#100UNICORNS | ‘யுனிக்’ கதை 37 - Razorpay - பேமென்ட் கேட்வேயில் இரு பாயும் புலிகள்!
பேமென்ட் கேட்வே பிரிவில் பெரும் பாய்ச்சல் காட்டிய ரேஸர்பே நிறுவன பயணத்தையும், இதன் பின்னணியில் இரு இளைஞர்களின் வெற்றிக் கதையும் அட்டகாசமானது.
இந்தியாவின் டிஜிட்டல் சூழல் வளர்ச்சி அடையும்போது, சந்தைப் போட்டியும் அதிகரிக்கிறது. இதனால், தொழில்முனைவோர்கள் வழக்கமான பாதையில் இருந்து மாறி டிஜிட்டல் தொழில் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். தொழில்நுட்பங்களின் உருவாக்கம், புதிய தொழில்களுக்கான சாத்தியங்களை திறந்து, சமகால உலகின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுக்கிறது. இணைய கட்டண (internet payment) வணிகம் அத்தகைய ஒரு துறையாகும்.
பணம் அனுப்புவதில் நாம் மிகவும் முன்னேறிவிட்டோம். பெரிய வரிசையில் நின்று நேரத்தை செலவழித்த காலத்தில் இருந்து விரல் நுனியில் பணம் அனுப்பும் காலத்துக்கு வந்துவிட்டோம். எளிமையான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் பணப் பரிமாற்றச் சேவைகளை வழங்கும் ஏராளமான தளங்கள் உள்ளன.
அத்தகைய தளங்களைப் பற்றி நாம் நினைக்கும்போது முதலில் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று 'ரேஸர்பே' (
). ஆன்லைன் பேமென்ட் கேட்வே நிறுவனம் இந்த ரேஸர்பே. இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான கட்டண பரிமாற்ற வசதிகளை வழங்குகிறது ரேஸர்பே.இந்த யூனிகார்ன் அத்தியாயத்தில் ரேஸர்பே நிறுவனத்தின் பயணத்தையும், இதன் பின்னணியில் இருக்கும் இரு இளைஞர்களை பற்றியுமே பார்க்க இருக்கிறோம்.
ஹர்ஷில் மாத்தூர், ஷஷாங்க் குமார்...
ரேஸர்பே-யின் இணை நிறுவனர் இந்த ஹர்ஷில் மாத்தூர். ஐஐடி ரூர்க்கியின் முன்னாள் மாணவர். மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்று வெளிநாடுகளில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம் அது. வழக்கமான 9 முதல் 6 வரையிலான கார்ப்பரேட் வேலை மாத்தூருக்கு உற்சாகத்தை கொடுக்க தவறியது. ஏனென்றால், தனது வேலையில் தினமும் ஏதேனும் ஒரு சவால் இருக்க வேண்டும் என விரும்பக்கூடிய நபர் ஹர்ஷில் மாத்தூர். சிறுவயது முதலே இந்த ஆர்வம் அவருக்கு எப்போதும் உண்டு.
இந்த ஆர்வத்துக்கு மேலும் விதை போட்டவர் ஐஐடி ரூர்க்கியின் மற்றொரு முன்னாள் மாணவரான ஷஷாங்க் குமார். அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார் குமார். ஆனால் இவரின் பெற்றோருக்கு இவரை சிவில் சர்வீஸ் தேர்வு பக்கம் அனுப்ப வேண்டும் என்பது ஆசை. குமாருக்கு நாட்டம் அதில் இல்லை. மாறாக, அவருக்கான வாழ்க்கை நன்றாக இருந்தாலும், அர்த்தமுள்ள, தாக்கத்தை ஏற்படுத்தும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் இருந்தது.
இதே எண்ணத்தை கொண்டிருந்த மாத்தூரையும் இவரையும் ஒன்றாக இணைத்தது காலத்தின் செயல். ஐஐடி ரூர்க்கியில் ஹர்ஷில் மாத்தூருக்கு ஷஷாங்க் குமார் சீனியர். குமார் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது மாத்தூர் இரண்டாம் ஆண்டு மாணவர். கல்லூரியில் படிக்கும்போது தனது புத்திசாலித்தனத்தால் மாணவர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார். இருவரும் ஒரு புராஜெக்ட் விஷயமாகத்தான் முதன்முதலில் சந்தித்தனர். அப்போது மாத்தூர் காண்பித்த ஆர்வம் குமாரை வெகுவாகவே கவர்ந்தது. அதே ஆர்வம் தான் கார்ப்பரேட் வேலையை விடுவதிலும் இருந்தது. மாத்தூர் ஷ்லம்பெர்கரில் பணிபுரிந்த சமயத்தில் தான் இருவருக்கும் கார்ப்பரேட் வேலையில் ஒருவித சோர்வை உணர்ந்ததை விவாதிக்க தொடங்கினர்.
அப்போது இருவரும் தங்களது சைட் புராஜெக்ட்டில் பணிபுரிந்துக் கொண்டிருந்தனர். அது மருத்துவ உதவிகளுக்காக மக்கள் நன்கொடை அளிக்கும் தளத்தை உருவாக்குவது. அப்போதுதான், மற்றொரு பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) ஆன்லைனில் ஆர்டர்களுக்கு பணம் செலுத்துவதற்கு சிரமப்பட்ட காலம் அது. இதில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்த இருவரும் தீவிரமாக இதுகுறித்து சிந்திக்க தொடங்கினர். இதிலிருக்கும் தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க விரும்பினர்.
அதற்கான ஐடியாவுடன் பல வங்கி கதவுகளையும் தட்டினர். ஐடியா மெருகேறியது. வங்கி படிகளில் ஏற வேண்டி இருந்ததும் அதிகமானது. கிட்டத்தட்ட 100 வங்கிகளை தொடர்புகொண்டும் நிராகரிப்பும் ஏமாற்றமும் மட்டுமே கிடைத்தது. அந்த சமயத்தில் ஹெச்டிஎப்சி வங்கி மேலாளர் ஒருவரை இவர்களின் ஐடியா ஈர்த்தது. அவ்வளவு தான் தனக்கான வழி கிடைத்துவிட்டது என சொகுசு வேலையை முதல் பணியாக துறந்தார் மாத்தூர்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வேலையை ராஜினாமா செய்த பிறகே அந்த தகவலை குமாருக்கு சொல்லியுள்ளார். அந்த அளவுக்கு ஐடியா மீது ஆர்வம். மாத்தூர் வேலையை ராஜினாமா செய்த இரண்டு மாதங்கள் பிறகே குமாரும் வேலையை துறந்தார். இதன்பின் இந்தியா வந்த அவர்கள் 2014-ல் ரேஸர்பே நிறுவனத்தை தொடங்கினர்.
ரேஸர்பே புரட்சி
ஃபின்டெக் பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேஸர்பே, தற்போது இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் பேமென்ட்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் செயல்படுத்துகிறது. கடன்கள், வங்கி கணக்கு பராமரிப்பு, கிரெடிட் கார்டுகள் வசதிகள் மற்றும் காப்பீடு என அனைத்தையும் வழங்குகிறது.
மேலும், சுமார் ஐந்து மில்லியன் SME, MSME நிறுவனங்களுக்கும், Flipkart, Zomato, Airtel, BookMyShow மற்றும் Swiggy போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் பார்ட்னர். யுவர் ஸ்டோரிக்கு பேட்டியளித்த ஹர்ஷில் மாத்தூர் கூறியது,
“2012-2013 ஆண்டு வாக்கில், ஃபின்டெக் தொழில்துறையின் பேமென்ட் கேட்வே பிரிவில் பெரிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தின. இவற்றின் மூலம் பெரிய ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்கள் போன்ற பெரிய வணிகங்கள் மட்டுமே பேமென்ட் கேட்வே வசதிகளைப் பெற்றன. அதேநேரம் சிறு, குறு நிறுவனங்கள் ஆன்லைன் பணம் செலுத்துதலில் சிக்கல்களை எதிரிகொண்டன. எனவேதான் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் சிக்கலை தீர்க்க, அவர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க விரும்பி ரேஸர்பே-வை தொடங்கினோம்,” என்று தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது நடந்தது. எம்எஸ்எம்இ செக்டாரில் ரேஸர்பே புரட்சியை தொடங்கி வைத்தது. அனைத்து தொழில்களிலும், அனைத்து விஷயங்களிலும் சவால்கள் இருந்தன. சவால்களை திறம்பட சமாளிக்கும் அதேவேளையில் புதுமையை கொடுப்பவர்களே நிலைத்து நிற்பார்கள். அதனை மாத்தூர் - குமார் கூட்டணி நன்றாக உணர்ந்திருந்தது.
பேமென்ட் கேட்வே களத்தில், மற்றவர்கள் பணம் செலுத்தும் முறையை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, ரேஸர்பே ஒரு புதிய சலுகையைக் கொண்டு வர முனைந்து, அதன்படி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமைகளை கொண்டுவந்தது. எடுத்துக்காட்டாக, KYC பூர்த்தி செய்ய மற்றவர்கள் காகித ஆவணங்கள் செயல்முறையை கடைபிடிக்க, முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி KYC பூர்த்திசெய்யும் முறையை அறிமுகப்படுத்தியது ரேஸர்பே நிறுவனமே. UPI பேமென்ட்களுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது வரவேற்றதும் இதுவே.
கோவிட்-19 காலத்தில் வளர்ச்சி...
கொரோனா பெருந்தொற்று பரவியபோதும், ரேஸர்பே நிறுவனம் வளர்ச்சி கண்டது. கோவிட்-19 டிஜிட்டல் வணிகத்தை மேலும் வலுப்படுத்த, அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி ரேஸர்பே ஆறு மாதங்களில் 300 சதவீத வளர்ச்சியை பெற்றது. போதாக்குறைக்கு சிங்கப்பூரின் GIC நிறுவனத்தின் 100 மில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்க ரேஸர்பே யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது. Salesforce Ventures, GIC, Ribbit Capital, Tiger Global Management, Mastercard மற்றும் Lone Pine Capital போன்ற நிறுவனங்கள் ரேஸர்பேவின் முக்கிய முதலீட்டாளர்கள்.
முதலீடுகள் பெருக, சேவையும் பெருகியது. பேமென்ட் கேட்வே என்பதிலிருந்து பல சேவைகளை வழங்கத் தொடங்கியது நிறுவனம். அதன்படி, RazorpayX, RazorpayX Payroll (Opfin) எனப்படும் ஊதிய மேலாண்மை தளம் மற்றும் கடன் வழங்கும் தளமான Razorpay Capital ஆகியவை ரேஸர்பே வழங்கும் மற்ற வசதிகள். ஒரு காலத்தில் சராசரி யோசனையாகக் கருதப்பட்டு 100 வங்கிகளால் நிராகரிக்கப்பட்ட
பெங்களூருவை தளமாகக் கொண்ட ரேஸர்பே ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மதிப்பு என்பது யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற பிறகு சுமார் $7.5 பில்லியன். இந்திய மதிப்பில், சுமார் ரூ.63,000 கோடி.
ஆரம்பித்தில் இருந்து இத்தனை ஆண்டுகளில் எந்தவித சுணக்கமும் காண்பிக்கவில்லை ரேஸர்பே. மாறாக, கோவிட் காலத்தில்கூட அதிகமான பணியாளர்களை வேலைக்கு நியமித்து புதிய புரட்சியை ஏற்படுத்தியது.
OYO, Zomato மற்றும் Swiggy, தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அரசு நடத்தும் IRCTC போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 350,000க்கும் வாடிக்கையாளர்கள், ஆண்டுதோறும் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகள் என வீறு நடைபோட்டு வருகிறது ஹர்ஷில் மாத்தூர் மற்றும் ஷஷாங்க் குமாரின் ரேஸர்பே.
யுனிக் கதை தொடரும்....
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 36 - CARS24: விக்ரம் சோப்ராவின் விடாமுயற்சியில் தோனி முதலீட்டில் உருவான யுனிகார்ன்!