள் அவரை தள்ளியது. அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். கவலை அடைந்தார். அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று அவருக்கு தெரியவில்லை. அவர் உதவியை நாட முடிவு செய்தார்.
ஆனால், மனநல நிபுணர்களுடனான அனுபவங்கள் அவரை மேலும் மனச்சோர்வடையச் செய்தது.
"நான் எதிர்கொண்ட தாக்குதலை உடல் மற்றும் பாலியல் வன்முறையின் கீழ் வகைப்படுத்தலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு நல்ல சிகிச்சையாளரைப் பெறுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படியான ஒருவரைக் கண்டுபிடித்தபோதும், அவர் ஒரு மனநல மருத்துவரைப் பரிந்துரைத்தார். ஏனெனில், எனக்கு மன ஆரோக்கியத்திற்கு மருந்து தேவை என்று அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களில் பலரால் அவமானப்படுத்தப்பட்டேன். மேலும், சிகிச்சையாளர்களின் கட்டணமும் அதிகமாகயிருந்தது. பெரும் தேடலின் இறுதியல், சரியான மருந்தைப் பரிந்துரைத்த ஒரு நல்ல மனநல மருத்துவரையும், ஒரு தகவலறிந்த சிகிச்சையாளரையும் கண்டறிந்தேன்," என்று சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார் ரசிகா.
மருத்துவரை கண்டறிவது ஒருபுறம் கடினமாக, மறுபுறம் ஒரு நல்ல வழக்கறிஞரைக் கண்டுபிடிப்பது மற்றொரு தடையாகியது. வழக்கறிஞரை கண்டறிவதற்கான விரிவான தேடுதலுக்குப் பிறகும், அவரை முழுமையாக ஆதரிக்கக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அதனால் அவரை துஷ்பிரயோகம் செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்வதைக் கைவிட்டதாகவும் ரசிகா தெரிவித்தார்.
அவருக்கு நேர்ந்த சம்பவம், மற்றும் அது கொடுத்த அனுபவங்கள் அவரை Neeti Project -ஐத் தொடங்க வழிவகுத்தது. பின்னர், அது 2023ம் ஆண்டில் சென்னையை தளமாகக் கொண்ட "இமாரா சர்வைவர் சப்போர்ட் ஃபவுண்டேஷன்" எனும் என்ஜிஓ-வாக பதிவு செய்யப்பட்டது.
இத்தன்னார்வ அமைப்பானது இந்தியச் சூழலில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்கும் மற்றும் இறுதியில் முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்போடு செயல்படுகிறது. என்ஜிஓ ஆனது பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த மறுசீரமைப்பு அணுகுமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட 700 பேருக்கு உதவிய என்ஜி!
"பாலியல் அடிப்படையிலான வன்முறைக்கு ஆளாகி, வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கிறோம். அத்துடன் வன்முறைகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல பகுதிகளுக்குச் சென்று, பாலின அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன?, அது எவ்வாறு நிலவுகிறது?, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை ஏன், எப்படி ஆதரிக்கலாம் என்பதை மக்களுக்குக் கற்பித்து வருகிறோம். தவறான சூழ்நிலைக்குள் செல்லும் ஒருவருக்கு எவ்வாறு உதவுவது என்பதையும் மக்களுக்கு கற்பிக்கிறோம்," என்று பகிர்ந்தார் ரசிகா.
இமாரா, சட்ட, மருத்துவ மற்றும் காவல் உதவிக்களுக்கான ஆதரவுகளை ஒரே இடத்தில் வழங்கும் மையமாகும். ஆரம்பத்தில் நீதி திட்டம் என்று அழைக்கப்பட்டது. இமாராவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ரசிகாவிற்கு, பெண்ணிய ஆய்வாளரும், ஜிபிவி ஒருங்கிணைப்பாளருமான, அமைதிக் கல்வியாளரான, மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றும் கீர்த்தி ஜெயக்குமார் வழிநடத்துகிறார்.
இதேபோன்ற திட்டங்களில் பணிபுரியும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் அவர் ஒத்துழைத்து பணியாற்றுகிறார். பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கும் இது ஒரு முக்கியமான கருவியான ஒப்புதல் கல்வியை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்கும் நோக்கத்துடன், பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து இமாரா செயல்பட்டு வருகிறது
"இதுவரை 700 பேரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியவர்கள் எங்களை அணுகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அல்லது சட்ட உதவியை வழங்குவது எங்களது பணி அல்ல. ஏனெனில், நாங்கள் பயிற்சி பெற்ற வழக்கறிஞரோ அல்லது சான்றளிக்கப்பட்ட உளவியலாளர் அல்ல. எங்களிடம் உள்ள தரவுத்தளத்தைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னை மற்றும் அவர்கள் தேடும் ஆதரவின் அடிப்படையில், நாங்கள் அவர்களுக்கு உதவக்கூடிய நபரின் தொடர்பு விவரங்களைப் பகிர்வோம்," என்றார்.
பெற்ற தாயால் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி, இமாராவின் உதவியுடன் அதிலிருந்து மீண்ட இந்திய பெண் குறித்து ரசிகா பகிருகையில்,
"பொருளாதார துஷ்பிரயோகம், கட்டாய கருக்கலைப்பு மற்றும் பணத்திற்காக பல திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டது உள்ளிட்ட பல ஆண்டுகளாக அவரது தாயிடமிருந்து துஷ்பிரயோகத்தை அனுபவித்து வந்தார். அவரது நான்கு திருமணங்களில், மூன்று திருமணங்கள் பதிவு செய்யப்படாததால், அவர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தார். தப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முற்பட்ட அவருக்கு, அதற்கான நிதி வசதி இல்லை. அவருக்கு உளவியல் ரீதியான முதலுதவி அளித்து, நாங்கள் வழங்கும் சேவைகளை விளக்கிய பிறகு, அவரது இருப்பிடத்தின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு மையத்துடன் அவரை இணைத்தோம்," என்றார்.
எந்தவொரு அரசு சாரா நிறுவனத்திற்கும் முதல் 3 வருடங்கள் ஒரு முயற்சியான காலம் என்பதால், நிதி திரட்டுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வழங்கிய சிறிய தொகையில் இமாராவை நடத்தியுள்ளார்.
மேலும், பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட, நிறுவப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தை கொண்டுள்ளது. துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகுபவர்களுக்கென ஒரு செயலியை உருவாக்கி, அதன்மூலம் ஒரே கிளிக்கில் அவர்களுக்கான தரவுகளை கண்டறிந்து கொள்ளக்கூடிய வசதியை உருவாக்குவதை எதிர்கால நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழில்: ஜெயஸ்ரீ
பாலியல் தொழிலில் இருந்த பழங்குடியின பெண்களுக்கு வருமானத்துடன் சுயகெளரவத்தையும் கொடுத்த இ-ரிக்ஷா!