இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய 15 பெண்கள்!
சரோஜினி நாயுடு முதல் ரேணுகா ராய் வரை அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்று அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய 15 முன்னோடி பெண்கள் பற்றிய அறிமுகம்.
73 ஆண்டுகளுக்கு முன் 1950 ஜனவரி 26ல் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது.
சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் 389 உறுப்பினர்கள் அயராது பாடுபட்டனர். இந்த 389 உறுப்பினர்களில் 15 பேர் பெண்கள். இது குறைவான பிரதிநிதுத்துவம் என்றாலும், இந்திய வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
பல்வேறு விதமான பின்னணியை கொண்ட இந்த பெண்கள், அனைத்து இந்தியர்களுக்குமான சமத்துவமான அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொது இலக்கை கொண்டிருந்தனர்.
அரசியல் நிர்ணய சபை எனும் போது முதலில் நினைவுக்கு வருவது, ஆண் உறுப்பினர்கள் மேஜை எதிரே அமர்ந்து தங்கள் கருத்துக்களை விவாதிப்பது, சாதிய அமைப்பிற்கு எதிராக வலுவான கருத்துக்களை எடுத்துவைக்கும் விதமாக அம்பேத்கர் தனது கண்ணாடியை துடைத்துக்கொண்டிருப்பது, மதச்சாற்பற்ற தன்மையை வலியுறுத்தும் நேருவின் தொப்பி மற்றும் பாரம்பரிய கருத்துக்களை முன்வைத்த உறுதியான பட்டேல் ஆகியோரின் தோற்றம் தான் நினைவுக்கு வரும்.
நம்முடைய வரலாற்று புத்தகங்களும், அரசியல் சாசனத்தை உருவாக்கிய ஆண்களின் கதைகள், புகைப்படங்களையே கொண்டிருக்கின்றன. எனினும், பேகம் ஐசாஸ் ரசூல், துர்காபாய் தேஷ்முக், ரேணுகா ராய், பூர்ணிமான பானர்ஜி போன்ற பெயர்கள் நம்முடைய ஆணதிக்க சமூத்தில் புறந்தள்ளப்படும் மற்ற விஷயங்கள் போலவே பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளன.
இந்த முன்னோடிகள், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களை நாம் மறக்க கூடாது. அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட கற்றுக்கொள்ள துவங்கியிருந்த இந்தியா மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்திராத இந்தியாவில், இவர்கள் பெண்கள் என்ற முறையில், அரசியல் சாசன, திறந்த தன்மை கொண்டதாக, நியாயமானதாக, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை தெளிவாக உணர்ந்திருந்தனர்.
பெயரளவிலேனும், இறையாண்மை மொண்ட, சோஷலிச, மதச்சாரபற்ற, ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் இந்த பெண்களின் விலைமதிப்பில்லாத பங்களிப்பை திரும்பிப் பார்க்கலாம்.
இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் பெண்கள்
அம்மு சுவாமிநாதன்
கேரளாவில் இந்து உயர் வகுப்பு குடும்பத்தில் பிறந்த அம்மு சுவாமிநாதன் கல்வியாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். அனைத்து இந்தியர்களுக்குமான சமத்துவத்திற்காக போராடினார். 1917ல், அன்னி பெசனட், மார்கரெட் கசின்ஸ், மாலதி பட்வர்த்தன், திருமதி.தாதாபாய் மற்றும் அம்புமமாள் ஆகியோருடன் இணைந்து சென்னையில் இந்திய பெண்கள் சங்கத்தை உருவாக்கினார்.
காந்தியை தீவிரமாக பின்பற்றியவர் ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அம்முக்குட்டி என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர், இந்திய அரசியல் நிரணய சபை உறுப்பினராக அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்.
1952ல் அவர் மதராஸ் தொகுதியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“சம உரிமை என்பது மகத்தானது, அது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றிருப்பது பொருத்தமானது. வெளியே இருப்பவர்கள் இந்தியா பெண்களுக்கு சம உரிமை அளிக்கவில்லை என்று சொல்கின்றனர். இந்திய மக்கள் தங்களுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொண்ட போது, நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் நிகராக பெண்களுக்கும் சம உரிமை அளித்தனர் என்று இப்போது கூறலாம்,” என்று அவர் அரசியல் சாசனம் தொடர்பான உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பேகம் ஐசாஸ் ரசூல்
அரசியல் சாசன நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் பெண்மணி பேகம் ஐசாஸ் ரசூல். அரசியல் சாசன உருவாக்கத்தின் போது முஸ்லிம்களுக்கான தனி வாக்குரிமையை கடுமையாக எதிர்த்தார். சிறுபான்மையினரை பெரும்பான்மையினரிடம் இருந்து எப்போதும் பிரிக்கக் கூடிய சுய அழிவு ஆயுதமாக இது அமைந்துவிடும் என்று கூறினார். அவர் முஸ்லிம் லீகின் உறுப்பினராகவும் இருந்தார். எல்லாவிதங்களிலும் மேலும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்தியா உருவாக அரசியல் நிர்ணய சபையில் பாடுபட்டார்.
தாட்சாயினி வேலாயுதன்
அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்ற முதல் மற்றும் ஒரே தலித் பெண்மணியாக தாட்சாயினி வேலாயுதன் திகழ்கிறார். தலித் என்ற முறையில் புலையர் வகுப்பைச்சேர்ந்த பெண்களில் முதலில் கல்வி பெற்றவர் மற்றும் மேலாடை அணிந்தவராகவும் திகழ்கிறார். தலித் உரிமைகளுக்காக அவரது போராட்டம் அம்பேத்கரின் போராட்டத்திற்கு நிகரானது.
துர்காபாய் தேஷ்முக்
துர்காபாய் 12 வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். சமூக சீர்திருத்தவாதியாக, மத்திய சமூக நலவாரியம், பெண் கல்விக்கான தேசியக் குழு, பெண்கள், இளம் பெண்கள் கல்விக்கான தேசிய குழு ஆகியவற்றின் தலைவராக இருந்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திட்டக்குழு உறுப்பினரான துர்கபாய், 1936ல் ஆந்திர மகளிர் சபாவை உருவாக்கினார். இந்தியாவில் கல்வியறிவை பரப்பியதற்கான பங்களிப்பிற்காக 1971ல் நேரு இலக்கிய விருது பெற்றார்.
லீலா ராய்
லீலா ராய், முற்போக்காளர், பெண்ணியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. கொல்கத்தா கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அகில வங்காள பெண்கள் வாக்குரிமை குழுவின் துணை செயலாளராக இருந்தவர், பெண்கள் உரிமைக்கான கூட்டங்களை நடத்தினார். தோழிகளுடன் இணைந்து 1923ல் அவர் திபாலி சக்கத்தை உருவாக்கி, முக்கியத் தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறும் இடங்களாக பள்ளிகள் செயல்பட காரணமாக இருந்தார்.
அரசியல் நிர்ணய சபைக்கு வங்காளத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணியாக விளங்கியவர், ஜதிய மகிளா சங்கத்தை தோற்றுவித்தார். பின்னர், இந்த அமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் இணைந்து உண்டான கட்சியின் தலைவராக இருந்தார்.
கமலா சவுத்ரி
கமலா சவுத்ரி, 1946ல் 54வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக விளங்கினார். காந்திய கொள்கையை பின்பற்றி நடந்தவர், சுதந்திரப் போராட்டத்திற்காக பலமுறை சிறை சென்றுள்ளார். இந்தி பெண்ணிய எழுத்தாளராக அறியப்படுகிறார்.
ஹன்சா ஜீவராஹ் மேத்தா
மனித உரிமைகளுக்கான அறிவிப்பு (‘UDHR’) ஷரத்து 1 ல் இடம் பெற்றுள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக, சமமாக பிறந்தனர் எனும் வாசகம், அனத்து மனிதர்களும் சுதந்திரமாக மற்றும் சமத்துவமாக என மாற்றப்படுவதற்கு காரணமாக இருந்தவர். பரோடா திவான் மனுபாய் நந்தசேகர் மேத்தாவுக்கு மகளாக பிறந்த ஹன்சா ஜீவராஜ் மேத்தா, இங்கிலாந்தில் தத்துவம், இதழியல் பயின்றார்.
இந்தியா திரும்பியவர் தனது கல்வியை பயன்படுத்தி மக்களுக்கு கற்பிப்பதில் ஈடுபட்டார் மற்றும் கலிவர் டிராவல்ஸ் உள்ளிட்ட புத்தகங்களை குஜராத்தியில் மொழிபெயர்த்தார். 1945ல் அகில இந்திய பெண்கள் மாநாடு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மாலதி சவுத்ரி
சுதந்திரப் போராட்டத்திற்கான ஈடுபாடு மற்றும் வேகத்திற்காக ’டூபானி’ (toofani) என மகாத்மா காந்தியால் அழைக்கப்பட்டவர், ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியதோடு, அடக்குமுறை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்தார். அவர் நிறுவிய பாஜிரத் சத்ர்வாஸ் போன்ற அமைப்புகள் மூலமாக ஒடிஷாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நலனுக்காக பாடுபட்டார். 1940ல் அரசியல் நிர்ணய சபை முக்கிய உறுப்பினரானார்.
பூர்ணிமா பானர்ஜி
பூர்ணிமா பானர்ஜி தனது சோஷலிச சித்தாந்த்திற்கு விசுவாசமாக இருப்பதன் மூலம், அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அலகாபாத்தின் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் என்ற முறையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். விவசாயிகள் கூட்டங்களிலும் பங்கேற்றவர், கிராமப்புற முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார். அருணா ஆசப் அலியுடன் தொடர்பு உடையவர்.
ராஜ்குமாரி அம்ரித் கவுர்
இந்தியாவின் முதல் சுகாதாரத் துறை அமைச்சராகி வரலாறு படைத்த ராஜ்குமாரி அம்ரித் கவுர் 16 ஆண்டுகள் மகாத்மா காந்தி செயலாளராக இருந்தார். சுகாதாரம் மற்றும் விளையாட்டில் பெண்கள் பங்கேற்பிற்காக குரல் கொடுத்தவர், நாட்டின் முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றான அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS) நிறுவினார்.
ரேணுகா ராய்
ஐசிஎஸ் அதிகாரி மற்றும் சமூக சேவகர் மகளான ரேணுகா ராய், லண்டன் பொருளாதார பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற பிறகு அகில இந்திய பெண்கள் மாநாட்டின் (AIWC) சட்ட செயலாளராக இருந்தார். 1934 ல்,
“இந்தியாவில் பெண்களின் சட்ட குறைபாடுகள்: விசாரணை கமிஷனுக்கான கோரிக்கை” எனும் புகழ்பெற்ற ஆவணத்தை வெளியிட்டு, சட்டத்தின் முன் பெண்களுக்கான நிலை குறித்த பொது தனிநபர் சட்டம் தேவை என வலியுறுத்தினார்.
1952ல், AIWC தலைவரானார். திட்ட கமிஷனிலும் செயல்பட்டார். அகில இந்திய வங்காள பெண்கள் சங்கம் மற்றும் பெண்கள் ஒருங்கிணைப்பு கவுன்சிலிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
விஜயலட்சுமி பண்டிட்
புகழ் பெற்ற சகோதர நேருவின் நிழலில் இருந்தாலும், விஜயலட்சுமி பண்டிட், இந்திய சுதந்திர போராட்டத்திற்கான பங்களிப்பில் தனக்கான் தனித்துவத்தை பெற்றிருந்தார். இந்த போராட்டத்தின் திசையை தீர்மானிப்பதில் பங்காற்றினார். 1936ல், ஒருங்கிணைந்த மாகாணங்கள் சபைக்குத் தேர்வானார். இந்தியாவில் கேபினட் அமைச்சரான முதல் பெண் எனும் சிறப்பையும் பெற்றார். (உள்ளாட்சி சுய நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம்).
சுசித்தா கிருபாளினி
சுசேத்தா கிருபாளினி 1940ல் காங்கிரஸ் கட்சியிஜ் பெண்கள் பிரிவை உண்டாக்கினார். தில்லி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் இந்தியாவின் முதல் பெண் முதல்வராகவும் (உத்தரபிரதேசம்) விளங்கியவர் அரசியல் நிர்ணய சபை, வந்தேமாதிரம், ’சாரே ஜஹான் அச்சா’ மற்றும் தேசிய கீதத்தை இசைக்க வைத்தவராக அறியப்படுகிறார்.
ஆனி மாஸ்கர்னே
ஆனி மாஸ்கர்னே (Annie Mascarene) திருவிதாங்கூர் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினார். திருவிதாங்கூர் காங்கிரசில் இணைந்த முதல் பெண்மணி என்பதோடு, அதன் செயற்குழுவிலும் முதல் பெண்ணாகப் பங்காற்றினார். 1951ல் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர், கேரளாவில் இருந்து முதல் பெண் அமைச்சராக விளங்கினார். சுகாதாரம் மற்றும் மின்சாரம் அமைச்சராக விளங்கினார். (1949-1950. )
சரோஜினி நாயுடு
இந்தியாவின் கவிக்குயில் என அழைக்கப்படும் சரோஜினி நாயுடுவுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் என்பதோடு, முதல் பெண் கவர்னராகவும் விளங்கினார். தனது இலக்கிய ஆற்றலை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக பயன்படுத்து உலக அளவில் கவனத்தை ஏற்படுத்தினார்.
பெண்கள் நலனுக்காக பாடுபட்டவர், இங்கிலாந்தில் பெண்கள் வாக்குரிமை பற்றி ஆய்வு செய்தவர் இந்தியாவில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடினார். இந்திய அரசியல் சாசனத்தில் பெண்கள் வாக்குரிமை மற்றும் அனைவருக்குமான வாக்குரிமை இடம்பெறுவதில் முக்கியப் பங்காற்றினார்.
கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு