Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'நான் என் வீட்டை விற்று, குடும்பத்தின் எதிர்காலத்தை அடமானம் வைத்தவன்' - ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட பைஜு ரவீந்திரன்!

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரன், ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டு, தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இருந்து விரைவில் மீண்டுவந்து பைஜூஸின் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக லின்கிட் இன் பதிவு மூலம் பதிவிட்டுள்ளார்.

'நான் என் வீட்டை விற்று, குடும்பத்தின் எதிர்காலத்தை அடமானம் வைத்தவன்' - ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட பைஜு ரவீந்திரன்!

Friday March 07, 2025 , 4 min Read

பைஜூஸ்-க்கும், பைஜூ ரவீந்திரனுக்கும் எதிராக சமூகவலைதளப் பக்கத்தில் அந்நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து, பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் பதிவுகள் தொடர்பாக தொடர்ந்து அமைதி காத்து வந்த பைஜூ ரவீந்திரன், சமீபத்தில் நீண்ட தன்னிலை விளக்கப் பதிவு ஒன்றை linkedin-இல் வெளியிட்டிருந்தார்.

ரவீந்திரனின் அந்தப் பதிவும், அதன் தொடர்ச்சியாக ஊழியர்கள் அளித்த கமெண்ட்டும், அதற்கு ரவீந்திரன் அளித்த விளக்கமும் என மீண்டும் பைஜூஸின் பெயர் சமூகவலைதளப் பக்கங்களில் டிரெண்டிங்காகி இருக்கிறது.

Byju Raveendran

பைஜூஸ் சர்ச்சை

இந்தியாவின் பிரபல இணையவழி கல்வி நிறுவனமான பைஜுஸ் (BYJU'S), 2011ம் ஆண்டு நிறுவப்பட்டதாக இருந்தாலும், கொரோனா ஊரடங்கு சமயத்தில்தான் அதன் சொத்து மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது.

எவ்வளவு வேகமாக குறுகிய காலத்தில் வளர்ந்ததோ, அதே அளவு குறுகிய காலத்தில் வீழ்ச்சியையும் சந்தித்தது பைஜூ. மீண்டும் பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், இணையவழி கற்றலுக்கான தேவை குறைந்ததால் பைஜுஸ் நிறுவனத்தின் வருவாய் குறைந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பைஜுஸ் ரூ.8,245 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது.

அப்போது ஏற்பட்ட சரிவில் இருந்து இன்னமும் மீள முடியாமல் தவித்து வருகிறது பைஜூஸ். பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வரும் அந்நிறுவனம், நிதி நெருக்கடி, முதலீட்டாளர்களின் அதிருப்தி என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அதோடு, பல ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு மேலாக சம்பளமும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

byjus

பைஜூஸ் கொடுத்த வாக்குறுதி

சம்பளம் கிடைக்காமல், பைஜூஸ் நிறுவனம் மீது அதிருப்தியில் உள்ள ஊழியர்கள், தங்களது ஆதகங்கங்களை எல்லாம் சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் தனது விரக்தியை பகிர்ந்த ஒரு ஊழியருக்கு, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான பைஜூ ரவிந்திரன் தனது சமூகவலைதளப் பக்கம் வாயிலாக பதிலளித்துள்ளார்.

தன்னை லிங்க்டு இன்-ல் இருந்து வெளியேறச் சொன்ன ஊழியரின் பதிவிற்கு விளக்கமளித்து, தனது லிங்க்டு இன் பக்கத்தில் நீண்ட விளக்கமொன்றை அளித்துள்ளார் பைஜூ ரவீந்திரன். அவரது அந்த உணர்ச்சிகரமான பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

அப்பதிவில் அவர்,

“நான் BYJU'S இன் பைஜூ, நான் இப்போது இங்கே இருக்கிறேன். நான் இங்கு சீக்கிரமாக வந்திருக்க வேண்டும். ஆனால், நான் எனது நிறுவனத்தை உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக இருந்தேன். பின்னர், நான் கட்டிய அனைத்தையும் சேமிப்பதில் மிகவும் மும்முரமாக இருந்தேன்.

நான் உங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள நீண்ட காலமாக விரும்பினேன். ஆனால் நீதி நிலைநாட்டப்படுவதற்கும் உண்மை வெற்றி பெறுவதற்கும் நான் காத்திருந்தேன். இன்று, நான் காத்திருக்க விரும்பவில்லை. இன்று, என்னால் காத்திருக்க முடியாது.

எனது உயிர்வாழ்வுப் போராட்டம்

எங்கள் பங்குகளை விற்று என் குடும்பம் பெரும் செல்வத்தை ஈட்டியதாக உங்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது பாதி கதைதான். அந்த 'செல்வம்' எல்லாம் எங்கள் நிறுவனத்தில் திரும்ப சேர்க்கப்பட்டதாக உங்களுக்குச் சொல்லப்படவில்லை. BYJU'S-ஐ உருவாக்கிய மனிதராக நீங்கள் என்னை அறிந்திருக்கலாம். ஆனால், நான் தனது வீட்டை விற்று தனது குடும்பத்தின் எதிர்காலத்தை அடமானம் வைத்த மனிதனும் கூட. எங்கள் பணியை உயிர்ப்புடன் வைத்திருக்க எனக்குச் சொந்தமான அனைத்தும் இப்போது விற்கப்பட்டுள்ளன.

இந்த உயிர் வாழ்வுப் போராட்டத்தில் நான் ஏன் எல்லாவற்றையும் பணயம் வைக்கிறேன் என்று அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. ஆனால், நான் எப்போதும் எல்லாவற்றிலும் ஈடுபடுகிறேன். நான் அப்படித்தான். சில நலம் விரும்பிகள் என்னிடம், ஒன்றுமில்லாமல் தொடங்கி, எல்லாவற்றையும் பெற்று, பின்னர் ஒன்றுமில்லாமல் போனதற்கு நான் நம்பமுடியாத அளவிற்கு அப்பாவியாக இருந்தேன் என்று கூறுகிறார்கள். ஆனால், ஒன்றுமில்லாமல் வந்தவர்கள் எதற்கும் ஒருபோதும் பயப்படுவதில்லை.

இது எளிதானதல்ல. இன்று, என் குடும்பத்தை கற்பனை செய்ய முடியாத துயரத்தில் ஆழ்த்திய குற்ற உணர்ச்சியுடன் நான் வாழ்கிறேன். ஒரு காலத்தில் எனது அனைத்து பங்குதாரர்களுக்கும் நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் வருத்தத்துடன் வாழ்கிறேன். என்னை நம்புங்கள், திவால் நிலையைத் தடுக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.

Byjus

Byju Raveendran

நம்பிக்கையோடு இருங்கள்

நான் அதிகமாக வேலை செய்வதிலும், குறைவாகப் பேசுவதிலும் நம்பிக்கை கொண்டவன். எனவே, இந்த நீண்ட பதிவுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுள் இருக்கும் ஆசிரியர் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஒரு ஆசிரியரை ஒரு வகுப்பறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லலாம், ஆனால், அந்த ஆசிரியரிடமிருந்து வகுப்பறையை ஒருபோதும் அகற்ற முடியாது. மீண்டும் கற்பித்தலுக்குச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். கற்றலை மறுவரையறை செய்யும் சில புதிய AI-இயக்கப்படும் கற்றல் தயாரிப்புகளை நாங்கள் உருவாக்க முடிந்தது.

இனிமேல், நீங்கள் அதை என்னிடமிருந்து நேரடியாகக் கேட்பீர்கள். ஏனென்றால் நேரடி நடவடிக்கையாகத்தான் BYJU’S ஐ உருவாக்கினோம். என்னை நம்புபவர்கள் என்னை வலிமையாக்குகிறார்கள். நம்பாதவர்கள் என்னை இன்னும் கூடுதல் வலிமையாக்குகிறார்கள். அவர்கள் சொல்வது போல், விட்டுக்கொடுக்காத ஒருவரை நீங்கள் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.

BYJU'S-இன் கடந்த கால மற்றும் நிகழ்கால உறுப்பினர்கள் அனைவருக்கும், எனக்கு ஒரே ஒரு செய்தி மட்டுமே உள்ளது:

”வலுவாக இருங்கள், பெருமையாக இருங்கள். என் தவறுகளுக்கு என்னை மன்னியுங்கள். இந்திய தொழில்முனைவர் விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டுவர உங்களால் பங்களிக்கமுடிந்தால், எங்களுடன் தொடர்பில் இருங்கள். நாங்கள் முன்பை விட வலுவாக வருவோம்,” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
BYJU ED

ஊழியர்களின் கேள்வி

பைஜூஸ் நிறுவனம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ரவீந்திரனின் இந்த தன்னிலை விளக்கப் பதிவு அவரது ஊழியர்களிடம் நம்பிக்கையைவிட, கொஞ்சம் கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவர்களது பதிவுகள் மூலம் தெரிய வருகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கௌசிக் லாடே என்ற ஊழியர்,

"உங்களுடைய ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், அது எங்களுடைய பில்களை செலுத்தாது. பைஜூஸை உருவாக்கிய ஊழியர்களான எங்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகிறோம். அதோடு, எங்களுக்கு பிஎப் தொகையும் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனத்துடன் நாங்கள் நிலைத்து நின்றோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இப்போது உங்களிடம் போராடி வருகிறோம். பைஜூசை உருவாக்கியவர்களை அமைதியாக துன்புறுத்த வேண்டாம். உங்கள் வார்த்தைகள் ஊக்கம் அளித்தாலும், உங்கள் செயல்கள் தான் இங்கு முக்கியம்," என பதிவிட்டுள்ளார்.

அந்த ஊழியருக்கு பதில் அளித்துள்ள பைஜூ ரவீந்திரன்,

"பில்கள் செலுத்தப்படும். மறு வருகை நிகழும். நிலுவைத் தொகை தீர்க்கப்படும். உடனடியாக இல்லை என்றாலும், கண்டிப்பாக நடக்கும். நான் எனக்காக மட்டும் இங்கு போராடவில்லை. அதற்காக அதுவரையில் நீங்கள் என் வார்த்தைகளை நம்ப வேண்டாம். நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்," என பதிலளித்துள்ளார்.
Byjus

வளர்ச்சியும், வீழ்ச்சியும்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீழ்ந்தவர்களும் உண்டு.. புதிதாக முளைத்து வாழ்ந்தவர்கள் உண்டு. அப்படி உலகமே ஸ்தம்பித்து, குழம்பிக் கிடந்த அந்தக் காலக்கட்டத்தில், இணையவழிக் கல்வி மூலம் புதிய புரட்சியை ஏற்படுத்தி, அசுர வேகத்தில் வளர்ச்சியைக் கண்ட நிறுவனம்தான் பைஜூஸ்.

ஆனால், தொடங்கிய வேகத்திலேயே அதன் சரிவும் ஆரம்பித்து விட்டது. கணக்கு முறைகேடுகள், தவறாக நிர்வாக அணுகுமுறை, பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெறும் அளவிற்கு, செல்வாக்காக இருந்த பைஜூ ரவீந்திரன், தற்போது தனது ஊழியர்களிடமே தன்னிலை விளக்கம் கூறும் அளவிற்கு எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.