Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உருளைக்கிழங்குக்குள் ஒரு இரவு : 200 டாலர் கட்டணம்!

உருளைக்கிழங்குக்குள் ஒரு இரவு : 200 டாலர் கட்டணம்!

Monday April 29, 2019 , 2 min Read

தேன் கூட்டிற்குள், ஷூவுக்குள், கடலுக்கு அடியில் எல்லாம் வாழும் பாத்திரங்கள் வாழ்வில் நடக்கும் திடீர் திருப்புமுனைகளை வைத்து கதை எழுதப்பட்டிருக்கும் அனிமேஷன் படங்களை எல்லாம் பார்த்து ரசிப்பவர்கள் தானே நாம்?

நம்மிடம் வந்து, ‘வாங்க ஒரு உருளைக்கிழங்குள்ள தங்க வாய்ப்பு’ என்றால் துள்ளி குதித்துக் கொண்டு கிளம்பிவிடுவோம் தானே? அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் தான் இந்த விசித்திரம் நடந்திருக்கிறது.

Image Courtesy : Otto Kitsinger/ AP images

ஒரு ராட்சத உருளைக்கிழங்குக்குள் ஹோட்டல் ரூம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உருளைக்கிழங்கு என்றால் உண்மையில் உருளைக்கிழங்கு இல்லை, ஸ்டீல்,கான்க்ரீட் மற்றும் ப்ளாஸ்டரால் செய்யப்பட்ட ஆறு டன் எடையுள்ள செயற்கை உருளைக்கிழங்கு வடிவம் ஒன்று தான் இங்கே ’இடாஹோவின் பெரிய உருளைக்கிழங்கு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் இடாஹோவில் சவுத் பாயிஸ் எனும் இடத்தில் நானூறு ஏக்கர் நிலத்திற்கு மத்தியில் இந்த உருளைக்கிழங்கு ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. உருளைக்கிழங்கு ரூமின் மொத்த பரப்பளவு 336 சதுர அடிகள்.

இந்த உருளைக்கிழங்குக்குள் ஒரு இரவை செலவழிக்க இருநூறு அமெரிக்க டாலர்களை (வரி தனியே) விதிக்கப்படும். இதை வாடகைக்கு கொடுத்திருக்கும் ஏர் பிஎன்பி நிறுவனம். ஒரு க்வீன் சைஸ் படுக்கை, நாற்காலிகள், குட்டி பாத்ரூம் என ‘மினிமலிஸ்ட்’ அணுகுமுறையில் இந்த அறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Image Credits : Airbnb

இடாஹோவின் பெரிய உருளைக்கிழங்கு தோன்றிய கதை :

இடாஹோ மாகாணம் உருளைக்கிழங்குகளுக்கு பெயர் போனது. இங்கிருக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களாக ‘இடாஹோ பொடேட்டோ கமிஷன்’ என ஒரு அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு ராட்சத உருளைக்கிழங்கை வடிவமைத்து அதை நாடு முழுதும் ஊர்வலமாக கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டார்கள்.

அந்த உருளைக்கிழங்கு வடிவத்திற்குள் பெரிய துளை போன்ற ஸ்பேஸை உண்டாக்கி, ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற பொருளை/ தயாரிப்பை ப்ரோமோ செய்ய ட்ரக் ஒன்றில் வைத்து வலம் வந்திருக்கிறார்கள். ஒரு வருடம் இப்படி நாடு முழுவதும் டூர் போகலாம் என தொடக்கத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், 2012-ல் தொடங்கிய இந்த பயணம் ஆறு ஆண்டுகள் சென்றிருக்கிறது. இந்த உருளைக்கிழங்கை விட்டுவிட்டு ஒரு புதிய உருளைக்கிழங்கை தயாரித்ததும், பழைய உருளைக்கிழங்கை என்ன செய்வது என்று கேள்வி வந்திருக்கிறது. அதை அருங்காட்சியத்தில் வைக்கலாம் என இடாஹோ உருளைக்கிழங்கு அருங்காட்சியகம் ஆர்வம் காட்டியிருக்கிறது.

உருளைக்கிழங்கு ட்ரக் முன் க்றிஸ்டி


Image Courtesy : Airbnb

ஆனால், உருளைக்கிழங்கு ட்ரக்கின் கூடவே பயணித்து செய்தி தொடர்பாளராக இயங்கிய க்றிஸ்டி வுல்ஃபிற்கு வேறு திட்டங்கள் இருந்தது. க்றிஸ்டி வழக்கமாகவே ஏர் பிஎன்பி-க்கு புதுப்புது தளங்களை ரெனோவேட் செய்து தரும் வேலை செய்து கொண்டிருந்தவர்.

‘ட்ரீ ஹவுஸ்’, ‘ஹாபிட் ஹோல்’ என விநோதமான ஐடியாக்களை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்துவது இவருக்கு எளிது. அப்படித்தான் இந்த உருளைக்கிழங்கையும் ஒரு ஏர் பிஎன்பி வீடாக மாற்ற வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக முப்பது நாட்களில் தனியாளாக இந்த உருளைக்கிழங்கை ஏர் பி என் பி அப்பார்ட்மெண்டாக மாற்றியிருக்கிறார்.

”எனக்கு எப்போதுமே இடாஹோ மீதும் உருளைக்கிழங்குகள் மீதும் ஒரு பைத்தியம் இருந்து கொண்டே தான் இருக்கும். நான் வடிவமைத்த மற்ற அபார்ட்மெண்டுகளை விட இது கொஞ்சம் அதிகமாகவே நேரமெடுக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் தனியே தான் இதைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அம்மாவும் தங்கையும் ஒரு பெரிய உந்துதலாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்,” என்கிறார் க்றிஸ்டி.

ஏர் பிஎன்பி எல்லா வகையான ஐடியாக்களையும் ஜட்ஜ் செய்யாமல் ஏற்றுக் கொள்கிறது, எனவே நீங்கள் ‘விசித்திரமான’ ஐடியாவாக நினைக்கும் எதையும் தைரியமாக பிட்ச் செய்யுங்கள் என்பது தான் க்றிஸ்டி சொல்லும் அறிவுரை. ஆக, பாகற்காய், புடலங்காய், முருங்கைகாய், என எந்த காய்க்குள் அபார்ட்மெண்ட் அமைத்து வாடகைக்கு விட ஆசை இருந்தாலும் ஏர் பிஎன்பியை அணுகுங்கள்.