சென்னை வெள்ளம்- உதவிக்கரம் நீட்டிய கார்பரேட் நிறுவனங்கள்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். ராணுவத்தின் முப்படைகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. சில தன்னார்வலர்களும் தன்னார்வ அமைப்புகளும் கைகோர்த்து செயல்படுகிறார்கள். ஆங்காங்கே இருக்கும் மக்களும் தங்கள் துயரங்களையெல்லாம் மறந்து மற்றவர்களின் துயரங்களில் பங்கெடுக்கிறார்கள்.

வெளியூரில் இருக்கும் சிலர் சமூகவலைதளங்களின் மூலம் உதவி பற்றிய செய்திகளை பரப்புகிறார்கள். பெருநிறுவனங்களும் தங்களால் முடிந்ததை செய்கின்றன.
ஏர்டெல் நிறுவனம் சென்னை வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் முப்பது ரூபாய் டாக்டைம் இலவசமாக வழங்கி இருக்கிறது. ஏர்டெல்லில் இருந்து ஏர்டெல்லுக்கு பத்து இலவச நிமிடங்களை அறிவித்திருக்கிறார்கள். இதை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். 50எம்பி இணைய அளவையும் இரண்டு நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். போஸ்ட்பெய்டு சேவையை பயன்படுத்துபவர்கள் பில் செலுத்தும் கடைசிநாளை நீட்டித்திருக்கிறார்கள். எனவே அவர்களும் இப்போது சேவையை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 2ம் தேதி காலையிலிருந்து தமிழகம் மற்றும் சென்னையில் வசிப்பவர்கள், இந்தியா முழுவதும் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. மொபைல் வாடிக்கையாளர்கள் இலவசமாக பேசவும் குறுஞ்செய்தி வழங்கவும் வகை செய்திருக்கிறார்கள். 7 நாளைக்கு 100எம்பி இணையவசதி இலவசமாக வழங்கியுள்ளது.

பேடிஎம் நிறுவனம் சென்னையை சேர்ந்தவர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்ய உதவி வழங்குகிறது. 1800-103-0033 என்ற எண்ணுக்கு கால் செய்து அந்த உதவியை பெற்றுக்கொள்ள முடியும். சென்னையில் இருக்கும் உங்கள் நண்பர்களின் எண்ணுக்கும் ரீசார்ஜ் செய்து உதவ முடியும்.

உபர் நிறுவனம் நேற்றும் இன்றும் இலவச வாகன வசதியை வழங்கிவருகிறது. உபரின் மொபைல் செயலியில் ubercare என்ற ஆப் தேர்வு செய்து தங்களுக்கும் அருகாமையில் இருப்பவருக்கும் உணவு பொட்டலங்களை எடுத்து செல்ல முடியும். இதற்காகவே ட்ரக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஜூம்கார் நிறுவனம் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு இலவச கார் சேவையை வழங்குவதாக தெரிவித்திருக்கிறது.

நடிகர் தனுஷ் 600 பிஸ்கெட் பாக்கெட்டுகளையும், 400 ரஸ்க் பாக்கெட்டுகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக திரட்டி வைத்து, எப்படி விநியோகிப்பது என தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.

அப்போது கலாட்டா.காம் நிறுவனம் அவரிடமிருந்து அதை பெற்று வெற்றிகரமாக பாதிக்கப்பட்டோருக்கு விநியோகித்தனர். கலாட்டா.காம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறார்கள்.

பெங்களூரை சேர்ந்த டோவாக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் குடிதண்ணீருக்காக அல்லாடுவோருக்கு உதவ முன் வந்திருக்கிறது. இந்த தகவலை நடிகர் அகில் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஓலா கேப்ஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சென்னை அம்பத்தூரில் உள்ள உஷாராணி திருமண மண்டபத்தில் தங்க வைக்கிறார்கள். சுமார் 200லிருந்து 250 பேருக்கான உணவு மற்றும் தங்குமிடத்தை இலவசமாக வழங்குகிறது.

http://blog.olacabs.com/get-safe-chennai-places-you-can-head-to-for-help/
ப்ரக்டோ என்ற மருத்துவ சேவை வழங்கும் நிறுவனம் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளில் சேவை பெறலாம், எந்ததெந்த டாக்டரை அணுகலாம் போன்ற தகவல்களை வழங்குகிறது.

உணவு தேடல் சேவையை வழங்கும் நிறுவனமான ஜொமாட்டோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் ஒரு உணவு பொட்டலம் வாங்கி உதவுங்கள், நாங்கள் ஒரு பொட்டலம் கூடுதலாக சேர்த்து தருகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

நேற்று மட்டும் 55 ஆயிரம் பொட்டலங்கள் வாங்கப்பட்டதாகவும் மொத்தம் 110 ஆயிரம் பொட்டலங்களை நாங்கள் விநியோகித்தோம் என்று ஜொமாட்டோ வின் தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

கூகிள் நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ட்விட்டருடன் இணைந்து ட்வீட்டுகளை திரட்டி "google crisisrespose" http://google.org/crisisresponse/2015-chennai-flooding என்ற பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சென்னையில் நடப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
ஃபேஸ்புக் நிறுவனம் சென்னையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்ற “safety check" என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை வெளியூரில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளமுடியும்.
இவையெல்லாம் நம் கண்ணுக்கு தெரியவந்தவை. நமக்கு தெரியாத பலரும் பல்வேறு உதவிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் பலகரங்கள் ஒன்றிணைந்திருக்கிறது மகிழிச்சி தகவல்.