'இனி கம்ப்யூட்டரை இயக்க கண் இமைத்தாலே போதும்' - பட்டுக்கோட்டை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!
இளம் தலைமுறையினர் தங்களது கற்பனைகளுக்கு உயிர் கொடுத்தால் சிறப்பான, பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்பதை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவன் நிரூபித்துள்ளார்.
இளம் தலைமுறையினர் தங்களது கற்பனைகளுக்கு உயிர் கொடுத்தால் சிறப்பான, பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்பதை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவன் நிரூபித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாக கல்வி கற்றனர். சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளோடு, இணையம் மூலமாக பாட்டு, இசைக்கருவிகளை வாசிப்பது, கணினி பயிற்சி போன்ற ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றனர்.
அப்படி பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிஷோர், கொரோனா காலத்தில் சுயவிருப்பத்துடன் ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்ட “பைத்தான் கோடிங்” மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பலனளிக்கக்கூடிய கண்டுபிடிப்பை உருவாக்கி அசத்தியுள்ளார்.
கண் இமைத்தாலே கணினி இயங்கும்:
தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நவம்பர் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில், பல்வேறு மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 7,500க்கு மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50 கல்வி நிறுவனங்களின் மூலம் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும், தங்களுடைய 235 குறுந்திட்ட ஆய்வுகள், 1,065 போஸ்டர்கள், திட்ட ஆய்வுகளை கண்காட்சியில் இடம் பெற்றன.
இதி, பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படித்து வரும் கிஷோர் மற்றும் அவரது நண்பரான சிவ மாரிமுத்து ஆகியோரது அறிவியல் கண்டுபிடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாணவர் கிஷோர், கண் இமைத்தாலே கம்ப்யூட்டர் இயக்கக்கூடிய வகையில் 'Virtuval Mouse' என்ற புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவன் கிஷோர் கூறுகையில்,
"இன்றைய ஆன்லைன் யுகத்தில் கம்ப்யூட்டர் மூலமாக பலவிதமான விஷயங்களை செய்ய முடியும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் கம்யூட்டரை இயக்குவது என்பது சவாலான காரியமாக உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளும் கம்ப்யூட்டரை இயக்குவது போல் ஒரு மென்பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என முயற்சி செய்தேன். ஏற்கனவே கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக கற்ற பைத்தான் கோடிங் மூலமாக கண் இமைத்தாலே கம்ப்யூட்டர் இயங்கக்கூடிய வகையில் புரோகிரோம் செய்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இயக்குகிறது?
கண் இமைத்தாலே கம்ப்யூட்டர் எவ்வாறு இயங்கும் என்பது குறித்தும் மாணவன் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.
“கம்ப்யூட்டர் கர்சர் அசைவை கண் இமைகளை மூடி திறப்பதன் மூலமாக இயக்க முடியும். மென்பொருள் கோடிங் மூலமாக இரண்டு புள்ளிகளை இணைத்துள்ளேன். இதன் சென்சார் இயக்கம் மூலம் கணினியை இயக்குபவர்கள் கண்களை மூடி திறப்பதன் மூலமாக கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பயன்பாட்டை திறக்க முடியும். பயனர் தலையை நகர்த்தும் போது கர்சர் ஆனது அவர்கள் குறிப்பிடும் பயன்பாட்டிற்கு நகர்ந்து செல்லும், அதன் பின்னர் இரண்டு கண்களையும் சிமிட்டினால் அந்த பயன்பாடு திறக்கப்படும்,” என்கிறார்.
முதற்கட்டமாக கையில்லாத மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட பயனுக்காக இதை உருவாக்கி வரும், கிஷோர் நாளாடைவில் இதனை ஏடிஎம், ராணுவம் போன்றவற்றிலும் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்.
தற்போது ஏடிஎம் இயந்திரத்தில் தனது கண்டுபிடிப்பை பயன்படுத்த என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார். ஏடிஎம் மையங்களில் தனது கண்டுபிடிப்பை கொண்டு சேர்க்கும் போது அறிவியலுடன் பாதுகாப்பும் முக்கியம். எனவே, ஆதார் எண்ணையும், தனது கண்டுபிடிப்பையும் இணைத்து பாதுகாப்பான ஏடிஎம் இயந்திரத்திரத்தை மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்க முயன்று வருகிறார்.
கரன்ட் இன்றி இயங்கும் ‘ஸ்மார்ட் மிக்ஸி’ - 20+ கண்டுபிடிப்புகள் வைத்துள்ள ‘வில்லேஜ் விஞ்ஞானி’ பிஜூ சேட்டா!