'ஓட்டுக்கு காசு வேண்டாம் என்ற வலியுறுத்தலே கல்வியை முழுமையாக்கும்' - நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்!
ஓட்டுக்கு காசு வேண்டாம் என்று வருங்கால வாக்காளர்களான மாணவர்கள் பெற்றோரை வலியுறுத்த வேண்டும், அப்போது தான் அவர்களின் கல்வி முழுமையடையும் என்று நடிகர் விஜய் பொதுத்தேர்வில் டாப் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்தியில் பேசி இருக்கிறார்.
தமிழகத்தில் 10, மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி விருது வழங்கி கவுரவித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் ஜூன்17 அன்று நடைபெற்ற விழாவில் சுமார் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
தமிழகத்தில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கிப் பாராட்டினார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் மிகவும் உற்சாகமாக பேசினார் நடிகர் விஜய்.
“என் நெஞ்சில் குடியிருக்கும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய வணக்கம். நான் நிறைய விருது வழங்கும் விழா, பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசி இருக்கிறேன், ஆனால், இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் முதன்முறையாக நான் நிற்கிறேன். மனதிற்கு ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல நான் உணர்கிறேன், வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் உங்கள் அனைவரையும் சந்திப்பது மிக மிக சந்தோஷம்,” என்று பேச்சை தொடங்கினார்.
சினிமா தான் என் கனவு
“உன்னில் என்னைக் காண்கிறேன்” என்று ஒரு வசனம் இருக்கிறது உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது எனக்கு என்னுடைய பள்ளிப்பருவ நியாபகங்கள் வந்து போகின்றன. நான் உங்களைப் போல நன்கு படிக்கும் மாணவனல்ல ஜஸ்ட் பாஸ் பண்ணும் சுமாரான மாணவன். நான் ஒரு நடிகனாகவில்லையெனில் டாக்டராகி இருப்பேன் என்றெல்லாம் சொல்லி உங்களை சளிப்படையச் செய்ய விரும்பவில்லை. எனக்கு என்னுடைய கனவெல்லாம் சினிமா நடிப்பு தான், அதை நோக்கித் தான் என்னுடைய பயணமெல்லாம் போய்க்கொண்டிருந்தது.
கல்வி மட்டுமே நிலைத்திருக்கும்
இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு ஒரு முக்கியமான காரணம் சமீபத்தில் நான் பார்த்த படத்தில் ஒரு அழகான வசனத்தை கேட்டேன்,
“காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபாய் இருந்தா பிடுங்கிக்குவாங்க ஆனால் படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்கவே முடியாது... என்ற அந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. இது 100க்கு 100 உண்மை மட்டுமல்ல, இது தான் யதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே என்னுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதுக்கான நேரம் தான் இது என்று நான் நினைக்கிறேன். இந்த வெற்றிக்கு பாடுபட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஒவ்வொரு ஊரில் இருந்தும் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்த என்னுடைய மக்கள் இயக்க நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
குணம், சிந்திக்கும் திறன் முக்கியம்
எனக்கு பிடித்த விஷயங்களைச் சொல்கிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லா விட்டால் விட்டுவிடுங்கள். பள்ளி, கல்லூரி சென்று படிப்பது பட்டம் பெறுவது மட்டுமே ஒரு முழுமையான கல்வி ஆகாது என்பதற்கு ஐன்ஸ்டீன் சொன்ன ஒரு விஷயம் நாம் பள்ளிக்குச் சென்று கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களும் மறந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ அது தான் கல்வி என்றார்.
முதலில் அது எனக்கு புரியவில்லை, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரிந்தது. எனக்கே புரியும் போது உங்களுக்கு நிச்சயமாகப் புரியும் என்று சொல்கிறேன், நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் படிக்கும் போது இயற்பியல், வேதியியல், உயிரியல் என எல்லாவற்றையும் நீக்கிவிட்டு உங்களிடம் மிஞ்சி இருப்பது என்னவாக இருக்கும் உங்களுடைய குணாதிசயம் மற்றும் சிந்திக்கும் திறன். நாம் படிக்கிறோம் பரீட்சை, மதிப்பெண் எல்லாமே முக்கியம் தான் இதைத் தாண்டி உங்களுடைய குணம், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் அது முழுமையான கல்வியாக இருக்கும். உதாரணத்திற்கு குணம் பற்றி ஒரு அழகான பழமொழி இருக்கிறது
“Wealth is lost nothing is lost, Health is lost something is lost, When Character is lost Everything is lost” பணத்தை இழந்தால் நீங்கள் எதையுமே இழக்கவில்லை, ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ இழந்திருக்கிறீர்கள், குணத்தை இழந்துவிட்டால் நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.”
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாட்கள் நீங்கள் உங்களுடைய பெற்றோரின் வழிகாட்டுதலில் அவர்களின் கண்பார்வையிலேயே வளர்ந்தீர்கள். இப்போது மேல்படிப்பிற்காக வெவ்வேறு ஊர்களில் இருக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் விடுதியில் தங்க வேண்டும், புதிய நண்பர்களின் நட்பு ஏற்படும். முதல்முறையாக உங்களுடைய பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து வெளியே போய் வேறு ஒரு வாழ்க்கையை வாழப் போகிறீர்கள்.
அப்போது கிடைக்கும் ஒரு சுதந்திரத்தை சுய-ஒழுக்கத்துடன் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுய ஒழுக்கம் என்பதற்காக வாழ்க்கையில் கேளிக்கைகளே இருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை, அதே நேரம் உங்களின் சு அடையாளம் என்பதை எந்த காலத்திலும் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். நம்முடைய வாழ்க்கை நம் கையில் தான் என்பதை மூளையின் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டு அதை அவ்வ போது நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
வாசிப்பு அவசியம்
குணத்தை பற்றி நாம் பேசிவிட்டோம், சிந்திக்கும் திறன் பற்றி என்னை விட உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
“இது தகவல் தொழில்நுட்ப யுகம், முகநூல், இன்ஸ்டா என சமூக ஊடகங்களில் தகவல்கள் நிறைந்திருக்கிறது, இதில் முக்கால்வாசி போலித் தகவல்கள். சமூக ஊடகத்தில் செய்தி போடுகின்றவர்களில் சிலருக்கு மறைமுகமாக ஒரு வேலை பணிக்கப்பட்டிருக்கும், ஒரு கவர்ச்சிகரமான தகவல்கள் மூலமாக வாசகர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற சிந்தனை. அவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம் எதை விட்டுவிடலாம், எதை நம்பலாம், எது உண்மை, பொய் என்பதை நீங்கள் தான் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்கள் பாடப்புத்தகத்தை தாண்டி படிக்க வேண்டும்.”
நான் படிக்காமல் உங்களை மட்டும் படிக்கச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். படிப்பதை விட படித்த மற்றவர்கள் சொல்வதை கேட்டு நினைவில் வைத்துக் கொள்ளும் ரகம் நான். கதை படிக்கச் சொன்னால் கூட நான் படிக்க மாட்டேன், கதையை கேட்கவே செய்வேன், ஆனால் இப்போது மகிழ்ச்சியோடு படிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
காமராஜர், பெரியார், அம்பேத்கரை படியுங்கள்
முடிந்தவரைக்கும் எல்லோரையும் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை தலைவர்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றோரைப் பற்றி படித்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிடுங்கள்.
இது தான் இன்று நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய விஷயம். நிறைய பேர் சொல்ல கேள்விபட்டிருப்போம் உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பார்கள். இப்போது அவையெல்லாம் மாறிவிட்டது நீ எந்த சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறாய் என்ற சொல் நான் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது தான் இன்றைய நிலை.
நாளைய நாடு உங்களிடம்
நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். நம்ம விரலை வைத்து நம்ம கண்ணையே குத்துறதுன்னு கேள்விபட்டிருக்கிறீர்களா, அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அதைத் தான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம். அது வேறு ஒன்றுமில்லை காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது.
உதாரணத்திற்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் ஒரு தொகுதிக்கு ஒன்றரை லட்சம் பேர் என்று வைத்துக் கொண்டால் அந்த வேட்பாளர் சுமார் ரூ.15 கோடி செலவு செய்ய வேண்டும். அந்த 15 கோடிக்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப்பார் என்று யோசித்து பாருங்கள். உங்களுடைய கல்வி கற்பித்தலில் இவற்றையெல்லாம் கொண்டு வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
“தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அவரவர் பெற்றோரிடம் சென்று இனிமேல் ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் நிச்சயம் மாற்றம் வரும் நீங்கள் தான் அடுத்தடுத்த புதிய வாக்காளர்களாக வரப் போகிறீர்கள்.”
முழுமையான கல்வி
நான் ஏன் இன்று இதனை தொடர்பு படுத்துகிறேன் என்றால், இது எப்போது நடக்கிறதோ அப்போது தான் உங்களுடைய கல்வி முறை ஒரு முழுமையடைந்ததாக வைத்துக் கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெறாத குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் வெற்றி பெற்ற மாணவர்கள் நேரத்தை செலவிடுங்கள். தேர்வு வெற்றி சுலபமானது என்கிற தைரியத்தை அவர்களுக்குக் கொடுங்கள், இதைச் செய்தால் அது எனக்கு நீங்கள் தரும் பரிசாக நான் எடுத்துக் கொள்கிறேன். வெற்றியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
தோல்வியடைந்தவர்கள் சீக்கிரமே வெற்றி பெற வாழ்த்துகள். மாணவர்கள் எந்தச் சூழலிலும் தவறான முடிவெடுக்காமல் தைரியமாக முன்னேறிச் செல்ல என்னுடைய வாழ்த்துகள். உங்களை நம்பிக்கை இழக்கச் செய்ய ஒரு கூட்டம் இருக்கும் அதை பொருட்படுத்த வேண்டாம், உங்களுக்குள் இருக்கும் ஒருவன் என்ன சொல்கிறான் என்பதை கேட்டு செயல்படுங்கள். வளர்ப்போம் கல்வி, வளர்க என்னுடைய குட்டி நண்பா, நண்பீஸ், நன்றி! என்று பேசினார்.
தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நடிகர் விஜய் முதல் முறையாக மாபெரும் விழாவாக கல்வி விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்து கல்வியையும் அரசியலையும் சேர்த்து பேசி இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் அரசியல் வருகைக்கான முன்னோட்டமா இது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.