Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

45 நாட்களில் ரூ.1.82 கோடி முதலீடு: தமிழக ஸ்டார்ட்-அப்’கள் நிதி உயர்த்த உதவும் முதலீட்டாளர் பிரியா பார்த்தசாரதி!

ஸ்டார்ட்-அப் தொடங்குபவர்களின் முக்கிய சவாலே முதலீடுகள் திரட்டுவது. முதலீடு பெற மாதக்ககணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலையில், துபாயில் வசிக்கும் முதலீட்டாளர் பிரியா பார்த்தசாரதி, 50+ ஏஞ்சல் முதலீட்டாளர்களைக் குழுவாகக் கொண்டு பல புத்தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக நிதி உயர்த்த உதவுகிறார்

45 நாட்களில் ரூ.1.82 கோடி முதலீடு: தமிழக ஸ்டார்ட்-அப்’கள் நிதி உயர்த்த உதவும் முதலீட்டாளர் பிரியா பார்த்தசாரதி!

Tuesday April 05, 2022 , 4 min Read

சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்னும் சூழல் இருந்தது. ஆனால், ஐடியா இருந்தால் போதும் முதலீடு தேவையில்லை என்னும் சூழல் மெல்ல உருவானது.

சொல்வதற்கு எளிதுபோல இருந்தாலும் முதலீடு கிடைப்பதற்கு சில மாதங்கள் கூட ஆகலாம். சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீட்டாளர்களுடன் உரையாடுவதற்கே ஒரு பிரத்யேக குழு இருக்கும். காரணம் முதலீட்டை திரட்டுவதில் உள்ள கால தாமதம்தான்.

ஆனால், சில நாட்களுக்கு முன்பு முதலீட்டு துறையில் ஒரு ஆச்சர்யம் நடந்தது. ஒரு முதலீட்டாளருக்கும், வளர்ந்து வரும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கும் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கிய உரையாடல் மார்ச் 15ம் தேதி முடிந்து முதலீடாக மாறியது.

கோவையைச் சேர்ந்த வில்ஃபிரஷ் என்னும் அக்ரி-டெக் நிறுவனத்தின் நிறுவனர், தங்களுக்கு தேவை இருந்த முதலீட்டுக்காக துபாயில் வாழும் தமிழரான முதலீட்டு ஆலோசகர் பிரியா பார்த்தசாரதியை அணுகி இருக்கிறார். துபாயில் உள்ள இந்தியர்களுக்கு ஆலோசகராக இருக்கும் பிரியா,

45 நாட்களுக்குள், வில்ஃபிரஷ் நிறுவனத்துக்கு தேவையான 1.8 கோடி முதலீட்டை வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக துபாயில் வசித்துவரும் பிரியா பார்த்தசாரதி, தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை வந்திருந்தார். ஒரு ஞாயிறு மாலையில் அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய கார்ப்பரேட் வாழ்க்கை, முதலீட்டாளராக மாறியது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினார்.

priya parthasarathy

ஸ்டான்டர்ட் சார்ட்டட் மற்றும் ஹெச்.எஸ்.பிசி நிறுவனங்களில் பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து பர்ஜில் ஜியோஜித் மற்றும் ஷேர்கான் ஆகிய நிறுவனங்களில் துபாயில் பணியாற்றினேன். அங்கு வசித்துவந்ததால் அங்குள்ள இந்தியர்களுக்குத் தேவையான முதலீட்டு ஆலோசனைகளை வழங்கிவந்தேன். இந்தியர்களுக்குத் தேவையான ரியல் எஸ்டேட் பங்குகள் உள்ளிட்ட பல விஷயங்களில் ஆலோசனை வழங்கினேன்.

அதேபோல, ஐபிஓ முன்பாக பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை அவர்களுக்கு வழங்கி வந்தோம். பாலிசிபஜார், என்.எஸ்.இ, சிஎஸ்கே, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி., உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கிவந்தோம். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குவதுதான் என் முக்கிய வேலை.

ஏஞ்சலாக திகழும் முதலீட்டாளர் பிரியா பார்த்தசாரதி

ஆலோசகராக வாழ்க்கை போய்கொண்டிருந்த போது, ’அக்ரோமலைன்’ (Aqgromalin) என்னும் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் நிதி உயர்த்த பல முதலீட்டாளர்களிடம் பேசிவந்தது தெரியவந்தது.

ஆனால், அவர்களுக்கு முதலீடு கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டது. அப்போது அந்த நிறுவனம் நிதி திரட்டுவது குறித்த விண்ணப்பம் எங்களுக்கு வந்தது. அவர்களுடைய செயல்திட்டத்தை பார்த்தவுடன் எங்களுடைய முதலீட்டாளர்களிடன் கலந்துரையாடினேன், அவர்களும் முதலீடு செய்ய விரும்பினார்கள்.

“எங்களுடைய நெட்வொர்க்கில் 50க்கும் மேற்பட்ட பெரிய முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். அதே சமயம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் முதலீட்டை அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நாங்கள் பரிந்துரை செய்வதில்லை. முதலீட்டாளர்களின் நெட்வொர்த் அவர்களின் போர்ட்போலியோ, அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்தே பரிந்துரை செய்கிறோம்,” என்றார்.

ஒவ்வொருவரும் சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை முதலீடு செய்திருக்கிறார்கள். (சிலர் கூடுதல் தொகையை கூட முதலீடு செய்திருக்கிறார்கள்) அவர்களுக்கு இந்திய ரூபாயில் 25 லட்சம் என்பது பெரிய தொகை கிடையாது. அவர்கள் துபாயில் கார்ப்பரேட்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், வங்கியாளர்கள், மருத்துவர்கள் என பலரும் இணைந்தே முதலீடு செய்திருக்கிறார்கள்.

நிதி உயர்த்தலில் உள்ள சவால்கள்

ஒரு நிறுவனத்துக்கு ஆரம்பகட்டத்தில் முதலீடு கிடைப்பதுதான் சவாலானதாக இருக்கிறது. ஆரம்பகட்டத்தில் கிடைத்துவிட்டால் அதனைத் தொடர்ந்து சீரிஸ் ஏ, சீரிஸ் பி என அடுத்தடுத்து சென்றுவிடுகிறார்கள்.

’அக்ரோமலைன்’ நிறுவனத்தில் சமீபத்தில் செக்யோயா முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அவர்கள் ஏஞ்சல் ரவுண்டுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை சந்தித்தார்கள். பல முதலீட்டாளர்களை உரையாடிய பிறகும் நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

”அதனால் இப்போதைக்கு எங்களுடைய கவனம் ஏஞ்சல் மற்றும் பிரிட்ஜ் ரவுண்ட்களில் மட்டுமே இருக்கிறது. பிரிட்ஜ் ரவுண்ட் என்பது ஒரு பெரிய நிதி திரட்டல் முடிப்பதற்கு சில மாதங்கள் கூட ஆகும். அந்தச் சூழலில் நிறுவனத்துக்குத் தேவையான நிதி இடைவெளியை நிரப்புவதுதான் பிரிட்ஜ் ரவுண்ட். இது ஸ்டார்ட்-அப்’ களுக்கு ஒரு முக்கியமான பகுதி.”

இந்த பிரிட்ஜ் ரவுண்ட் முதலீடுதான் Vilfresh நிறுவனத்துக்கு நாங்கள் செய்தோம். எங்களுக்கு விண்ணப்பம் வந்தது. ஏற்கெனவே அக்ரிடெக் பிரிவில் முதலீடு செய்துவிட்டோம். மீண்டும் அதே துறையில் முதலீடு செய்ய வேண்டுமான என்பதை பரிசீலனை செய்து எங்கள் வசம் உள்ள முதலீட்டாளர்களுக்கு அனுப்பிவைத்தோம்.

Vilfresh
"ஒவ்வொரு முதலீட்டாளர்களும் இணைய வழியில் நிறுவனர்களுடன் உரையாடினார்கள். நாங்களும் அவர்களின் நிதி நிலை அறிக்கையை ஆராய்ந்ததில் முதலீட்டாளர்களுக்கும் திருப்தி. நிறுவனத்தின் கோரிக்கை ரூ.1.50 கோடிதான். ஆனால், ரூ.1.82 கோடி அளவுக்கு நிதி கிடைத்தது,” என பிரியா தெரிவித்தார்.

இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

துபாயில் இருப்பவர்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்? என்னும் கேள்விக்கு, இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.

“அடுத்த பத்தாண்டுகளுக்கு மேல் பெரிய வளர்ச்சி இந்தியாவில் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். தவிர அங்கிருக்கும் புரபெஷனல்கள் என்றாவது ஒரு நாள் இந்தியாவுக்கு வந்துதான் ஆக வேண்டும். அங்கேயே தங்கவிட முடியாது (பிஆர் அங்கு கிடையாது) என்பதால் இந்தியாவை தொடர்ந்து கண்காணித்தே வருவோம். அதில் ஒரு பகுதிதான் ஸ்டார்ட் அப் முதலீடுகள்,” என பிரியா தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து முதலீட்டை திரட்டுவது பெரும் சிக்கல் என்னும் தகவல்கள் இருக்கின்றனவே என்று கேட்டதற்கு,

“வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதும் வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) முதலீடு செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எங்களுடைய நெட்வொர்க்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து துபாய் வந்திருப்பவர்கள்தான். அவர்கள் முதலீடு செய்வதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால், வரும் காலங்களில் வெளிநாட்டவர்கள் கூட முதலீடு செய்ய முடியும். கூடுதல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வளவுதான்,” என பிரியா தெரிவித்தார்.

அடுத்தகட்ட திட்டம் குறித்து பேசிய போது, அக்ரோமலைன், வில்ஃபிரஷ் தவிர மேலும் சில நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறோம். இதுதவிர கடன் சார்ந்த முதலீடுகளையும் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதன் அடுத்தகட்டமாக ’மைக்ரோ பண்ட்’ ஒன்றினை வெளியிடும் திட்டமும் இருக்கிறது.

piriya

பிரியா பார்த்தசாரதி

”இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு தேவை. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு முதலீட்டுக்கான வாய்ப்புதேவை என்பதால் தகுதிவாய்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆராய்ந்து வருகிறோம். பல நிறுவனங்களில் முதலீடு செய்வதுதான் திட்டம் என,” பிரியா முடித்தார்.

இந்த உரையாடலில் வில்ஃபிரஷ் நிறுவனத்தின் நிறுவனர்கள் செல்வகுமார் மற்றும் ஷர்மிளா ஆகியோரும் உடன் இருந்தனர். அவர்கள் 45 நாட்களில் முதலீட்டை திரட்டுவது என்பது சாதாரணமானதல்ல என்றனர். முதலீட்டு உலகில் இருக்கும் நண்பர்கள் பலரும் வியந்தனர். இது ஒரு பிரிட்ஜ் முதலீடுதான். அடுத்தகட்டமாக பெரிய முதலீடை திரட்டும் பணிகளில் இருக்கிறோம். அப்போது வில்ஃபிரெஷ் குறித்து நாம் விரிவாக உரையாடலாம் என்று கூறினார்.

மாதக்கணக்கில் பேச்சுவார்த்தை நடக்கும் சூழலில் 45 நாட்களில் முதலீடு கிடைப்பது நிறுவனர்களுக்கு மட்டுமல்லாமல் ஸ்டார்ட் அப் உலகுக்கே புத்துணர்வாக இருக்கும். ஏஞ்சல் முதலீட்டாளர்களைத் திரட்டி ஸ்டார்ட்-அப்’ களுக்கு புத்துயிர் கொடுக்கக் கிளம்பியிருக்கும் பிரியா பார்த்தசாரதி இனி பலருக்கும் ஏஞ்சலாக இருப்பார் என்று மட்டும் புரிகிறது.