ரூ.7,000 கோடி கடன்; கணவர் தற்கொலை - ‘காபி டே’ ப்ரான்டை மீட்ட சிங்கப்பெண் மாளவிகா ஹெக்டே!
கடனில் மூழ்கிய ‘கஃபே காபி டே’ நிறுவனத்தை மீட்டெடுத்த தைரிய மங்கை மாளவிகா ஹெக்டேவின் பயணமும், வியூகங்களும் வியக்கத்தக்கவை.
‘கஃபே காபி டே’ நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவை நினைவிருக்கிறதா?
சர்வதேச ஜாம்பவான்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு நட்சத்திர இந்திய பிராண்டை உருவாக்க முழு தலைமுறைக்கும் உத்வேகம் அளித்தவர்தான் வி.ஜி.சித்தார்த்தா. ஆனால், ஜூலை 2019-இல், அவரது துயர மரணம் நாட்டையே உலுக்கியது.
அன்று சித்தார்த்தாவின் சோகமான மறைவு, கோடிக்கணக்கான இந்திய காபி பிரியர்களின் இதயங்களில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்த அபாரமான பிராண்டுக்கு பேரழிவுத் தரக்கூடிய ஒன்றையும் ஏற்படுத்தியது.
ஆம்! Cafe Coffee Day நிறுவனம் 7,000 கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மீட்பராக உருவெடுத்த மாளவிகா ஹெக்டே
கஃபே காபி டே நிறுவனத்துக்குள் இத்தனை சிக்கல்களுக்கு நடுவில் அப்போது நுழைந்தார் மாளவிகா ஹெக்டே. கணவர் சித்தார்த்தாவின் மரணம் என்னும் பெரும் துயரத்திலும் நிறுவனத்தை மீட்டெடுக்கும் மீட்பரானார் அவர்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தும் நிறுவனத்துக்கான தன் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து 2020ம் ஆண்டு வாக்கில் ‘கஃபே காபி டே’யின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
ரூ.7,000 கோடி கடனில் தத்தளித்த ‘கஃபே காபி டே’ நிறுவனத்தில் பணியாற்றிய 25,000 பேரின் எதிர்காலம், சித்தார்த்தா மரணத்தால் இருளடைந்து கிடந்தபோது, நிறுவனத்தை மீட்டெடுக்க உறுதிபூண்டு பணியாளர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளித்து ஒற்றை மீட்பராக களத்தில் இறங்கினார் மாளவிகா.
ஒருபுறம் எகிறும் கடன், மறுபுறம் நாடு கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி, நாட்டு மக்கள் கடும் துன்பத்திலும் உறவினர்களைப் பறிகொடுத்து பெரும் சோகத்திலும் வாழ்ந்து கொண்டிருந்த தருணம். அதோடு லாக்டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த கடையால் ஏற்பட்ட நஷ்டம் என கொரோனா ஏற்படுத்திய ஆறாத வடு இன்று வரை பலரால் மீண்டெழ முடியாத இழப்புகளை தந்ததுள்ளது.
அட்டகாசமான நகர்வுகள்
இத்தகு தருணத்தில் கஃபே காபி டே போன்ற ஒரு நிறுவனத்தை மீட்டெடுக்கும் பணி, உலகின் மிக மிகக் கடினமான பணியே என்பதை மாளவிகா அறிந்திருந்தார். ஆனாலும் தளரவில்லை. இவரது புத்திக்கூர்மையான சில முடிவுகளினாலும், மன உறுதியினாலும் தடைகளைக் களைந்து சவால்களைச் சந்திக்கும் மதிநுட்பத்தினாலும் சாம்பலிலிருந்து உயிர்பெறும் ஃபீனிக்ஸ் பறவை போல் கஃபே காபி டே உயிர்த்தது.
கடனிலிருந்து மீள அனைவரும் செய்யும் தவறு, தங்கள் நிறுவனத் தயாரிப்புகளின் விலைகளை அதிகரிப்பதுதான். ஆனால், மாளவிகா அந்தத் தவறைச் செய்யவில்லை. மாறாக,
லாபம் தராமல் நஷ்டத்தில் இயங்கிய சில பல சில்லறை விற்பனை நிலையங்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். மீதமுள்ள சில்லறை கஃபேக்களை நெறிப்படுத்தி வர்த்தகத்தை தெளிந்த நீரோடையாக்கினார்.
உள் மறுசீரமைப்புக்கு கூடுதலாக, மாளவிகா ஹெக்டே பிளாக்ஸ்டோன் மற்றும் ஸ்ரீராம் கிரெடிட் நிறுவனத்துடன் செயலூக்கக் கூட்டு சேர்ந்து செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கச் செய்தார்.
2021-ஆம் ஆண்டளவில், அவரது இடைவிடாத முயற்சியால் நிறுவனத்தின் கடன் 7000 கோடியில் இருந்து ரூ.1,731 கோடியாக சுருங்கியது. தொடர்ந்த அவரின் புதிய நடவடிக்கைகளால், 2023-ஆம் ஆண்டில், கடன் தொகை நிர்வகிக்கக் கூடிய அளவில் ரூ.465 கோடியாக மேலும் குறைந்துவிட்டது.
நம்பிக்கையூட்டிய உத்திகள்
மாளவிகா தனது நிர்வாகத் திறமையான அணுகுமுறையால் காபி டே ஊழியர்களிடம் நம்பிக்கையை விதைத்தார். கடன்களை விரைந்து அடைத்து, புதிய முதலீடுகளிலும் கவனம் செலுத்தியது நிறுவனம் மீதான நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தியது.
முதலில் ரூ.10 கோடி, ரூ.20 கோடி, ரூ.30 கோடி என சின்னச் சின்ன கடன்களை அடைக்கத் தொடங்கி, பெரிய கடன்களை அடைக்க வங்கிகளிடம் அவகாசம் வாங்கி பின்னர் அவற்றையும் அடைக்கத் தொடங்கியது, பெரும் நெருக்கடி தந்த கடன்களை தனது குடும்ப, நிறுவனச் சொத்துகளை விற்று அடைத்தது மாளவிகாவின் சமயோஜித உத்தியை குறித்தது.
பெரிதாக வருவாய் தராத இடங்களில் காபி டே கிளைகளைக் களையெடுத்தது, மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் புதிய கிளைகளை நிறுவியது, கொரோனா லாக்டவுன் காலத்தில் காபி தூள்கள், காபி உபகரண தயாரிப்பில் கவனம் செலுத்தியது மறுபக்கம் என மாளவிகாவின் வியூகங்கள் அனைத்தும் மலைக்கத்தக்கவை.
“நமக்கு சவால்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை சமாளிக்கும் சக்தியும் நமக்கு நிறையவே இருக்கின்றன. காபி டே நிதிச் சுமை அனைத்தையும் அடைக்கும் தொலைநோக்கு திட்டத்தை நோக்கி பயணிக்கப் போகிறோம். இந்தப் பயணத்தில் முன்னோக்கிச் செல்ல உங்கள் ஒவ்வொருவரின் உறுதுணையும் மிகவும் அவசியம்.”
‘கஃபே காபி டே’ நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பொறுப்பை ஏற்கும் முன்பு மாளவிகா தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறிய இந்த வார்த்தைகள் இன்று நிஜமாக்கியிருக்கிறது. இதற்குப் பின்னால் மாளவிகாவின் மகத்தான உழைப்பும் முயற்சியும் நிறைந்திருக்கிறது.
“மறைந்த கணவரின் பெருமைமிக்க பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதே என் பணி” என்று சொன்னதைச் செய்து காட்டிய மாளவிகா வேறு யாருமல்ல, கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள்தான்.
மாளவிகாவின் கதை ஒரு நிறுவனத்தின் உயிர்வாழ்வைப் பற்றியது மட்டுமல்ல. மீட்டெழுச்சி, கடினமான சமயத்தில் சாதுர்ய தலைமைத்துவம், தன் கணவன் கட்டிக்காத்த ஒன்றன் மீதான காதல் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கதை.
அவரது இடைவிடாத பயணம், கஃபே காபி டே-க்கு புத்துயிர் அளித்தது, ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியது. கூடவே, கஃபே காபி டே காபியின் சுகமான நறுமணம் இந்திய நகரங்களில் தொடர்ந்து பரவுவதை உறுதி செய்தது.
தற்கொலை; விபத்து; தொடர் தோல்வி: தளராது வாழ்க்கையை தன்வசப்படுத்திய சுனில் ராபர்ட்-இன் ஊக்கமிகு பயணம்!
Edited by Induja Raghunathan