Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பில் கேட்ஸ் அண்மையில் விரும்பிப் படித்த 5 புத்தகங்கள்!

பில் கேட்ஸ் படித்த புத்தகங்களில் அவரைப் பெரிதும் பாதித்த ஐந்து புத்தகங்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

பில் கேட்ஸ் அண்மையில் விரும்பிப் படித்த 5 புத்தகங்கள்!

Thursday August 18, 2022 , 2 min Read

உலகின் நான்கு பெரும் பணக்காரர்களில் ஒருவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவர் தொழிலில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் ’பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மூலம் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இப்படி எப்போதும் பரபரப்பாக இருந்தாலும்கூட பில் கேட்ஸ் தவறாமல் ஈடுபடும் ஒரு விஷயம் புத்தக வாசிப்பு. இதை அவர் ஒருபோதும் மறப்பதில்லை.

1

பில் கேட்ஸ் படித்த 5 புத்தகங்கள்

இந்த ஆண்டு கோடைக் காலத்தில் இந்த ஐந்து புத்தகங்களையும் அவர் வாசித்து முடித்திருக்கிறார்.

1.    The Power – Naomi Alderman

இந்தப் புத்தகத்தை பில் கேட்ஸ் அவரது கொள்ளுப்பேத்தி பரிந்துரைத்ததால் படிக்க ஆரம்பித்திருக்கிறார். பெண்களின் பங்களிப்பைப் பற்றியும் அவர்களுக்கு நடக்கும் அநீதிகளையும் இந்தப் புத்தகம் படம்பிடித்து காட்டியிருக்கிறது.

உலகில் உள்ள அனைத்து பெண்களின் உடம்பிலும் மோசமான மின் அதிர்ச்சி வெளிப்பட்டால் எப்படி இருக்கும் என்கிற யோசனையின் அடிப்படையில் இந்தப் புத்தக்கம் எழுதப்பட்டிருக்கிறது.

The Power புத்தகம் இன்றைய உலகில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அநீதிகளையும் பற்றி ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது என்கிறார் பில் கேட்ஸ்.

அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்படும் அனைவரையும் அவர் பாராட்டியிருக்கிறார்.

2.    Why We’re Polarized – Ezra Klein

பொதுவாக வருங்காலத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார் பில் கேட்ஸ். ஆனால், அரசியலைப் பொருத்தவரை அமெரிக்காவில் காணப்படும் பிளவுபாடு அவரைக் கவலைகொள்ளச் செய்வதாகத் தெரிவிக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் Ezra Klein ’அடையாளப்படுத்துவதுதான்’ இந்த பிளவிற்குக் காரணம் என்கிறார். ஒரு குழுவாக நாம் நம்மை எப்படி அடையாளப்படுத்துகிறோமோ அதுவே நம் தீர்மானங்களுக்கு காரணமாக அமைகிறது என்கிறார்.

இந்தப் புத்தகம் அமெரிக்காவின் அரசியல் சூழலைப் பற்றி பேசினாலும் மனித உளவியலைப் பற்றியும் ஆழமாக பேசியிருக்கிறது.

3.    The Lincoln Highway – Amor Towles

பில் கேட்ஸ் தனக்குப் பிடித்தமான ஐந்து புத்தகங்களின் பட்டியலில் A Gentleman in Moscow புத்தகத்தை முதலில் இணைத்திருந்தார். பிறகு, அதைக் காட்டிலும் The Lincoln Highway புத்தகம் பிடித்துப்போனதால் இதை மாற்றிவிட்டார்.

1954ம் ஆண்டில் நடப்பது போல் இந்தப் புத்தகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு சகோதர்கள் தங்கள் அம்மாவைத் தேடி நெப்ராஸ்காவிலிருந்து கலிஃபோர்னியா செல்கின்றனர்.

அண்ணனின் கடந்தகால வாழ்க்கையில் தொடர்புடைய பதின்ம வயதினர் ஒருவரால் இந்த சகோதரர்களின் பயணம் தடைபடுகிறது.

பிரபல ஹீரோக்களின் பயணங்களைக் கண்டு உந்துதல் பெற்ற ஆசிரியர், Amor Towles, தனிப்பட்ட பயணங்கள் எப்போதும் நாம் எதிர்பார்ப்பது போல் அமைந்துவிடுவதில்லை என்பதை வலியுறுத்துகிறார்.

4.    The Ministry for the Future – Kin Stanley Robinson

பில் கேட்ஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை கடந்த ஆண்டு அவர் விளம்பரப்படுத்தியபோது பலர் அவரிடம் வந்து The Ministry for the Future புத்தகத்தைப் படிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்தப் புத்தகத்தில் பல பிரச்சனைகள் சுவாரஸ்யமான முறையில் கையாளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் புத்தகத்தை படித்தது மகிழ்ச்சியாக இருந்ததாக பில் கேட்ஸ் தெரிவிக்கிறார். இதைப்பற்றி சுருக்கமாக சொல்வது கடினம் என்கிறார்.

பல தசாப்தங்களில் பல கண்டங்களில் கதைக்களம் பரந்து விரிந்திருக்கும்படி இதன் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

5.    How the World Really Works – Vaclav Smil

பில் கேட்ஸிற்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர் Vaclav Smil. இந்தப் புத்தகம் அவரது தலைசிறந்த படைப்பு என்கிறார் கேட்ஸ். இந்த எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள் போல் இல்லாது இந்தப் புத்தகம் பாமர மக்களுக்காக எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம்.

மனித வாழ்க்கை எப்படியெல்லாம் வடிவம் பெறுகிறது, அதற்கான அடிப்படை விஷயங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம் என்கிறார் பில் கேட்ஸ்.

தமிழில்: ஸ்ரீவித்யா