400கிமீக்கு அப்பால்... விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து கூறிய சுனிதா வில்லியம்ஸ்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். இந்தாண்டு பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் தீபாவளி கொண்டாடும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை தங்களது உறவினர்களுடன் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பத் தயாராகி விட்டனர்.
வேலை உட்பட சில காரணங்களால், அப்படி ஊருக்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள், தங்கள் அன்பிற்கு இனியவர்களிடம் தொலைபேசி, வாழ்த்து அட்டை உள்ளிட்டவை மூலம் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படி மக்கள் பூமிக்குள் ஒருவருக்கொருவர் தங்கள் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்க, விண்வெளி நிலையத்தில் இருந்து தனது வாழ்த்துகளை அனுப்பி, தனது பாசத்தை மக்களிடம் தெரியப்படுத்தி நெகிழச் செய்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்.
விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சில விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். எட்டு நாள் பயணமாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், சில வானிலை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் காரணம் உட்பட சில எதிர்பாராத காரணங்களால் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீண்டு வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவரை அழைப்பதற்காகச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம், ஹீலியம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குறைபாட்டால் மீண்டும் பூமிக்கே திரும்பி விட்டது. இதனால் தொடர்ந்து அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருந்து தங்களது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்து உள்ளது.
விண்வெளியிலிருந்து தீபாவளி வாழ்த்து
இது ஒருபுறம் இருக்க, இப்படி விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருப்பவர்கள், அவ்வப்போது அங்கிருந்தபடி பூமியின் புகைப்படங்களை அனுப்பி அசர வைப்பார்கள். அதிலும் குறிப்பாக தீபாவளி சமயங்களில் உலகம் பட்டாசுகளால் எப்படி வண்ணமயமாக ஜொலிக்கிறது என்பதை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக அனுப்புவார்கள். விண்வெளியில் இருந்தாலும், அங்கிருக்கும் வீரர்கள் எப்படி கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக இந்தப் பதிவுகள் இருக்கும்.
ஆனால், இந்தமுறை தீபாவளிக்கு முன்கூட்டியே தனது கொண்டாட்ட மனநிலையைப் பகிர்ந்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அவர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தனது தீபாவளி வாழ்த்துகளை அனுப்பி, தனது அன்பை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
400 கிமீக்கு அப்பால் கொண்டாட்டம்
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வீடியோவில்,
“சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி வாழ்த்துகள். இன்று வெள்ளை மாளிகையிலும், உலகெங்கிலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில், பூமியில் இருந்து 260 மைல்களுக்கு (சுமார் 400 கிமீ) அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் தனித்துவமிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி எங்களுக்கு கற்பிப்பதன் மூலம், எனது அப்பா, தனது கலாச்சார வேர்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், தீபாவளி பண்டிகையில் பங்கேற்றதற்காகவும், சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் நன்றி, என சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
வாழ்த்துகளோடு பிரார்த்தனை
இந்த வீடியோ தற்போது இணையத்தில அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சுனிதாவின் தீபாவளி வாழ்த்துகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த மக்கள், அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் திரும்பத் தெரிவித்துள்ளதோடு, அவர் விரைவில் நல்ல உடல்நலத்துடன் பூமிக்குத் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளனர்.
விண்வெளித் துறையில் ஆர்வம் மிக்கவரான சுனிதா வில்லியம்ஸ், ஏற்கனவே, இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் செய்து, அங்கு 322 நாட்கள் தங்கி இருந்தவர். அதோடு, விண்வெளியில் அதிக மணிநேரம் நடந்த பெண் என்ற சாதனையையும் சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது அவரது மூன்றாவது விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.