ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை இழக்கும் பெங்களூரு - எதற்காக தெரியுமா?
பெங்களூரு நகரம் எதிர்கொண்டு வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுக்கு ரூ.19,725 கோடியை இழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு நகரம் எதிர்கொண்டு வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுக்கு ரூ.19,725 கோடியை இழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெரிசலால் திணறும் பெங்களூரு:
ஐ.டி. நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் என்ற பெயர்களைக் கேட்டாலே நம் அனைவரது நினைவுக்கும் வரும் முதல் பெயர் பெங்களூர் என்பதாக தான் இருக்கும். அந்த அளவுக்கு உலகின் பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்களின் அலுவலகங்களும், தினமும் புதுப்புது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பெங்களூருவில் நிரம்பி வழிகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் அங்கு சென்று வேலை செய்கின்றனர். இதனால் நெரிசல் மிக்க இந்த நகரம் மிகப்பெரிய போக்குவரத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
சமீபத்தில் கூட டிராபிக் காரணமாக சரியான நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமல் பெங்களூரு சாலையோரம் ஏராளமானோர் ஊழியர்கள் லேப்டாப் உடன் பணியாற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
அதேபோல், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பெங்களூரு மக்கள் போக்குவரத்து நெரிசலால் தாங்கள் சந்தித்து வரும் அன்றாட பிரச்சனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு ரூ.20 கோடி இழப்பு:
பெங்களூரு நகரம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுக்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இழப்பை சந்தித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல், வாகன நெரிசல், சிக்னல்களில் காத்திருப்பு போன்றவற்றால், நேரமும், எரிபொருளும் விரயமாகி, பெங்களூரு நகருக்கு ஆண்டுக்கு ரூ.19,725 கோடி இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து நிபுணர் எம்.என்.ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இக்குழுவினர், சாலை திட்டமிடல், மேம்பாலம், போக்குவரத்து மேலாண்மை, உள்கட்டமைப்பு பற்றாக்குறை போன்ற பிரச்னைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். 60 மேம்பாலங்கள் முழுமையாக செயல்படும் நிலையில், பெங்களூரு நகரம் ஆண்டுக்கு 19,725 கோடி ரூபாய் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்து வருவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், நகரில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், வீட்டு வசதி, கல்வி போன்ற இதர வசதிகள் மேம்பட்டு வருவதாகவும் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துள்ள 14.5 மில்லியன் மக்கள்தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் 1.5 கோடியைக் கடந்துள்ளது.
சாலை விரிவாக்கம்:
எவ்வாறாயினும், சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை என்று குழு வலியுறுத்தியது. வேலை வாய்ப்பு மற்றும் அந்த வேலைக்காக இடம் பெயரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்புகளை உருவாக்குவது போதுமானதாக இல்லாதது தான் இந்த போக்குவரத்து பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
பெங்களூரு 2023 ஆம் ஆண்டுக்குள் 88 சதுர கிலோமீட்டரிலிருந்து 985 சதுர கிலோமீட்டராக விரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நகரத்தை 1,100 சதுர கிலோமீட்டராக விரிவாக்க முன்மொழிந்துள்ளது.
மறுபுறம், சாலையின் நீளம் அதிகரிப்பு வாகனங்கள் மற்றும் பரப்பளவு அதிகரிப்புக்கு விகிதாசாரமாக இல்லை. சாலையின் மொத்த நீளம் சுமார் 11,000 கி.மீ. இது நமது போக்குவரத்து தேவைக்கு போதுமானதாக இல்லை என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து நிபுணர் எம்.என்.ஸ்ரீஹரி கூறுகையில்,
"மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அவர்களின் வேலை வாய்ப்புகள் தற்போதுள்ள உள்கட்டமைப்புகளின் வளர்ச்சியுடன் பொருந்தவில்லை. போக்குவரத்து தாமதங்கள், நெரிசல், அதிக பயண நேரம், நேரடி மற்றும் மறைமுக செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது."
செய்ய வேண்டியது என்ன?
நகரத்திற்கு ரேடியல் சாலைகள், வெளிவட்டச் சாலைகள் தேவை என்றும், ஒவ்வொரு 5 கி.மீ.க்கு ஒரு வட்டப் பாதையையும் ரேடியல் சாலைகள் மூலம் இணைக்க வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு சாலை போக்குவரத்தை பூர்த்தி செய்ய சுரங்கப்பாதை, நிலத்தடி அடிப்படையிலான சாலை அமைப்புகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒவ்வொரு 1-2 கி.மீட்டருக்கும் சுரங்கப்பாதை வாயிலான மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகள் சேவையை தொடங்குவது குறித்து அரசு ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார். பெங்களூரு எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்னைகள் குறித்து விளக்கினார். அப்போது, அந்த இடையூறுகளை நீக்கும் வகையில் விரிவான அறிக்கை தயாரிக்குமாறு மத்திய அமைச்சர் சிவக்குமாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவின் பேரில் தான், போக்குவரத்து மேலாண்மை மற்றும் சாலை திட்டமிடல் குறித்து, ஸ்ரீஹரி குழுவினர் ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையை துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் வழங்கியுள்ளது.
பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க, கர்நாடக அரசும், மத்திய அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.