அம்மாவுக்காக கொஞ்சம் அன்பும், அறிவும், ஆற்றலும்...!
தன் அம்மா மற்றும் கிராமத்து பெண்களுக்கு உதவ, ஒரு மணி நேரத்தில் 180 சப்பாத்தி செய்யும் கருவியை வடிவமைத்து தந்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த பொம்மை!
பொம்மையின் வயது 41. ஆனால் அவரது மனதின் வயது இன்றும் பதினாறுதான். சிறிய வயதில் இருந்தே புதிய பொருட்கள் மீதும், அவற்றின் உருவாக்கத்தின் மீதும் பொம்மை அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அதன் பலனாக சில முக்கிய கண்டுபிடிப்புகளை அவரும் நிகழ்த்தியுள்ளார். தனது மிதிவண்டி அங்காடியில் (சைக்கிள் கடை) புதிய இயந்திரங்களை உருவாக்க முயற்சித்ததில் இருந்து, தற்போது சொந்த பணிமனையை நிர்வாகிப்பது வரை பல தடைகற்களை தாண்டி வந்துள்ளார் பொம்மை.
கர்நாடகாவில் உள்ள புக்கசந்திரா கிராமம் இவரது சொந்த ஊர்.
“வீட்டுல செலவு செய்ய காசு இல்ல. அதனால என்னால அதிகம் படிக்க முடியல. பட்டுப்பூச்சில இருந்து பட்டு எடுக்கறது, அதுங்கள வளக்கறது எப்பிடின்னு படிச்சேன். அதோட நிப்பாட்டிக்கிட்டேன். ஆனா அப்போ இருந்து, வீட்டுக்கு தேவையான நம்ம ஆட்களோட வேலைய சுலபமா மாத்தற இயந்தரங்க உருவாக்கணும்னு எனக்கு ஆசை,” என்கிறார் பொம்மை.
அப்போது அவர் கண்களில் தென்பட்டது தனக்கு மிகவும் பிடித்தமான சப்பாத்தியை செய்வதற்கு அவர் படும்பாடு. அதனை சுலபமாக மாற்ற களத்தில் குதித்தார்.
“எனக்கு சப்பாத்தினா ரொம்ப புடிக்கும். முதல்ல நியூஸ்பேப்பர விரிச்சி மாவு சிந்தாம அத தேய்ச்சு அப்பறமா சுட்டு எடுக்கணும். ஒவ்வொரு தரமும் அத செய்யறதுக்கு எங்க அம்மா கஷ்டப்படரத பாக்கறபோ எதாச்சும் செய்யணும்னு தோணும்...”
என்று தன்னோட புதிய கண்டுபிடிப்பு பற்றி கேட்டபோது ஒரு முக்கிய விஷயத்தை விளக்கினர் பொம்மை.
“நம்ம வீட்டுல சப்பாத்தி செய்ய பலகைல மாவு வெச்சு கட்டையால அத உருட்டி வட்டமா மாத்துவோம். அந்த விஷயத்த அஸ்திவாரமா வெச்சுதான் என்னோட இயந்தரம் இயங்குது. ஆனா என்னோட இயந்தரதுல உருட்டுற கட்டை அசையாம இருக்க கீழ இருக்கற பலகை நகந்து நகந்து சப்பாத்திய தேய்ச்சு குடுக்கும்.”
பொம்மை இந்த ’ரொட்டி மேக்கர்’ சூரியசக்தி மற்றும் மின்சாரம் இரண்டு விதத்திலும் இயங்குமாறு வடிவமைத்துள்ளார். வெறும் ஆறு கிலோ எடையுள்ள இந்த இயந்திரம் 15000/- ருபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. நமது வீடுகளில் உள்ள இன்டக்ஷன் ஸ்டவ் அளவிற்கு தான் இதன் வடிவம் உள்ளது. ஒரு மணி நேரத்தில் இந்த இயந்திரத்தின் மூலம் 180 சப்பாத்திகளை நீங்கள் தேய்த்து எடுக்க முடியும்.
இந்த கண்டுபிடிப்பு உருவாக்கியுள்ள மாற்றத்தை பற்றி கேட்டபோது,
“இப்போலாம் எங்க அம்மா எனக்கு சப்பாத்தி சுட்டு தர சிரமப்படறதே இல்ல. முன்னாடிலாம் கண்டிப்பா வேணுமான்னு கேப்பாங்க, ஆனா இப்போ தட்டுல அடுக்கிட்டே போறாங்க. எங்க அம்மா மட்டும்மில்லாம, எங்க கிராமத்துல இன்னும் பல பெண்மணிகள் என்னோட இயந்தரத்த வாங்கி உபயோகிக்கறாங்க. ஏன்னா நேரத்தை மிச்சப் படுத்தி நம்ம வேலையையும் சுலபமாக்குது இது.”
இந்த ரொட்டி மேக்கரை பெரிய அளவுல கொண்டு போகணும்னு ஆசை இருந்தாலும் அதுக்கு தேவையான பணம் ஒரு தடைக்கல்லாக அவர் முன்னாடி நிற்கின்றது. மத்திய அரசின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்த ரொட்டி மேக்கரில் சில மாற்றங்களை அமைத்து, இதனை நமது கிராமங்களில் வாழும் பெண்மணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கான சரியான உதிவியை எதிர்பார்த்து காத்து நிற்கின்றேன்,” என்கிறார் பொம்மை.
இந்த ரொட்டி மேக்கர் மட்டுமல்லாது, பொம்மை ஒரு நிலக்கரி அடுப்பும் உருவாகியுள்ளார். இதன் மூலம் விறகு அடுப்பில் இருந்து உருவாகும் காற்று மாசுபாட்டை 80% குறைக்க முடியும் என்கிறார்.
“எங்க வீட்டுல சுடுதண்ணி காய வெக்கறதுக்குள்ள வீடு முழுக்க புகையா மாறிடும். விட்ட எங்க சிம்மனிக்கே இருமல் வந்துரும். அந்த அளவுக்கு புகை இருக்கும். இந்த நிலைய மாத்ததான், சுற்றுச்சூழலுக்கு ஏத்த மாதிரி ஒரு அடுப்ப நா உருவாக்குனேன். விறகு அடுப்ப ஒப்பிடும்போது இது வெறும் 20% தான் புகையா வெளியேத்துது. ஏன்னா இதுல ஏர்பில்டர், மற்றும் சிலிகான் பொருத்தி இருக்கேன். அதனால சாதா அடுப்ப விட நல்ல பயன் இருக்கு.”
தற்போதைக்கு பொம்மை உருவாக்கியுள்ள இந்த அடுப்பிற்கு 2600/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவரது கிராமத்தில் பலரும் அதனை பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆனாலும் அதில் மேலும் ஒரு சிறிய மாற்றமாக வெப்பத்தை கட்டுபடுத்தும் விதத்தில் ஒரு மின்விசிறி இணைக்க முடிவெடுத்துள்ளார் பொம்மை.
இவ்வாறாக பல புதிய கண்டுபிடுப்புகளை உருவாக்க உத்வேகம் எங்கிருந்து கிடைக்கிறது என கேட்டபொழுது,
“கிராமத்தில் உள்ள மக்களின் குடும்ப சூழ்நிலை, அவர்கள் வீட்டுவேலைகளை செய்வதில் ஏற்படும் கஷ்டம் போன்றவையே என்னை மேலும் புதிய விஷயங்களை நோக்கி நகர்த்துகின்றது,” என்கிறார் பொம்மை.
ஆங்கில கட்டுரையாளர்: அமூல்யா ராஜப்பா