'நான் தோல்வியைக் கண்டு பயப்படுவதில்லை' - மயோசிடிஸ் நோயை தாண்டி தொழில்முனைவிலும் சிறக்கும் சமந்தா!
சினிமாவைத் தாண்டி, தொழில் முனைவோர் உலகிலும் அவரது கால்தடத்தை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறார். ஏற்கனவே, பேஷன் பிராண்டான Saaki ஐ-ன் இணை நிறுவனராக உள்ள நிலையில், வெல்னஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'சீக்ரெட் அல்கெமிஸ்டில்' முதலீடு செய்து, அவரது தொழில் முனைவு பயணத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்.
அறிமுகப்படமான 'ஏ மாயா சேசவே' தொடங்கி, லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'ஊ அண்டவா' பாடல் வரை கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் வழியாக, நடிகை சமந்தா ரூத் பிரபு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது, சினிமாவைத் தாண்டி, தொழில் முனைவோர் உலகிலும் அவரது கால்தடத்தை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறார். ஏற்கனவே, பேஷன் பிராண்டான Saaki -இன் இணை நிறுவனராக உள்ள நிலையில், வெல்னஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'சீக்ரெட் அல்கெமிஸ்டில்' (Secret Alchemist) முதலீடு செய்து, அவரது தொழில் முனைவு பயணத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்.
2021ம்ஆண்டு அங்கிதா தடானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோரால் தொடங்கப்பட்ட 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' நிறுவனம், அரோமாதெரபி அடிப்படையிலான தயாரிப்புகளை வழங்குகிறது.
முடி வளர்ச்சி, மூட்டு வலி, தோல் பராமரிப்பு போன்றவற்றுக்கு அத்தியாவசிய எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் ரோல்-ஆன்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் பல தயாரிப்புகளை வழங்குகிறது. சமீபத்தில் இன்ஃப்ளெக்ஷன் பாயின்ட் வென்ச்சர்ஸ் தலைமையிலான விதை சுற்றில் இந்த ஸ்டார்ட் அப் 5,00,000 டாலர் நிதி திரட்டியுள்ளது.
தசை வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஆட்டோ இம்யூன் நிலையான மயோசிடிஸ் நோய் சமந்தாவிற்கு கண்டறியப்பட்டபோது, அவர் வழக்கமான சிகிச்சையைத் தொடங்கினார். மேலும், மாற்று தீர்வுகளையும் தேடத் தொடங்கினார். அவரது தேடலில் கிடைத்ததே 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்டின்' தயாரிப்புகள்.
"ஒரு தயாரிப்பைத் தொடர்ந்து பயன்படுத்தி அது உங்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறும்போது, அந்த தயாரிப்பு சிறப்பாக இருக்கிறது என்பதை அறிவீர்கள். அதை நீங்கள் ஒருநாள் பயன்படுத்தவில்லை என்றாலும், ஏதோ ஒன்று குறைவதாக உணர்வீர்கள். அப்படியான இணைப்பு தான் எனக்கும் சீக்ரெட் அல்கெமிஸ்ட்டுக்கும் இடையேயானது. ஒவ்வொரு நாளும் அவர்களின் தயாரிப்புகளை தேடினேன். வெளிநாட்டில் சிகிச்சைக்காகச் சென்றிருந்தபோது, அரோமாதெரபி எனக்கு எதிர்பாராத ஆறுதலையும் குணப்படுத்துதலையும் அளித்தது."
நான் ஒரு பொருளை விற்க இங்கு வரவில்லை. சீக்ரெட் அல்கெமிஸ்ட்டில் இருந்து எதையும் வாங்கும் போகிறபோக்கில் வாங்கக்கூடாது என்று விரும்புகிறேன். நன்கு அறியப்பட்ட காரணத்துடன் தயாரிப்பை வாங்க வேண்டும், என்று ஹெர்ஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் தெரிவித்தார் நடிகை சமந்தா.
ஆரம்பத்தில் மயோசிடிஸை சமாளிப்பது அவருக்கு கடினமாக இருந்துள்ளது. பாரம்பரிய மருத்துவம் வேலை செய்யாதபோது உதவியற்ற உணர்வை உணர்ந்துள்ளார். அப்போதுதான் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு மாற்று நடைமுறைகளைக் கடைப்பிடித்தார். இப்போது, அவரது உணவில் இருந்து அவருடைய தினசரி வழக்கம் வரை அனைத்தும் கவனமாக நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
சீக்ரெட் அல்கெமிஸ்டின் தயாரிப்புகளை பயன்படுத்தி கிடைத்த அனுபவத்தினால், அந்நிறுவனத்தில் ஒருவராகியுள்ள அவர், நறுமண சிகிச்சையில் அவருக்கு கிடைத்த அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, அப்பிராண்டின் தயாரிப்பு மேம்பாடு மற்றும் பேக்கேஜிங் குறித்த அவரது உள்ளீட்டை வழங்கவுள்ளார். அரோமாதெரபி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்குவதிலும் மிகுந்த ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார்.
தொழில் முனைவுக்கு துாண்டியது எது?
"எங்களது முதல் சந்திப்பிலே எங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமையை உணர்ந்தோம். நாங்களும் சந்தை மற்றும் அரோமாதெரபி தயாரிப்புகளை அதே ஆர்வத்துடனும் வீரியத்துடனுமே பார்க்கிறோம். இந்த நேர்மையான ஆர்வமே நாங்கள் ஏன் ஒன்றுசேர நினைத்தோம் என்பதற்கான ஆரம்பப் புள்ளி. இன்னும் நறுமண சிகிச்சையைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு சரியான வகையான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் சமந்தா மிகுந்த ஈடுபாட்டைக் காட்டி வருகிறார்," என்று அங்கிதா தெரிவித்தார்.
எதையாவது உருவாக்கி, மக்களின் வாழ்க்கையில் நேர்மறையாகப் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணமே தன்னை ஒரு தொழிலதிபராகத் தூண்டியது என்ற சமந்தா, ப்ரீஸ்கூலான 'ஏகம்', தயாரிப்பு நிறுவனமான 'ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்', 'சாகி' என்ற ஆடை பிராண்டின் இணை நிறுவனர், மற்றும் சென்னையின் 'உலக பிக்கிள்பால் லீக்கின் உரிமையாளரும் ஆவார்.
மேலும், அர்பன் கிசான் மற்றும் நரிஷ் யூ ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார். ஒரு முதலீட்டாளராக, தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களுடன் இணைய விரும்புகிறார். அவர் முதலீடு செய்த நிறுவனத்தின் பொருட்களை அவர் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால், அந்நிறுவனத்துடனான பயணமும் முற்று பெற்றுவிடும் என்றார்.
"நான் முதலீடு செய்த அனைத்தும் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கும். செல்வாக்கு செலுத்தும் மற்றும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் பிராண்டுகளின் ஒரு பகுதியாக இருப்பது இப்போது மிகவும் முக்கியமானது என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
ஒரு செழிப்பான நடிப்பு வாழ்க்கை இருந்தபோதிலும், வணிக உலகில் ஏன் அடியெடுத்து வைக்கிறீர்கள்? என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்களாம். இந்தக் கேள்விகளை அவர் வேடிக்கையாகக் காண்பதாகவும், யாராவது வணிகத்தில் ஆர்வமாக இருந்தால், திரைக்கு அப்பால் படைப்பாற்றலை ஆராய விரும்பினால், அவர்கள் அதை செய்ய வேண்டும் என்று அவர் நம்புவதாக தெரிவித்தார்.
சினிமா மற்றும் தொழில்முனைவு இரண்டும் அவருக்கு வெவ்வேறு ஆக்கப்பூர்வமான ஆற்றல்களை ஊட்டுவதாகவும், அவரை வெவ்வேறு வழிகளில் நிறைவு செய்வதாகவும் நம்புகிறார்.
"சினிமா மற்றும் தொழில் இரண்டு பாத்திரங்களுக்கும் பொதுவான ஒன்று உள்ளது. நீங்கள் தோல்வியடையும் போது, நேரடி பார்வையாளர்களுக்கு முன்னால் நீங்கள் தோல்வியடைகிறீர்கள். உடைந்த அந்த துண்டுகளை சேகரித்து, நேரடி பார்வையாளர்களுக்கு முன்னால் உங்களை மீண்டும் ஒன்றாக உருவாக்குவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இது நம்பமுடியாத அளவிற்கு வலுவூட்டுகிறது. அதனால், நான் தோல்வியைக் கண்டு பயப்படுவதில்லை, அதுதான் என்னை தைரியமான தேர்வுகளைச் செய்யத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன்," என்றார்.
ஆங்கிலத்தில்: சிம்ரன் சர்மா, தமிழில்: ஜெயஸ்ரீ
'9Skin' ப்ராண்டை நயன்தாரா-விக்னேஷ் உடன் உலகளவில் கொண்டு செல்லும் சிங்கப்பூர் தொழில்முனைவர் டெய்சி மார்கன்!